கவிதை எழுதுவோம் வாருங்கள்

சினிமா கவிதை சில
தேமாவில் தொடங்கி புளிமாவில் முடிய
காரணம் கைச்சத்தமா, இசைசந்தமா

கம்பனை போல் கவித்துவம் உண்டா இன்று
இளங்கோ போல் யாரும் இயற்றுவதேனும் உண்டா
பாரதி பாட்டு இன்று உண்டா
கண்ணதாசன் பாரதிதாசன் சாயல் எங்கே?

மொழியின் மகத்துவம் நேற்றைய சரித்திரம் நடையும்
இசையும் கருத்தும் கவித்துவமும் காவிய தரிசனம் இன்று
பள்ளிகளில் பாடமாக அந்த காவியங்கள் பார்க்கப்படுவது
நன்றாகவே தெரிகிறது ஒரு பாவமாக

ஈடுபாடு எதில் மதிப்பெண்ணிலா மனப்பாடத்திலா யாராவது சொல்லுங்கள்
எந்த மாணவன் சொந்த நடையில் ஒரு பா எழுதினான் என்று
கம்பனைப்போல் வள்ளுவனைப்போல் பாரதி போல் இல்லையே
இந்த நிலை நீடித்தல் எவ்வாறு நாளைய தலைமுறைக்கு வழி காட்டும்

சந்த கவிதை தொலைந்து போனது புதுக்கவிதை புகுந்தது
எஞ்சி இன்று நிற்பது இசையெனும் சந்தமும்
கருத்தெனும் முகமும் இல்லாமல் இங்கே
அனாதையாய் சினிமா கவிதை மட்டுமே.

எழுத்துக்கள் மாறின, சமாதானம் சொல்லிக்கொண்டதும்
வார்த்தைகள் மறந்தன ஆங்கிலம் ஆட்கொண்டதும்
தமிழ் ஒரு வேற்று மொழியாய் பார்க்கப்படுகிறது
அல்லது பாவிக்கப்படுகிறது பள்ளிகளில் கல்லூரிகளில்

தூணாக இனத்திற்கு இருந்த ஒரு மொழி
இன்று துணை தேடி தவிப்பது யார் குற்றம்
தமிழின் அருமை மறந்து தாயின் அருமை மறந்தவர்களால்
மொழியுணர்வு இழந்து முகத்தை மறைத்து போகிறவர்களால்

இந்த தலைமுறைக்குப்பின் இனி வரும் தலைமுறைகளால்
பட்டிமன்றங்கள் கூட பட்டுப்போகும்.
எழுத்துக்கள் மறையலாம் வார்த்தைகள் மறக்கலாம்
செம்மொழியாம் தமிழ் மொழியை சிந்து சமவெளி
நாகரிகத்திற்கு முன் தோன்றிய மூத்தகுடியின்
பெருமை பேசும் அரிய தமிழ் அறிவோம்
ஆசைத் தமிழ் தரும் ஆனந்தம் அடைவோம்

இன்று முதல் ஒவ்வொரு வீட்டிலும் கவிதை எழுதுவோம்.
கம்பனைப்போல் கவித்துவமாக, காரணித்துவமாக.
நகரெங்கும் இனி நக்கீரன் இருக்கட்டும் நம் வடிவில்.

பி,கு:
நாற்றம் என்றால் நறுமணம் என்ற வார்த்தையை
மறக்கடித்த பேச்சுத்தமிழ் மீதும் கவனம் தேவை.

எழுதியவர் : செல்வமணி (12-Aug-15, 1:37 am)
பார்வை : 148

மேலே