ஒற்றையாய் ஒருத்தி

எப்போதும் போல்
கதவை இன்னொரு சுவராக்கினாள்

கசங்கிப்போன புத்தகம் ஒன்றுடன்
சன்னலினோரமாய் அமர்ந்தாள்

சரிந்திருந்த அருகாமை கிளையில்
இலையைத் தின்று பெருத்திருந்த புழுவுடன்
பகல் பொழுதைத் தொடங்கினாள்

அதனிடம்,
பாட்டி, தாத்தா, அத்தையென எல்லோரையும் பற்றிய
நேற்றைய செய்திகளைச் சொல்லிவிட்டாள்

இன்றைய செய்தியான,
அம்மா, பள்ளிக்கு மதிய உணவு டப்பாவை
எடுக்காமல் போனதையும் சொல்லிவிட்டாள்

தொழுவத்தில் கன்று ஈன்றிருந்த பசு,
பால்காரனை, கால் உதைத்து தள்ளியதையும்
சொல்லிவிட்டாள்

சித்தி் பெண்ணின் திருமணத்தில்
வரனே தகையலையா இன்னும் என்ற
கேள்விகளுடன் கூடவே இணைக்கப்பட்ட
கோவில் முகவரிகளைப் பற்றியும் அதனிடம்
பேசியாகிவிட்டது

கண்ணாடி பார்த்தால் இன்னும் கருப்பாகிவிடுவாயென
எதிர்வீட்டு அக்கா சொன்னதையும்
சொல்லிவிட்டாள்

அது, தலை உயர்த்தி, கண்களை உருட்டியபோது
நீ ரொம்ப அழகாயிருக்கேன்னும்
சொல்லியாகிவிட்டது

சொல்வதற்கு கதைகள் தீர்ந்துபோன போது,
போன வாரம் தன்னை பெண் பார்த்துவிட்டு,
பிடிக்கவில்லை என்று சொல்லிப் போனவன்
இருபத்தியொன்றா அல்லது இருபத்திரெண்டாவென
புத்தகத்துடன் யோசிக்கத் தொடங்கினாள்..

எழுதியவர் : அகிலா (21-Aug-15, 5:00 pm)
Tanglish : otraiyaai oruthi
பார்வை : 1458

மேலே