தட்டுங்கள் கேட்கப்படும்

தட்டுங்கள் கேட்கப்படும்
=======================================ருத்ரா இ.பரமசிவன்



அந்த இலைக்கு மிக மிக ஆசை
ஓடையை
நக்கி குடிக்க வேண்டுமென்று.
உதிர்ந்து விழும்போது
ஆசை இருந்தது.
உயிர் இல்லை.

தாகம்

__________________________________________________



வாழ்க்கை... வாழ்க்கை..
அது என்ன மொழி?
அதை செத்து தான்
படிக்கவேண்டும்.

புதிர்

______________________________________________________


ஒழுங்கற்ற‌
கரடு முரடாய் முரட்டுப்பாறைகள்.
ஆற்று மங்கையின்
வெண்ணை மடியில்
இப்படி பளிங்குகளாய்
கடையப்பட‌
இந்த இயற்கையின்
எத்தனை தாஜ்மகால் சிற்பிகள்
ஜீரணிக்கப்பட்டிருக்க வேண்டும்?

கூழாங்கற்கள்!

__________________________________________________


கூட்டம் கூட்டமாய்
துரத்தி
அந்த சொரி நாயை
கல்லால் அடித்துக் கொன்றார்கள்.
ஏன்?
அவர்கள் பாட்டில் அருகே
நக்க வைத்திருந்த ஊறுகாயை..
நக்கி விட்டதாம்!


சமுதாயம்.

_________________________________________________________


குப்பை
குப்பையை அள்ளூகிறது.
குப்பையை
தாலி கட்டிக்கொள்கிறது.
குப்பையை
பிரச‌வித்து பெற்றுக்கொள்கிறது.
குப்பையை
கை கூப்பி கும்பிடுகிறது.
குப்பையும் ஒரு
குப்பைக்கூடை கேட்கிறது.
எடுத்துக்கொள் என்று
தாராளமாய் தருகிறார்கள்
இதை...

ஓட்டுப்பெட்டி.

______________________________________________________
ருத்ரா இ.பரமசிவன்

எழுதியவர் : ருத்ரா இ.பரமசிவன் (20-Aug-15, 9:00 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 60

மேலே