ஆக்கப்பூர்வ சிந்தனை இருந்தால் மட்டுமே
ஆக்கப்பூர்வ சிந்தனை இருந்தால் மட்டுமே ..
...........................................................................
ஜப்பானில் “கோய்’ என்றொரு மீன் வகை உள்ளது.
இந்த மீன் விசித்திரமான இயல்புடையது.
நீங்கள் இந்த மீனை ஒரு சிறிய தொட்டியில் வைத்து வளர்த்தால் அது அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று அங்குலம் மட்டுமே வளரும்.
சற்று பெரிய தொட்டியில் வளர்த்தால் கோய் மீன் 8 அல்லது 10 அங்குலம் வரை வளரும்.
சிறு குட்டையில் கோய் மீன்களை வளர்த்தால் அது ஒன்று முதல் ஒன்றரை அடி வரை வளரும்.
கோய் மீனைக் குளத்தில் வளர்த்தால் இரண்டரை அடி முதல் மூன்றடி வரை வளரும்.
மிகப் பெரிய ஏரியில் கோய் மீனை வளர்த்தால் அது ஐந்து அடி வரை வளரும்.
மனிதர்களும் கோய் மீனைப் போன்றவர்கள்தாம். சிறியவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் வளர முடியாமல் போய்விடும்.
உயர்ந்த செயல்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்.
அப்போததான் வளர முடியும். உங்களது சிந்தனை உயர உயர உங்களது செயல்பாடும் மேம்பாடு அடையும்.
உங்களது மதிப்பும் உயர்ந்து கொண்டே செல்லும்.
மனிதர்கள் தங்களை பற்றிக் குறைவாகவே மதிப்பிடுகிறார்கள். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. சிறிய தொட்டியில் வளர்க்கப்படும் கோய் மீன்கள் போல மனிதர்கள் தங்களைக் குறுக்கிக் கொண்டு விடுகினறனர்.
இதனால் அவர்களால் அவர்களது முழு ஆற்றலை வெளிப்படுத்த முடியாமல் போய்விடுகிறது.
இதற்கு முக்கிய காரணங்கள் யாவை..? இந்தக் காரணங்களைக் கண்டறிந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய முடியும்.
பொதுவாக எதிர்மறைச் சிந்தனைதான் அதிகமாகக் காணப்படுகின்றது.
ஒரு குண்டான மனிதர் சாப்பிட உட்காரும்போதே “நான் சாப்பிடுவதெல்லாம் கொழுப்பாக மாறிவிடுகிறது.’ என்று அலுத்துக் கொள்ளுகிறார்.
ஒரு குடும்பத் தலைவி காலையில் எழும்போதே “இந்த வீட்டில் எங்கு பார்த்தாலும் குப்பையாகத்தான் கிடக்கிறது. ஒருநாளும் குப்பைகள் குறைவதாகத் தெரியவில்லை’ என்று அலுத்துக் கொள்கிறார்.
பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும் மாணவி தனத தந்தையைப் பார்த்து, “அப்பா, கணக்கில் நான் குறைந்த மதிப்பெண்கள்தான் எடுப்பேன் போல் தெரிகிறது.
தேர்வில் நான் தோல்வி அடைந்து விடுவேன் என்று அஞ்சுகிறேன்’ என்று சொல்கிறார்.
இவை யாவும் எதிர்மறையான எண்ண அலைகளாகும்.
ஆற்றல் மிக்க பலர் தங்களது ஆற்றலை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் குடத்தில் இட்ட தீபங்களாக உள்ளனர். குன்றிலிட்ட தீபங்களாக அவர்களால் பிரகாசிக்க முடியவில்லை.
பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், மேல் அதிகாரிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கேலி, கிண்டல் செய்வதால் ஆற்றல்களைப் பலரால் வெளிப்படுத்த முடியவில்லை.
இதமற்ற சொற்கள் ரணத்தை ஏற்படுத்துகின்றன. தெரிந்தோ, தெரியாமலோ உதிர்க்கப்படுகின்ற வார்த்தைகள் வேதனையை ஏற்படுத்துகின்றன..
மனிதர்களிடையே குழப்பம் அடிக்கடி தலை தூக்குகிறது. ஒரு மாணவர் ஒரு பாடத்தில் தேர்ச்சியடையவில்லை என்றால் அவர் மனம் உடைந்து விடுகிறார்.
என்னால் எல்லா பாடத்திலும் வெற்றி பெற முடியவில்லையே என்றும் வேதனைப்படுகிறார். இந்த வேதனை அவருடைய வளர்ச்சியைத் தடுத்து விடுகிறது.
“பல பாடங்களில் வெற்றி பெற்றுள்ளேன். ஒன்றில் மட்டும்தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளேன்.
அடுத்த முறை அதிலும் மகத்தான வெற்றி பெறுவேன்’ என்றும் சிந்திக்கத் தொடங்கி விட்டால் தோல்வியை துரத்தியடித்துவிட முடியும்.
தனி நபர்களின் எண்ண ஓட்டத்தைச் சீர்குலைப்பதில் தெரிந்தோ, தெரியாமலோ ஆசிரியர்கள், பெற்றோர், உறவினர்கள், மேல் அதிகாரிகள் ஆகியோரும் ஈடுபடுகிறார்.
ஆம்,நண்பர்களே.,
திடமான, தெளிவான ஆக்கப்பூர்வ சிந்தனை இருந்தால் மட்டுமே தோல்வியை அண்டவிடாமல் செய்ய முடியும்.