சாமி

இறைச்சி கொழுப்புகளின்
ருசியற்ற சமைக்காத வாடைகளில்
புத்தன் சுவாத்திருக்கக் கூடுமென
போதிமரங்கள் பேசிக்கொள்கையில்
அதன் வேர்களின் மண் கீறிய திமிரலில் சில கால்கள் தடுக்குவதாக
திரும்புகின்றன..

அவிழ்ந்த சிறுமலர் நறுமணங்களில்
இன்னும் மெல்லியதாய் நபிகள்
புன்னகைத்து அமர்ந்திருந்தாரென
பிறை சூழ்ந்த நட்சத்திரமொன்று
சொல்லி ஜொலிக்கையில்
ஐந்து முனைகளிலொன்று
சில காதுகளை தைக்கிறது...

ஒரு கன்னமென்பது உங்கள் நம்பிக்கையெனவும்
இன்னொரு கன்னமென்பது உங்கள் பொறுமையெனவும்
இயேசு மொழிந்தார் என சிலுவையொன்று
உபதேசிக்க சில கைகள் கோடரியை ஓங்குகின்றன..

அன்பிற்கு படைக்கப்பட்ட யாவும்
அன்பிற்கே என இறைச்சியை இராமர்
சுவைத்தார் என்று உரைத்த உதடுகளை
சில காகிதங்கள் மூடிவிட்டு
முறைக்கின்றன...

வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் என்பதும்
எங்களுக்கான மந்திரமென்னும்
மனிதம் மறந்த தலைகளையும்
கணக்கில் சேர்த்து
மக்கள்தொகை காட்டும் புள்ளிவிவரங்கள்
பிழையென முனை மழுங்காத பேனா ஒன்று
மீசை வரைந்துவிட எளிதாகவே அழித்துவிடுகிறது சாமி....
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (13-Aug-15, 9:25 am)
Tanglish : saami
பார்வை : 86

மேலே