ஊருக்குத் திரும்புதல்
பழகிய ஊருக்குப்
பாதையில்லை.
பாதைதேடி வரைபடம் பிரித்தால்
பிஞ்சென்றும் மூப்பென்றும்
பார்க்கவொண்ணா குருதி
உறங்கும் பிணவாடை
பயணவழி வரைபடமெங்கும்.
எதிர்மறிக்கும்
கானல் வரி
எத்தாகமும் தீர்க்க முன்வராது
சோகம் காட்டும்
கண்ணீர் உகுக்கும்.
முள்கம்பி பொத்திய கூண்டுக்குள்
கபால ஓடுகளின் ஊடே
மறைந்து கிடக்கிறது
சிறுகிளை தாழ்த்தி
தாலாட்டி வளர்த்த
புங்கை மரங்களடர்ந்த
இளம்பிராயம்.
மரங்களுமில்லை
மனிதர்களுமில்லை
இனி -
மரிக்க மரணமுமில்லை.
தம்மபத வாசிகளின்
ஒரு கையில் புறாக்கறி
மறுகையில்
பச்சைக் குருதி வழியும்
கோப்பை.
கால்களுக்கடியில்
சாயம் வெளுத்த
மூவர்ணக் கொடியிலிருந்து
வெளியேற எத்தனிக்கும்
ஆரங்களுடைந்த தர்மச்சக்கரம்.
உச்சரிக்கவோ
எழுதிக்காட்டவோ கூசும்
தடித்த வாய் வார்த்தைகளின்
இடைவெளியில்
அடிக்கடி எழுகிறது
"வாழ்க பாரதம் ! வாழ்க மானுடம் !!"
வரமோ சாபமோவற்ற
ஏதிலிகளையொத்து
வெறுமையின் ஒப்பாரியில் நீள்கிறது
ஊருக்குத் திரும்பும்
பயணவழிப் பாதை.