ஸ் சப்தமிடாதீர்கள்

நதிகளே!

பூமியின்
இரத்த நாடிகளே!
இப்போதேனும்
மெளனித்திருங்கள்...

அலைகளே!

சமுத்திரத்தின்
வெண்மேக
திரட்சிகளே!!
வேகமாய்
ஓய்வெடுங்கள்....

கிரகங்களே!

ஒற்றைச்சூரியனை
கட்டிப்பிடித்தலையும்
மந்திக்கூட்டங்களே!!
சுழற்சி நிறுத்துக....

ஆயுதங்களே!

பிணங்களின்
உடம்பில்
ஒட்டித்திரியும்
உண்ணி ஜீவிகளே!
ஓர் கணம் பொறுங்கள்!

கைபேசிகளே!!

அணுவுலை வீசி
குருவிக்கூடழிக்கும்
குஞ்சு பிசாசுகளே
பிதற்றாதீர்...

ஏய் நிசப்தமே!!

சுடுகாட்டில்
உறங்கி கிடக்கும்
சாம்பல் மேடே!!
உலகத்தை
அணைத்துக்கொள்....

என் உலகத்தின்
ஒற்றைத்தேவதை
விழிகளெங்கும்
தூக்கச்சாயம்
பிழிந்துபோகிறது
தென்றல்...

அவள்
தூக்கம் கலையும்
வரையிலாவது
மெளனித்திருங்கள்
என் கவிதைகளோடு...

எழுதியவர் : புலவூரான் ரிஷி (19-Aug-15, 11:45 pm)
பார்வை : 65

மேலே