இருவகை இயற்கை

அன்பை விரும்புது ஒரு கும்பல் - அதை
அலட்சியம் செய்யுது மறு கும்பல்
உழைத்துப் பிழைக்குது ஒரு கும்பல் - அதை
உட்கார்ந்து உண்ணுது மறு கும்பல்

சிரித்து வாழுது ஒரு கும்பல் - அதை
சீரழித்து வாழுது மறு கும்பல்
கொடுத்து உதவுது ஒரு கும்பல் - அதை
தடுத்து மகிழுது மறு கும்பல்

மதிக்குது பெண்களை ஒரு கும்பல் - காலால்
மிதிக்குது அவர்களை மறு கும்பல்
பாசம் காட்டுது ஒரு கும்பல் - அதை
பணமாக்க நினைக்குது மறு கும்பல்

நலிந்து கிடக்குது ஒரு கும்பல் - அதை
நசுக்க நினைக்குது மறு கும்பல்
கடவுளை வணங்குது ஒரு கும்பல் - அதை
கல்லென சொல்லுது மறு கும்பல்

பணிந்து நடக்குது ஒரு கும்பல் - அதை
பாய்ந்து தாக்குது மறு கும்பல்
ஏழையை மதிக்குது ஒரு கும்பல் - அதை
ஏளனம் செய்யுது மறு கும்பல்

பொருளை சேர்க்குது ஒரு கும்பல் - அதை
இருளில் பறிக்குது மறு கும்பல்
நட்பாய் பழகுது ஒரு கும்பல் - பழகி
நாசம் செய்யுது மறு கும்பல்

கடமை செய்யுது ஒரு கும்பல் - அதற்கு
கையூட்டுக் கேட்குது மறு கும்பல்
மடமையை விரும்புது ஒரு கும்பல் - அதில்
உடம்பை வளர்க்குது மறு கும்பல்

நாணயமா நடக்குது ஒரு கும்பல் - வெறும்
நாநயம் காட்டுது மறு கும்பல்
ஊரையே ஏய்க்குது ஒரு கும்பல் - அதில்
அரைபங்கு கேட்குது மறு கும்பல்

யார்தான் எதனைச் செய் தாலும் - இங்கு
யாருக்கும் எதுவும் நிலை இல்லை
மண்ணில் இருக்குற நாள் வரையில் - இங்கு
மற்றவர்க் குதவினால் பழி இல்லை

எழுதியவர்
பாவலர் . பாஸ்கரன்

எழுதியவர் : (20-Aug-15, 2:12 am)
பார்வை : 70

மேலே