சாடல் புரியுது
கடல் கொள்ளா அலைகள்
கரை தேடுது
நீர் கொள்ளா மேகங்கள்
மழை ஆகுது
நிலை கொள்ளா காற்று
சுழல் ஆகுது
திரை கொள்ளா காட்சிகள்
நிஜம் ஆகுது
தளம் கொள்ளா எழுத்தும்
கவி ஆகுது
வளம் கொள்ளா நிலங்கள்
வீண் ஆகுது
வாசம் இல்லாப் பூவும்
வடிவு ஆகுது
பாசம் இல்லா உறவு
வேஷம் ஆகுது
பாகம் இல்லா சொத்தும்
இல்லை ஆகுது
பயிற்சி இல்லா நடனம்
கூத்து ஆகுது
பருவம் இல்லாக் காதல்
பகிடி ஆகுது
தோல்வி இல்லா போட்டி
சமம் ஆகுது
நீதி இல்லா தீர்ப்பு
அநீதி ஆகுது
ஆழம் காணும் கடல்
சுனாமி ஆகுது
அல்லல் இல்லாக் குடும்பம்
இன்பம் காணுது
ஆசை இல்லா உள்ளம்
அமைதி காணுது
நம்பிக்கை இல்லா உள்ளம்
நலிவு கொள்ளுது
நாணம் இல்லா வாழ்க்கை
நகைப்பு ஆகுது
மனிதம் இல்லா உள்ளம்
மிருகம் ஆகுது
மழை இல்லா பூமி
மலடு ஆகுது
அர்த்தம் காணும் வரிகளில்
கவிதை தெரியுது
கவிதை தெரியும் சாயலில்
சாடல் புரியுது