எரிதழல் வீழின் 5 -கார்த்திகா

//கூர் வாளை விடவும்
வலியவை சொற்கள்//

ஒருவர் பேசும்போது அவரைப் பற்றிய நல்ல எண்ணங்கள் வலுப் பெறுகின்றன..இல்லையென்றால் சொற்களின் மேல் நம்பிக்கையின்றிப் போய்விடுகிறது..

நாம் பேசும் வார்த்தைகள் மற்றவர் மனதினை புண்படுத்தாமல் இருத்தல் மிக அவசியமே...உங்கள் கோபமும் வெறுப்பும் ஒன்றாய்க் கலந்திடல் நல்லதன்று...கோபம் வேறு..வெறுப்பு வேறு..

//ஒருமுறை தவறும்போது
வரும் கோபம்
வெறுப்பாய் பல தவறுகளில்//



வெறும் அற்ப சந்தோசத்திற்காக அடுத்தவர் உடை,உடல்,மனம் இன்ன பிற பற்றி விமர்சித்தல் நன் மாந்தருக்கு அழகன்று..

//மற்றவர் செய்கைகள்
குண நலன்களைப் பற்றிய
விமர்சனங்கள் தேவையற்ற ஒன்று

அடுத்தவர் மனம் நோக விமர்சித்து
சிரிக்க என்ன உரிமை
உனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது?

உன்னை மட்டுமல்ல
யாரையும் நோகடிக்க
யாருக்கும் உரிமை இல்லை //



செய்கைகளில் தோற்றத்தில் மாறுபட்டவர்கள்
நகைச்சுவைக்கு உரித்தானவர்கள் என்றால்

மற்ற எல்லோரையும் போன்று
காப்பியடிக்கும்
ஒரே குட்டையில் ஊறிய
மட வாத்துக்களை
என்ன சொல்லி நகைப்பது?



//உன்னைப் போல்
ஒருவனிருந்தால்
என்னைப் போல்
ஒருவனிருக்க வேண்டுமென்று
எந்த விதியுமில்லை!!//



//உன் கேலிப் பேச்சுகளுக்கு எல்லாம்
ஒருவனின் விடை புன்னகையாய் இருந்தால்
மிகக் கவனமாய் இரு

உன்னை அதில் வைத்து
அர்த்தப் பட்டு
உள்ளுக்குள் நகைக்கிறான்

வெளியே வெட்டிப் பேச்சில்
நாடகம் அரங்கேற்றும் நீ
கேலிக் கூத்தாய் அவனில் !//


//சொற்களின் புரிதல்
வலுப்படுவது
பேசுபவர்களின் செய்கைகளில் ..

கிண்டல் கேலிகளால்
சோர்ந்து போவது
இடிக்கு அஞ்சி
மழையை ஒளித்து வைக்க
நினைப்பது போன்றது..

யாரொருவர் அதிக
விமர்சனங்களுக்கு ஆளாகுகிறாரோ
அவர் நிச்சயம்
வளர்ந்து கொண்டிருப்பார்!

உன்னைப் பற்றிய
செய்திகள் வரவில்லை என்றால்
நீ மறக்கடிக்கப் படுவாய்

மறந்து போவது
மரித்ததற்கு சமம்//




எந்த விமர்சனங்களோ
கேலிச் செய்திகளோ
உன்னை நோக்கி வருகிறதென்றால்
நீ கண்காணிக்கப் படுகிறாய்
உன் செய்கைகள்
அளக்கப்படுகின்றன
நீ மேலும் தீட்டப்படுகிறாய்..

விமர்சனங்களை வரவேற்று
சிரித்து திருத்தி வை
உன் தகுதிக்கு
விளம்பரம் தேவையிராது..
புகழ் ஓங்கும்
முயற்சி தவறாத நிமிடங்களில்!!


-மீண்டும் எரியும்

எழுதியவர் : கார்த்திகா AK (14-Aug-15, 1:51 pm)
பார்வை : 481

சிறந்த கட்டுரைகள்

மேலே