இன்று நல்லது நடக்கப் போகிறது

சபிக்கப்பட்ட அன்றைய தினத்தில்
களவு போன என் கனாக்களைத் தேடி
தவித்துத் துடிக்கும் உள்ளத்தைத் தேற்றிட
வெளுக்கப்பட்ட தெருக்களில் நடந்தேன்.
ஒளிராமல் ஒளிரும் மின்விளக்கொளியில்
தோலுடன் உளுந்து கொட்டிக் கிடப்பதாய்
வண்டுகள் இறந்து கிடப்பதைக் கண்டேன்.
தட்டி கவனத்தை தம்பால் ஈர்த்திட்ட
வெட்டுக் கிளிகளும் வீணே பறந்து.
நெட்டைத் தூண்களைக் கடந்து கம்பிக்
கால்களால் மங்கிடும் குழல் விளக்கினை
நெட்டித் தள்ளிடும் முயற்சியில் தோற்று
’டிக்டிக்’ நொடிகளை மெல்ல நகர்த்தின.
.ஏதோ ஒன்று இன்று நடக்கப் போகிறது
என்ற எனது உள்ளுணர்விற்குப் பதிலாக
இடியோசை முணுமுணுப்பாய் காதில் வீழ
நடிப்பது எனக்கும் கொஞ்சம் தெரியுமென
தூறலைப் போட்டு நின்றது மழையும்;
சோகங்கள் வடியும் சல்லடை மனதில்
படிக்கல்லாய் சமைந்து அசையாது இருந்த
உருவம் நீயென்னை விட்டு விலகிய
வருத்தத்தை அத்தூறல் அழித்துச் சென்றது

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (12-Aug-15, 1:01 pm)
பார்வை : 108

மேலே