அண்ணா நகர்

அழகாக சிறுவீடு கட்டி
ஆனந்தமாய் வாழ்ந்தவர்
ஆங்காங்கே இடித்ததனை
எழுப்புகிறார் அடுக்குமாடிதனை
வீடுகள் பல மறைந்து
வணிக வளாகங்கள் முளைத்தது
அண்ணாந்து பார்த்தே எமது
அண்ணாநகரை வியக்கிறேன்!


இடிவாங்கித் தப்பிய இனிய
'அண்ணா வளைவு' முகப்பும்
நேர்கோட்டுச் சாலைகளில்
நிழல் தூவும் மரங்களும்
நெடுந்துயர் கோபுரமும்
நேர்தியான பூங்காவும்
நிறைந்த எங்கள் நகரில்
நிம்மதியாய்த் தானிருந்தோம்

முகப்பிலும் முடிவிலும்
முடியாத மேம்பாலங்கள்
தவிக்கும் மக்கள் துயர்கூட்ட
பாதாள ரெயில்பணி இன்னல்கள்

நேர்கோட்டில் சென்றவர்கள்
நெளிந்து நெளிந்துஊர்கின்றார்
பத்தடி தூரம் சென்றடைய
பலபாதை மாறுகின்றார்

ஊர்ந்து நெளியும் வாகனத்தால்
ஊழிக் கரும்புகை எங்கும்
தீராத பிணிகள் தந்திடும்
தூசி புகை மண்டலமும்

பிணி நீக்க இங்கே பல
மருத்துவர் உண்டு கல்வி
கண்திறந்து கறையேற்ற
பள்ளிகளும் பல ஏராளம்

அரசு உயர் பதவியாளர்களும்
அரசியல் புரட்சியாளர்களும்
அலங்கரித்தே குடியிருக்கும்
அருமை நகரும் இதுவே

இத்தனை இருந்தும் இன்று
ஏங்கியே தவிக்கின்றோம்
என்று முடியும் இப்பணிகள்.
என்று தணியும் எம்பிணிகள்
----- முரளி

எழுதியவர் : முரளி (14-Aug-15, 8:16 pm)
Tanglish : ANNAA nakar
பார்வை : 126

மேலே