இல்லினாய் யூனிவர்சிட்டி- 6 க்ரைம் கதை மீள்பதிவு

...........................................................................................................................................................................................

முன் கதைச் சுருக்கம்

நான்- சௌதாமினி. இல்லினாய் யூனிவர்சிட்டி பயிற்சிக்கு மனப்பூர்வமாக சம்மதித்து விட்டதாக டாக்டர் ரங்கபாஷ்யத்திடம் தெரியப்படுத்தினேன். அவன் ஒரு பாலிதீன் கவரை எடுத்து அதில் கரியமில வாயுவை நிரப்பி என் தலை வழியாக கவிழ்த்து இறுக்கினான்.

................................................................................................................................................................................................

அதே சமயம்..

கதவை உடைத்து அப்பாவும் டாக்டர் ஹென்றியும் போலீஸ் புடை சூழ உள்ளே நுழைந்தனர்.

டாக்டர் ஹென்றி என்னை ஆசுவாசப்படுத்த, அப்பா ரங்கபாஷ்யத்தின் மேல் புலிப் பாய்ச்சல் பாய்ந்தார். அவர் மாறி மாறி அடித்ததில் ரங்கபாஷ்யத்தின் வாயிலும் மூக்கிலும் ரத்தம் வடிந்தது. போலிஸ் அவனைக் கைது செய்து கொண்டு போனது.

அப்பா என் வாட்சை கழற்றினார். ‘‘இது ஒரு ரெகார்டிங் டிவைஸ்’’ என்றார். ஆடியோ, வீடியோ துல்லியமாக ரெகார்ட் ஆகும். என் பாதுகாப்புக்காகவும், அவனை ஆதாரத்தோடு பிடிப்பதற்காகவும் டாக்டர் ஹென்றி கொடுத்ததாம்.

போலிஸ் ஸ்டேசன் போய் சம்பிரதாய அலுவல்களை முடித்து விட்டுப் புறப்பட்டோம். நான் இன்னமும் நடுங்கிக் கொண்டிருந்தேன். அப்பாவும் டாக்டர் ஹென்றியும் என்னை வாஞ்சையோடு கவனித்துக் கொண்டனர்; நிறையப் பேசினர்.

அன்றிரவு மகாபலிபுரம் போகிற வழியில் எங்களுக்குச் சொந்தமான காட்டேஜில் இரவு விருந்து. நான், அப்பா, சித்தி. டாக்டர் ஹென்றி, எங்கள் மானேஜர்- இவர்களோடு பாட்டியும்.

அப்பா கரை கடந்த சந்தோஷத்தில் பம்பரமாக சுற்றிக் கொண்டிருந்தார். என்னுள் சில கேள்விகள்.. காப்சூல் விவகாரம், இன்னும் டாக்டர் ஹென்றிக்கு ரங்கபாஷ்யத்தின் மேல் சந்தேகம் எப்படி வந்தது?

விருந்து முடிந்து அனைவரும் அமர்ந்ததும் டாக்டர் ஹென்றி பேசத் தொடங்கினார்.

‘‘சௌதாமினி, டாக்டர் ஜான் லீவர்ட் என் நண்பர். அவர் மனைவியும் ஒரே மகனும் எனக்கு நெருக்கமானவர்கள். ஜனவரி பதினாறாம் தேதி இரவு ஜான் லீவர்ட் தனது அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவர் பயன்படுத்திய கயிறு இற்று விழுந்ததில் அவர் மண்டை பக்கவாட்டு மேஜையில் மோதி உடைந்து விட்டது. குடும்ப விவகாரம் வெளியில் வருவதை தவிர்ப்பதற்காக இதை வைத்து மிஸஸ் ஜான் லீவர்ட் தன் கணவரின் தற்கொலை விவகாரத்தை மறைக்க விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளை செய்து அவரின் தற்கொலையை ஜனவரி பதினெட்டாம் தேதி விபத்தாக மாற்றி வெளியுலகிற்கு தெரியப்படுத்தியதே நான்தான். இதனால்தான் ஜனவரி பதினேழாம் தேதி அவரது எல்லா அப்பாயிண்ட்மெண்ட்டும் கேன்சலானது.’’ அவர் நிறுத்தினார்.

என் ஒரு கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது. ஜனவரி பதினாறாம் தேதி இறந்தவர் பதினேழாம் தேதி எப்படி என்னை பரிசோதிக்க முடியும்? ஆக, போலி ஜான் லீவர்ட்டாக யார் வந்திருக்க வாய்ப்பு அதிகம்? ஒன்று ரங்கபாஷ்யம் இல்லையெனில் அவன் கையாள் என்று ஊகித்திருக்கிறார் டாக்டர் ஹென்றி!

டாக்டர் ஹென்றி தொடர்ந்தார்.

‘‘இந்த விஷயம் எனக்கும் மிஸஸ் ஜான் லீவர்ட்டுக்கும், அவரது மகனுக்கும் மட்டுமே தெரியுமென்று நினைத்திருந்தேன். இன்னொருவனுக்கும் தெரிந்து அதை அவன் தவறாக உபயோகித்திருக்கிறான் என்பது உங்கள் மூலம் தெரிந்தது. ஆனால் சௌதாமினி, உங்கள் அதிஷ்டம் நான் வந்தேன். என்னைத் தவிர இன்னொருவர் உங்களை இண்டர்வியூ பண்ணியிருந்தால் என்னவாகி இருக்கும்? உங்கள் ‘நோயை’ உறுதி செய்திருப்பது ஜான் லீவர்ட்; உங்கள் பெயர் அவர் ஹாஸ்பிடல் ரெஜிஸ்டரில் இருக்கிறது; ரிபோர்ட்ஸ் கிடைக்காமல் போக காரணம் இருக்கிறது; நீங்களே முன் வந்து பயிற்சி வேண்டாம் என்கிறீர்கள்! ரங்கபாஷ்யத்துக்கு சான்ஸ் கிடைத்திருக்கும். பிற்பாடு உங்களுக்கு கான்சர் இல்லை என்று கண்டு பிடிக்கப்பட்டாலும் இல்லாத ஜான் லீவர்ட்டிடம் எப்படி நியாயம் கேட்க முடியும்? ரங்கபாஷ்யத்தின் பித்தலாட்டமும் வெளியில் வந்திருக்காது!’’

நான் உள்ளுக்குள் நடுங்கினேன். எப்பேர்பட்ட சதி வலையில் முட்டாள் தனமாக சிக்கியிருக்கிறேன்!

‘‘சார் அந்த காப்சூல் விவகாரம்?’’

டாக்டர் ஹென்றியும் அப்பாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இருவர் பார்வையும் பாட்டி மேல் படர்ந்தது. பெரிய மனிதர்கள் முன் வரவே தயங்கும் பாட்டி இப்போது ஏக கூச்சத்துடன் முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டார்.

ஹென்றி கூறத் தொடங்கினார்.

‘‘இதற்கு நீங்கள் உங்கள் பாட்டிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் உண்மையில் சாப்பிட்டது மூன்று காப்சூல்கள்தான். அதற்கே தீவிர மஞ்சகாமாலை வந்து விட்டது. அந்த காப்சூல் உங்களை பாதிப்பதை துல்லியமாக கண்டு பிடித்து, காப்சூல்களின் ஜெலாடின் உறையை பிரித்து மருந்தை வெளியே கொட்டியது உங்கள் பாட்டி!’’

நான் ஆச்சரியத்தில் உறைந்து போனேன்.

அப்பா இடைமறித்தார்,

‘‘அந்த ஜெலாடின் உறையை ஜான்சன் பட்ஸ் போட்டு க்ளீன் பண்ணிட்டு சிவன் கோயில் விபூதி ரொப்பி வச்சது நம்ம பாட்டி! நேற்று டாக்டர் ஹென்றி காப்சூலுக்குள்ளே கார்பன் தூள் இருக்குதுன்னார். பாட்டி கிட்ட பக்குவமா போன்ல பேசினேன். பாட்டி சொல்லிட்டாங்க.’’

நான் பாட்டீ’’ என்றபடி ஓடிப்போய் அவர் காலில் விழுந்து எழுந்தேன். அன்றொரு நாள் பாட்டியிடம் தென்பட்ட விபூதி தீற்றலின் ரகசியம் இதுதானா?

‘‘ஒரிஜினல் மருந்தின் வீரியம் உங்கள் உடம்பை விட்டு நீங்க மூன்று நாட்கள் தேவைப்பட்டிருக்கின்றன. அதன் பிறகு நீங்கள் சாப்பிட்டதென்னவோ அந்த விப்... வாட் ஈஸ் தட்? விபூதியைத்தான். அது மட்டுமல்ல, பாட்டி கொடுத்த நாட்டு மருந்து உங்கள் கல்லீரலை குணமாக்கியிருக்கிறது!’’ டாக்டர் ஹென்றி பாட்டிக்கு ஏக மரியாதை கொடுத்தார்; நாங்களும்தான்.

‘‘சௌதாமினி, எனக்கு ரங்கபாஷ்யத்தின் மேல் சந்தேகம் இருந்தது; ஆதாரமில்லை. நீங்கள் பார்ப்பதற்கு அப்பாவியாய் பூனைக்குட்டி போல் இருக்கிறீர்கள். உங்களை தன்னந் தனியாய் அந்த வெறி பிடித்தவன் முன் கொண்டு போய் நிறுத்தினால் அவனே ஆத்திரத்தில் உண்மையை கக்கி விடுவான் என்று எதிர் பார்த்தேன். உங்கள் கையில் ஒரு ரெகார்டிங் டிவைஸ் கட்டி அவன் அறைக்கு அனுப்பி விட்டு வெளியில் காத்திருந்தோம். முன் கூட்டியே அவனிடம் துப்பாக்கி போன்ற நொடியில் உயிர் பறிக்கும் கொடிய சாதனங்கள் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டோம். நான் எதிர் பார்த்தபடி அவன் மாட்டிக் கொண்டான். அறைக்குள் நடந்த அனைத்தும் டிவைஸ் மூலம் என் டாப்லெட்டில் சுடச்சுட பதிவாகி விட்டது!’’

டாக்டர் ஹென்றி எழுந்து கொண்டார். ‘‘இன்று ஜனவரி இருபத்தொன்பது; பிப்ரவரி நான்காம் தேதி உங்களை இல்லினாய் யூனிவர்சிட்டியில் சந்திக்கிறேன்.’’ புறப்பட்டுச் சென்றார்.

அப்பா அவரே இல்லினாய் யூனிவர்சிட்டி மெம்பராகி விட்டதைப் போல் மொபைல் போனில் வாழ்த்துக்களை பெறுவதிலும், பேசுவதிலும் பிஸியாக இருந்தார். சித்தி என் நெற்றியில் முத்தமிட்டு ஒரு பெரிய சூட்கேஸை காட்டினார். பயிற்சி காலத்தில் எனக்குத் தேவைப்படுகிற ஹேர்கிளிப் முதற்கொண்டு அத்தனை விஷயங்களும் அதில் இருந்தன!

நிலவு மேகத்தை துரத்தியடித்து விட்டு தன் இருப்பை முழுமையாகக் காட்டியது. மேஜைக்கு மேஜை விளையாடிக்கொண்டிருந்தது தென்றல். திடீரென்று நான் அழ ஆரம்பித்தேன். அப்பா ஓடி வந்தார்.

‘‘என்னம்மா? ’’

‘‘உங்களை விட்டுட்டு எப்படிப்பா ஃபாரின் போவேன்? ’’

அழுகையோடு சொன்னேன்.

இதுவரை எந்த உணர்ச்சிக்கும் ஆட்படாமல் அமைதியாக இருந்த பாட்டி, இதைக் கேட்டதும் தன்னை மறந்து சிரித்து விட்டார்!


முற்றும்.

எழுதியவர் : அருணை ஜெயசீலி (22-Aug-15, 1:38 pm)
பார்வை : 175

மேலே