காலைச் சாரல் 15 - நாய்

காலைச் சாரல் 15 - நாய்

அதிகாலை எண்ணங்கள் "நாய்"

நேற்று மாலை நடை பயில செல்லும் போது அந்தப் சின்னப் பையன் தெரு நாயை சீண்டியதைப் பார்த்துப் பதறிவிட்டேன்...

எனக்கு ஏன் நாய் என்றால் 'வெறுப்பு'.....?

அந்த 'பின் நோக்கி' (flash back) சுருள் வளைவை போட்டுக் கொள்ளுங்கள்...
****

ஐம்பத்து ஒன்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு அதிகாலை வேளை........
ஐந்து வயதுக் குழந்தையான நான் தூக்கம் கலைந்து வீட்டின் வாசலுக்கு வந்தேன்.. அது தெருவை ஒட்டிய ஒரு பங்களா ... மாடியில் ஒரு வங்காளி குடும்பம் - கீழே நாங்கள்.. தெருவுக்கு வந்தவன் சற்று தூரத்தில் இருந்த ஒரு நாயைப் பார்த்து விரோதம் கொண்டேன்... அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்து நாயின் மீது எறிய, நாயின் மீது படவில்லை... சற்று அருகில் சென்று மற்றொரு கல்லை எறிய, மீண்டும் மிஸ்... நாய் சலனமில்லாமல் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு நின்று கொண்டிருந்தது.... மிக அருகில் சென்று ஒரு கல்லை வீச..... கல்லுக்கும், நாய்க்கும் தொடர்பு ஏற்பட "வள்...." என்ற நாய் என் இடது காலை முட்டிக்கு கீழ் கவ்வி பதம் பார்த்து விட்டது.. கால் கடித்துக் குதறப் பட்டிருந்தது.

சத்தம் கேட்டு ஓடி வந்த வீட்டில் உள்ளவர்கள் தூக்கிக் கொண்டு ஓடினர் அருகில் உள்ள இராயப்பேட்டை மருத்துவ மனைக்கு... தொப்புளைச் சுற்றி பதினான்கு ஊசி போட்டு என்னை காப்பாற்றினர்.... நாயின் கதி என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.... அதன் நினைவாக இன்றும் காலில் மூன்று பற்களின் வடுக்கள்...
****

அங்கிருந்து ஐந்து வருடங்கள் முன்னோக்கி வாருங்கள்....

ஊர் எர்ணாகுளம், ... நான்காம் வகுப்பு படிக்கும் நான், மூன்றாம் வகுப்பு படிக்கும் என் தம்பி... இருவரும் தோள்மீது தோள் கை போட்டுக் கொண்டுதான் தினம்.. ஆடி ஆடி பள்ளிக்குச் செல்வோம் .. ஒரு நாள் மதியம் என் வகுப்புக்கு வந்து "உன் தம்பியை நாய் கடித்து விட்டது என்றனர்..." கூட்டி சென்று காட்டியதில் வலது முட்டியில் ஒரு பல் குத்திய அளவு காயத்தில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் வந்திருந்தது... ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பினர்... போகும் வழியில் உள்ள பழக்கமான மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றேன்... முதலுதவி அளித்தவர்கள் பொது மருத்துவ மனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினர்...

அம்மா தம்பியை தினம் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஒரு ரிக்ஷா ஏற்பாடு செய்தார்.. (குழந்தைகளை வீட்டில் பார்த்துக் கொள்ள வேண்டி இருந்ததால் அம்மாவால் ஊசி போட தினம் போக முடியாது.... அப்பா எப்பொழுதும் போல் அலுவலக வெளியூர் சுற்றுப் பயணத்தில் ) ரிக்ஷாக்காரர் தினம் வராமல் ஏதேதோ காரணம் கூறி ஏமாற்றியதில் சில நாள் போடும் ஊசி தவறிவிட்டதில், தம்பிக்கு சுரம்.... மருத்துவமனைக்கு கூட்டிச் சென்ற அம்மா இரண்டு நாட்கள் கழித்து தனியாகத்தான் வந்தாள்... பல நாட்களுக்கு பின் எனக்குப் புரிந்தது HYDROPHOBIA-வால் தாக்கப்பட்டு உயிர் இழந்தான் என்று....
****

அங்கிருந்து இன்னும் ஆறு வருடங்கள் முன்னோக்கி செல்லுங்கள்....

சென்னையில் அந்த பழைய மாம்பலம் சந்தில் என்னைப் பார்த்த அந்த குட்டி நாய் என்ன நினைத்தோ ஓடி வந்து என் வலது கால் நடு விரலில் பல்லால் கடித்தது... ஒரு பல் பதிந்த அளவு காயம்.... ஒரு சொட்டு ரத்தம். (ஒரு வேளை அந்த இராயபேட்டை நாயின் நேர் வாரிசோ என்னவோ...) நான் அதிகம் கவலைப்பட வில்லை.... அம்மாவிடம் சொல்லி வீண் பயத்தை ஏற்படுத்தவும் விரும்பவில்லை.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்பது நான் ஐம்பது வருடத்திற்குப் பின் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதிலிருந்து புரிந்திருக்கும்.... பாவம் அந்த நாய்க்கு என்ன ஆயிற்றோ...?
****

ஆதலால் நாய் என்றால் எனக்கு பிடிக்காது என்பதல்ல.... 'வெறுப்பு'

தினம் நாய்களைக் கூட்டிக்கொண்டு நடை பயில்பவர்களையோ, நாய்களால் இழுத்துக்கொண்டு வந்து நடை பயில்பவர்களையோ பார்த்தால் நான் சற்று ஒதுங்கியே இருப்பது....

நாய் வட்டாரங்களில் என்னைக் கடித்தால் துன்பப்பட்ட செய்திகள் பரவலாக பரவி இருப்பதால் நாய்களும் என்னை கண்டு சற்று ஜாக்கிரதையாகவே உள்ளன....

நம்மை விட உயரமான நாய்களை வளர்க்கும் உறவினர்களும் உண்டு... "ஒண்ணும் பண்ணாது.... ரொம்ப சாது...."

நாய்களின் நன்மை கருதி நான் ஒதுங்கியே நிற்பேன்...

---- முரளி

எழுதியவர் : முரளி (24-Aug-15, 6:19 pm)
பார்வை : 200

மேலே