இரயிலில் தயாரித்த வரிகள் -சந்தோஷ்

அதிவேக இரும்புரதத்திலே
பயணிக்கிறேன்..!
சாளரத்தினூடே கண்ட காட்சிகளை
கண்டவுடன் கவிதையாக்கம்
நிகழ்த்துகிறது என் தனிமை...!
என்னோடு உடன்
பயணிக்கும் பக்கத்து
தண்டவாளங்களில் ஒளிக்கீறல்
போடுகிறானோ... மதியச்சூரியன்.!
***
கிழக்குச் சூரியனை
மேற்குத்திசை கையேந்தி கொஞ்சுகிறது...!
ஓ...! கற்பனைப்பிழை..!
அது அந்திப்பொழுது..!?
***
சாயுங்காலத்தில்
காதலரின் தொடையில் கூந்தலை
உறங்கவைத்து காதல்பேசுவதை
“ மடிசாயுங்காலம்” எனலாமோ?
அச்சோ ! திடைப்படக் கம்பன்
வைரமுத்து...
எனக்கு முன்பே எழுதிவிட்டாரே..!
***
எமனின் வாகனங்களை
மிரட்டி அதட்டி வீடு
திரும்பிச் செல்கிறான்
மாடு மேய்க்கும் சிறுவன்..!
***
கம்யூனிச நிறத்தினை
பூசி மகிழும்
அந்திவானம் சிந்திக்குமா
கார்ல் மார்க்ஸ், லெனின் சித்தாந்தங்களை ?
***
பகல் நங்கைமீது
கறுப்புபூசி ,அதன்மீது
வெண்ணிலா பொட்டிட்டு
சின்ன சின்னதாய்
வெள்ளி முத்துகள் பதிக்கப்பட்டிருக்கிறதே..?
ஓ...இராத்திரி...ஆகிவிட்டதோ ?
இராத்திரி நேரத்து இரயில் பயணத்தில்
கவிதைக்கு வேலை இல்லை..!
இனி... கனவில்
எழுதிக்கொள்கிறேன்
சொப்பனக் கவிதைகளை..!
***
இரா.சந்தோஷ் குமார்.