என் பாட்டிக்கு ஓர் கவி

என் பாட்டிக்கு ஓர் கவி
தள்ளாத வயசுலையும் தள்ளாடா
நடை கொண்டிருந்தவளே

படை சூழ வாழும் கோமகனைப் போல்
பேரக்குழந்தைகள் சூழ வாழ்ந்தவளே

தெரு விளக்கு வெளிச்சத்தில்
சோறு ஊட்டியவளே – அதே
தெரு விளக்கை நோக்கி
வரும் ஈசல்களை பிடித்து
வருத்து ஊட்டியவளே

குழந்தைப் பருவக் கால நினைவுகளில்
உன்னுடனிருந்த நாட்கள் தான்
அதிகமாக என் ஆழ் மனதில்
ஆழமாய் அச்சாரமிட்டுள்ளது

அன்று நீ காட்டிய கழனிக்
காட்டு வழி மாறிவிட்டது
ஆனால் அன்று நீ காட்டிய
நற்குணங்கள் - இன்றும்
மாறாமலும் மறக்காமலும்
இருக்கிறேன் உன் பேரன் நானே

என் தாய் எனக்கு
என் தாய் எனக்கு சோறு
ஊட்டியது நினைவில் இல்லை
ஆனால்,,,,,
ஆனால்,,,,,
நீ அன்று பனங்கன்றை அருவாளால்
தோண்டி எடுத்து ஊட்டிய
பனஞ் சோற்றையும் மறக்கவில்லை
அச் சோற்றின் சுவையையும்
என் நா மறக்கவில்லை

வைகறையில் சோறு!
வைகறையில் சோறு!
வைகறையில் சோறு என்றால்
வையும் காலம் இது – ஆனால்
நீயோ அன்று வைகறையில்
சோறு என்றதும் சட்டியிலிருந்த
பழைய சோற்றுடன் நிலக்
கடலைச்சேர்த்து ஊட்டியது
இன்றும் என் நினைவிலிருந்து
அகலவில்லை

என் தாயுடன் நடந்தது நினைவில் இல்லை
ஆனால் உன் கை விரலையும்
முந்தானையையும் பிடித்து
ஐயனாரப்பன் கோயில் திருவிழாவிற்கு
சென்றதும் அத்திருவிழாவின்
வீதிக்கடைகளில் நீ வாங்கிக்கொடுத்த
ப்ளசரையும் மறக்கவில்லை - நான்
திருடிய ப்ளசரையும் மறக்கவில்லை
பேரன் திருடியதைக் கேட்டு
புன்னகையிட்ட உன் அகத்தையும்
மறக்கவில்லை

அறியா வயதில் திருமணமாகி வந்த
என் தாயை மருமகளாயின்றி
மகளாய் போற்றி வாழ்வியல்
பயிற்று வாழ்வளித்த தூயோல்
செல்லம்மாள் என்று என்
தாய் உன் புகழ் பாடுவதை இன்றும்
கேட்டுக்கொண்டிருக்கிறேன்

அன்று நீ தட்டி தந்த முருங்கக்கீரை
அடையையும் மறக்கவில்லை – அதே
முருங்கை மரத்தில் நீ இறுதி
அடைக்களம் தேடியதன் செய்தி கேட்டு
வந்து உன் சடலத்தின் அருகில் செய்வது
அறியா குழந்தை பருவத்தில் அழுகையின்றி
ஊரார் அழுவதைக் கண்டு நானும்
அழுவது போல் நடித்தேன்
அன்று - ஆனால் இன்றோ என்
கண்களில் நீர் ததும்ப எழுதுகிறேன்
செல்லம்மா என் தகப்பன் தாயே
என் குலவிளக்கே

இன்று என் மகன் என் தாய்
என்று வருவாளென
பாசத்துக்காக ஏங்குவதைக்கண்டு
உன் மீது நானும் என் மீது நீயும்
வைத்திருந்த பாசம் நினைவில் வர
அந்நினைவுகளே இக்கிறுக்கலானது
என் பாட்டி செல்லம்மாள்
அண்ணாமலையே

=== க. பிரபு தமிழன்

எழுதியவர் : க.பிரபு தமிழன் (12-Aug-15, 12:04 am)
Tanglish : en paattiku or kavi
பார்வை : 210

மேலே