அந்தத் தொலைக்காட்சி விளம்பரம்
அந்தத் தொலைக்காட்சி விளம்பரத்தை
நீங்கள் பார்த்திருப்பீர்கள்
பக்கோடா சாப்பிட்டுக்கொண்டோ
குருமாவிற்கு உப்புக் குறைவு என்று
மனைவியிடம் இரைந்துகொண்டோ
சுற்றிலுமிருக்கும்
அந்த விவசாய நிலம்
தனது தொழிற்சாலைக்கு
மிகப் பொருத்தம்
என்றொரு தொழிலதிபர்
கிராமத்துப் பெரியவரிடம்
சிலாகிப்பதாகத் தொடங்கும்
விளம்பரம் அது
ஆம் அதேதான்
இங்கே
ஆங்கிலம் பேசும்
மேலதிகாரிகள் கிடைப்பார்களா
என்கிற
அத்தொழிலதிபரின் எகத்தாளக் கேள்விக்கு
சாட்டையடிக்கும் விதமாக
கூட்டத்தைப் பிளந்துகொண்டு வருவாள்
பளீரென்று ஒருத்தி
புத்தகத்தின் தரத்தை
அதன் மேலட்டையைக் கொண்டு
மதிப்பிடாதீர்கள்
என்று கூறிக்கொண்டே
நல்ல விளம்பரந்தான்
ஒரு விவசாய நிலத்தை
தொழிற்சாலை ஆக்குகிறது
ஆங்கிலம் பேசுபவனே தரமானவன்
என்கிறது
இந்திய கிராமங்கள்
புத்தகத்தின் சுமாரான
மேலட்டை போன்றவை
என்றொரு கருத்தையும்
முன்வைக்கிறது அர்த்தபுஷ்டியுடன
இத்தொலைக்காட்சி விளம்பரத்தை
இன்னும் இன்னும் இன்னும்
மயிரே போச்சென்று
நாம் பார்த்துக்கொண்டேதான் இருப்போம்
பக்கோடா சாப்பிட்டுக்கொண்டோ
குருமாவிற்கு உப்புக் குறைவு என்று
மனைவியிடம் இரைந்துகொண்டோ