என் தங்கை A K கார்த்திகாவுக்கு
இந்த தளத்தை விட்டு வெகு தூரம் போய் விட்டேன் . இருப்பினும் என்னை எழுத வைத்த தளத்தில்
மூன்று பேரின் பிறந்த நாளன்று நிச்சயம் வர என்றென்றும் விரும்புகிறேன் ...ஒருவர் கார்த்திகா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்தி ....
நீ தமிழ் கவிதை உலகில் மிகச் சிறந்த படைப்பாளியாக உலா வரும் நாள் மிக அருகில் இருக்கிறது .
எழுந்து வா மகளே .
இந்த அண்ணனின் சிறு பரிசையும் ஏற்றுக் கொள் ...நேசங்களுடன் ஒரு கவிதை உனக்கும் , உன் போன்ற இந்த பூமியின் எதிர்கால நம்பிக்கைகளுக்கும் .
.......................................................................................................
மண் இன்றி என் செய்ய ?
========================
இந்த ஊராட்சி ஒன்றியப் பள்ளியில்தான்
எம் கல்வி இருந்தது
இங்கிருந்த செம்மண் சாலையை
ஒட்டியே எம் பால்யங்கள் கரைந்தன
எம் கூரைகளை எங்கள் ஊர் மண் சுமந்தது
எம் உணவிலும் எங்கள் கேணி நீரே ருசித்தது
எம் தாய விளையாட்டுகளில் எங்கள் பெரியம்மா
அத்தை எல்லாம் ஆடினார்கள்
எம் ஏரிகளில் எங்கள் சாகசங்கள் அரங்கேறின
எம் மாட்டுக் கொட்டகை நிழலில்தான்
நாங்கள் வந்தியத்தேவனை வாசித்தோம்
எம் கோயில் பஜனைகளில் சங்கீதமும் அறிந்தோம்
எம் திருவிழாக்களில் சண்டை போட்டிருந்த
சித்தப்பா சித்தியிடம் பேசினோம்
இரவுகளில் எம் அப்பத்தா கதைகள் கேட்டோம்
எம் பிரேமங்கள் இவ்வூர் வீதிகளில்
ஜாடைமாடையாய் சீண்டிக்கொண்டன
எம் விடுமுறைகள் வயல்களில் பணி செய்தன
எம் வைக்கோல் போரில்தான் விவாதங்கள் நடந்தன
இவ்வாறாக இங்குதான்
எம் அறம் பொருள் இன்பம் யாவுமே பெற்றோம்
இந்தப் பேச மறந்த பெருங்கதையை உரக்கச் சொல்லியே
எம் பிள்ளைகளை ஆளாக்குவோம்
தம் புத்திரர்க்கு அவர் இக்கதை சொல்லும் நன்னாளில்
இந்தப் பூமியிடம் கர்வத்தோடு கூறியிருப்போம்
உன்மேலான உலகமயமாக்கலை
எம் இனத்தின் கடைசி மனிதனும் தடுப்பான்.