மரணத்தின் வாசகன்

பெளர்ணமி
இரவில்
பனித்துளிகளை
ஏந்தும் கூந்தலில்
பனித்திருக்கும்
குட்டி குட்டி
நிலாக்களை
கொலைசெய்கிறாய்
உன் தலைகோதி!!

விசாரித்துப்போகும்
மேகங்களுக்கு
நகம் கடித்தபடி
மொட்டைமாடியில்
குழந்தையாகிறாய்..
தென்றலை திருடி
மார்பிடுக்கில்
புதைத்துக்கொண்டு!!!

மெல்லிய‌
புன்னகையோடு
மின்மினி தேடி
தோற்றதை
ஏற்காமல்
உதடுசுழிக்கிறாய்
ஓர் நட்சத்திரம்
கழன்றுவீழ்கிறது!!

கொஞ்சம்
கொஞ்சமாய் என்
உயிரணுக்களில்
பறவையின்
மரபணு செலுத்தி
முளைத்த சிறகில்
பிரபஞ்சம் துளியென‌
உணர்த்தினாய்...

பின்னொரு நாள்...

பிரிவெனும்
சிறையில் என்
இறக்கை பிடுங்கி
உயிர் பிழிந்து
உன் உருவம்
மறைத்தாய்!!

பிரபஞ்ச துளி
பஞ்சமில்லா
அலைகளோடு
சமுத்திரம் ஆயிற்று!!

கொடிய இரவுகளோடு
கொஞ்சம் கவிதை
கொடுத்து போனவளே!!

நிகழ்ந்திருப்பது
அறியாமல்
உனக்காக‌
காத்திருப்பதில்
இந்த ஜென்மம்
கவிதையோடே
கரையும் போலும்...

எழுதியவர் : புலவூரான் ரிஷி (19-Aug-15, 12:39 am)
Tanglish : maranthin vaasagan
பார்வை : 146

மேலே