காதல் கீதை
எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது
நீ என்னைப் பார்த்ததும்
நான் உன்னைப் பார்த்ததும்...
அன்று;
எது உன்னால்
என்னிடமிருந்து திருடப்பட்டதோ
அதுவேதான் என்னால்
உன்னிடமிருந்து திருடப்பட்டது...
"இதயம்"
திருடப்பட்டதால்
எது நம்மால் பெறப்பட்டதோ
அதுவும் அழகாவே பெறப்பட்டது
"காதல்"
எதை நீ எனக்காக
கொண்டுவந்தாயோ
அதையே தான் உனக்காக
நான் கொண்டுவந்தேன்...
"உயிர்"
எது நடக்கிறதோ
அதுவும் நன்றாகவே நடக்கிறது
இன்று;
எதை நீ இழந்ததாக
நினைக்கிறாயோ
அதையே தான் நானும்
இழந்ததாக நினைக்கிறேன்...
"வாழ்க்கை"
இன்று
எது உன்னால்
எனக்கு கொடுக்கப்படுகிறதோ
அதுவேதான் என்னால்
உனக்கு கொடுக்கப்படுகிறது- துன்பம்
புரிதலும் பிரிதலும்
அது போடும்
புரியாத புதிர்களும்
நானும் நீயும்
கொண்டுவந்தது அல்ல;
நமக்கு முன்பே அவை
இங்கு தான் இருக்கின்றன...!
அன்று;
சந்திப்புகள் சாத்தியமானதாய்
அர்த்தப்படுத்திக் கொண்டதும்
இன்று பிரிவுக்குள்
நாம் சமாதியானதாய்
அர்த்தப்பட்டுக்கொள்வதும்
அன்று ;
ஆனந்தக்கூத்தாடியதும்
இன்று
அமைதியில் மூழ்குவதும்
எதன்படி தொடங்கியதோ
அதன்படியே நடைபோடுகிறது...
எது நடக்குமோ
அது நன்றாகவே நடக்கும்
என்று;
நாளைய நம்பிக்கையில்
பிரிவுகள் இனி
சந்திப்புகளாய் உருமாறும்
சாத்தியம் என்பது சத்தியம்...
ஆழப்படுகையில் படுத்துறங்கையில்
ஆனந்தத்தில் அமைதி
அமைதியில் ஆனந்தம்
இரண்டும் காணக்கிடக்கவே
காதலெனும்
வாழ்க்கையின் சாராம்சம்
மறுபடி தொடங்குகிறது...
நீ நானாக
நான் நீயாக
நாம் நாமாக
அன்று;
எது நடக்க இருக்கிறதோ
அது நன்றாகவே நடக்கும்...!