உறங்காத கவிதைகள்

           
                 
                 உறங்காத கவிதைகள்

அழகான தூரிகை க்கிடையே
அவனின்  நிறம் மாறாத குணம்
ரசிக்கிறது ஓவிய மான ஓவியம்

அசையாமல் என்னையே வரைந்தபடி
அவனழகை ரசித்த ஓவியம் அழியாமல்..

மாலைப் பொழுதின் மயக்கத்தில்
விரைவாய் குதிரைபந்தயமாய்
ஓடிக்கொண்டிருக்கும் ரயில்
பயணங்கள் இடையே

என் நினைவுகளும்
பின்னோக்கி நகரும் 
மரங்களைப் போல்.....

உதிர்ந்து விழும் கதிரவனின்
பொன் தாகக் கம்பிகள்
என்னிடமே மீண்டும் மீண்டும்
ஒளிர் அம்புகளை வீசிவிட்டு
மறைந்து நின்று ஏவுதலில்

என் கண்களை படபடக்கவிட்டு
அவனின் நினைவுகளின்
ஞாபகக் கீற்றுகளை
நினைவுப் படுத்தியே..

தொடர் வீச்சில் குளிர்அம்புகள்
மழைத் துளிகளாக மாறி
ஆமைக் கூடுபோல் வெடித்த
நிலப்பரப்பில் எங்கும் பாய்ச்சியபடி...

ஈரமான நெஞ்சமதில்
அருவியூற்றாய் மனமெங்கும்
குளிர் இன்பம் பரவி...

குழந்தையின் சிரிப்பாகிறது
சுகமான சுமையில்
அவன் மவுனங்கள்

நினைவுப் பாலைவன ஊற்றில்
எண்ணமெல்லாம் நிறைக்கிறது
அவனின் பார்வையும் குரலும்
தினம் தினம் கரைந்தபடி.....

அவனின் நினைவாக
என் சுவாசக் குடுவைக்குள்
கவிதைகளாய் அவனின் 
திருநாம திருவேடு
உருவோடு உறைந்தபடி...

என செவ்வாய் வழிமொழியில்
அவன் வெண்சோவிகளில் (பற்கள்)
நசிந்தும் உழன்றும்
அகப்படாமல் இடிபடாமல்
வெட்கத்தில் துவண்டு விழும் 
அவனுக்கான வார்த்தைகள்
ரயில் புகைபோல் மூச்சுவிட்டபடி...

பிரியமான வார்த்தை சலங்கையில்
பிரியமுடியாமல்
இணைந்து நகர்கிறது
அவனின் வார்த்தைகள்
ரயில்பெட்டிக்குள்
காற்றை இழுத்தபடி...

வண்ணங்கள் பூச்சூட்டலாம்
அவனின் கவிகாவியத்தில்
என் மனத்தின் வெற்று ஒவியத்தில்
பூச்சூடாமலே வானவில் வளைந்தபடி..

அவன் நினைவுகளாய் 
தொடர்கின்றன தொடர்வண்டிபோல்
எனது கவிதைக் காற்றில்....

காலங்கள் இனி  மாறலாம்
அவனின் நினைவுக் காற்றில்
இன்னும் தொடர்கிறது
தென்றலாய் தவழ்ந்தபடி...

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (27-Aug-15, 5:53 am)
பார்வை : 1054

மேலே