எதையும் நம்பிவிடாதே

நம்பிவிடாதே எதையும் நம்பிவிடாதே! - அன்று
நாட்டில்சொன்ன வார்த்தைஎதையும் நம்பிவிடாதே!
வெம்பிவிடாதே வாழ்வில் வெம்பிவிடாதே! - நீ
வெளியில் சொல்லமுடியாமல் வெம்பிவிடாதே!

உழைப்பவரே உயர்வார்கள் என்றுசொன்னார்கள் - நாட்டில்
உழைக்காமல் பலபேர்கள் உயரவில்லையா?
பொய்சொன்னால் போஜனமே கிட்டாதென்றார்கள் - பலர்
பொய்சொல்லி தொழில்செய்து பிழைக்கவில்லையா?

நம்பினோர்கள் கெடுவதில்லை என்றுசொன்னார்கள் - பிறரை
நம்பிபலர் நடுத்தெருவில் நிற்கவில்லையா?
எண்ணும்எழுத்தும் கண்ணாகும் என்றுசொன்னார்கள் - நாட்டில்
எழுத்தும்படிப்பும் இல்லாதவர் உயரவில்லையா?

ஆயிரங்கால பயிர்என்று சொல்லிசொல்லியே - உலகில்
அளவில்லாமல் திருமணங்கள் நடத்திவைத்தார்கள்
அன்பில்லை பண்பில்லை என்றுசொல்லியே - சிலர்
அடுத்தவருடம் மணமுறிவு செய்யவில்லையா?

அன்னை.தந்தையே உயர்ந்ததெய்வம் என்றார்கள் - அவரை
அடித்துஉதைக்கும் அவலத்தைநீ கண்டதில்லையா?
ஒற்றுமையே உயர்வுதரும் என்றுசொன்னார்கள் - ஊரில்
ஒருவீட்டில் பிறந்தபலரில் ஒற்றுமைஉண்டா?

உயிர்காப்பான் தோழன்என்று சொல்லிவைத்தார்கள் - வாழ்வில்
உடனிருந்து கெடுக்கும்பல நண்பரில்லையா?
ஆணவமே அழிவைத்தரும் என்றுசொன்னார்கள் – பலர்
ஆணவமே சிறிதுமின்றி அழியவில்லையா?

முன்னோர்கள் சொன்னதெல்லாம் உண்மைகள்இல்லை - அதை
முழுமையாக நம்புவதில் நன்மைகள்இல்லை
எதுகை.மோனை வார்த்தைப்போட்டு எழுதிவைத்தார்கள் - அது
எப்போதும் உண்மையாக நடப்பதுஇல்லை

மனிதபண்பு அற்றவரை மரங்கள்என்றார்கள் - பல
மரங்கள்நமக்கு காய்,கனிதந்து உதவவில்லையா?
பெண்ணென்றால் பேய்கூடஇரங்கும் என்றார்கள் - ஊரில்
பெண்ணைக்கெடுக்கும் கயவர்பலர் இருக்கவில்லையா?

அந்தணரை அறவோர்கள் என்றுசொன்னார்கள் - இன்று
அறம்செய்யும் அந்தணர்கள் அகிலத்திலுண்டா?
வேதங்களை கற்றுணர்ந்த அந்தணர்கூட - மது
போதையினை விரும்பியதில் மூழ்கவில்லையா?

ஆவதெல்லாம் பெண்ணாலே என்றுசொன்னார்கள் - பெண்ணால்
அழிந்தவர்கள் கதைகள்நாட்டில் உலவவில்லையா?
உழைக்காத செல்வம்உடலில் ஒட்டாதென்றார்கள் - வாழ்வில்
ஊழல்செய்து உயர்ந்தவர்கள் உலகிலில்லையா?

கணவன்தான் கண்கண்ட தெய்வம்என்றார்கள் - தன்
கணவனையே காலால்மிதிக்கும் பெண்களில்லையா?
பத்தினியாய் வாழவதுநல்ல வாழ்க்கைஎன்றாரகள் - சிலர்
பலபேர்க்குத் தீனியாக வாழவில்லையா?

உண்மை,பொய் இரண்டையும் சீர்துக்கிப்பார்த்திடு - நீ
உன்அனுபவத்தைக் கொண்டுஅதன் உண்மைஉணர்ந்திடு
இப்படியே சொல்லிச்சென்றால் எல்லையேயில்லை - இதை
இத்தோடு முடித்துக்கொண்டால் தொல்லையேயில்லை.

எழுதியவர்.
பாவலர் . பாஸ்கரன்

எழுதியவர் : (26-Aug-15, 7:54 pm)
பார்வை : 78

மேலே