நினைவில் விழித்திருக்கிறேன்

இரவு விழித்திருந்து
பகலை தாலாட்டும்
இந்த நடுநிசியிலும்
என் விழிகள்
உன் உருவத்தை தாலாட்டுகிறது

என் துாக்கம்
துளையிடப்படுகிறது
உன் நினைவு இயந்திரத்தால்

மூடு பனி உடலில்
ஊசி போடும் என்பதால்
குளிர் திரவம்
உடலில் நுழைந்து விடாமல்
தடித்த கம்பளிக்குள்
உடலை புதைத்தேன்

நுளம்புகள்
இரைந்து கரைந்து கனகனக்கும்
ஓசை காதில் விழுந்ததும்
தூக்கம்
தொலைந்திடாமல் இருக்கவேண்டி
முன்னேற்பாடுகள் செய்தேன்

இரவு எல்லோரினதும்
தாலாட்டுத் தாய் என்பதால்
உறக்கத்தோடு
உறவு கொள்ள நினைத்து
படுக்கையறையில்
பாய் விரித்தேன்

எங்கோ ஓர் இடத்தில்
உன்னையும் இரவு தாலாட்டக்கூடும்
நீ அங்கு
தூக்கத்தோடு தொலைந்து
நிம்மதி வானில் சிறகடித்து
இரவின் உருவாக்கத்தை அனுபவிக்கலாம்
ஆனால் நானோ இங்கு
இந்த நடுநிசியிலும்
உன் நினைவில்தான் விழித்திருக்கிறேன்

எழுதியவர் : மிஹிந்தலைஏ.பாரிஸ் (19-Aug-15, 12:18 pm)
பார்வை : 112

மேலே