நிலம் விழுங்கிகளின் நிட்டூரத்துக்குள் நிம்மதி

அடர்ந்த இருட்டுக்குள் ஒரு குப்பி விளக்கு
ஆனந்த நிலா அது
கூட்டான் சோறின் சுவை மீண்டும் நாவிலிருக்கு
பாட்டன் பாட்டியின் பழைய கதையுமிருக்கு
அந்த நாட்கள் எம்முள் அலாதியாயிருக்கு

அபிவிருத்தி என்ற ஏமாற்ற
அரங்கத்தில் மின் விளக்குகள்
பௌர்ணமிகளாக பாதைகள்
அட்டமியாக அச்சம்
வாழ்க்கை எந்நாளும் அமாவாசை
எமக்கென்று இங்கு என்ன இருக்கு

வாழ வழிவகுத்த வானோர்கள்
வாழும் இடம் எங்கே ?
அதனருகே செல்ல புல்லரிக்கும் தேகமெங்கே?
திரவியங்களின் வாசனை
தீண்டும் எம் மனங்களை

வட்டமேசைக்காரர்களே உங்கள்
சட்டைப்பையை தடவுங்கள்

காணமல் போனோர்களின்
நிழல் படங்கள் தென்படும்
அவர்களை கொஞ்சம் தேடிப்பாருங்கள்

கூட்டம் கூட்டமாக இருந்த இடங்களில்
தொட்டம் தொட்டமாக வாழ வதிவிடமில்லை

பலா பட்டமிட்டு உலா வந்த நிலத்தில்
மிதிவெடி அபாயம்

கோயிலின் கருவறைக்குள்
மனித எலும்புகள்
மாசடைந்து போனது புனித தலங்கள்

சோலை புரியை சுடுகாடாய் மாற்றிய
சுடலை மனிதர்கள்
இன்றும் வாழ்கின்றார்கள் அங்கே

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (15-Aug-15, 7:18 pm)
பார்வை : 111

மேலே