சரணங்களில் சரணடைவோம் வா
உன்னை உற்று நோக்குகிறேன்
என்று தெரிந்திருந்தும் நீ
சற்று என்னை நோக்காத
அந்தத் தருணங்கள்
உன் பார்வை தரிசனத்துக்காய்
தவமிருக்க நீயோ
ஏரெடுத்தும் பாராமல் போன
அந்த ஏமாற்ற நாட்களில்
கொஞ்சம் பைத்தியமும்
மார்கழி குளிரில்
பொழிகின்ற பனிமழையில்
நீ கோலம்போடும் அழகை
இரசித்த குளுகுளு நாட்களில்
எனக்கு சலதோஷம்
எனக்கு உன்னை
பிடிக்கவில்லையென்று
உனக்கு என்னை பிடித்திருந்ததை
உணர்த்திய காதல்
அர்ச்சனைக்காய் பறித்த
அரளிப்பூ ஒன்றை
விளையாட்டாய் வீச
கூந்தலில் சிக்கிகொண்ட
அதை எடுத்து உலர்த்தி
பொக்கிசமாய் பாதுகாக்கும்
உன் நேசத்தின் ஆழம்
இப்படி
உன்னில் எனக்குப் பிடித்ததும்
உன்னால் எனக்குப் பிடித்துமென
நம்மால் நமக்குப் பிடித்து
நீளும் ஞாபகங்களின் வசந்தம்
ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டு
சிப்பிக்குள் முத்தாய்
உயிர் வாழ்வதுதென்பது
பட்டாம்பூச்சியை பற்றிய
மௌனத்தின் பாடலாய் ஒலிக்கிறது.
பூக்களும் பனித்துளிகளும்
வானவில்லுமென
இயற்கையின் அழகுகளில்
எதிரொலிக்கும்
நம் காதலின் பாடலை
புல்லாங்குழல்கள் சேகரித்து
இசைத்தகடாய் வெளியிடும் வேளை
சிறப்பு அதிதியாய்
குயில்கள் கலந்துகொள்ளலாம்.
நம்மை புரிந்துகொண்ட
இயற்கையின் இசைவிழா
இனிதுபெற
வாழ்தலின் சுருதி பிசகா பாடலின்
சரணங்களில் சரணடைவோம் வா
அவை சந்தோசம் பெறட்டும்.
*மெய்யன் நடராஜ்