பெண்கல்வி அந்த நாட்களில் - கற்குவேல் பா
பெண்கல்வி ( அந்த நாட்களில் )
`````````````````````````````````````````````
அம்மாவினுடைய தாத்தா அவளை
பள்ளியில் சேர்க்கச்சொல்லி கடைசிநாளில்
என் பாட்டியிடம் கொடுத்துச்சென்ற - அந்த
இருபத்திமூன்று ரூபாய் - மீன்காரியின்
சுருக்குப்பைக்குள் முடங்கிவிட - வாங்கிய
கொண்டைமீனின வரால்மீன்களை
சாம்பல் தேய்த்து கல்லில் செதில் எடுத்து
அம்மியில் காரமசாலா அரைத்து
மண்சட்டியில் அம்மா வைத்த குழம்பில்
வந்தமணம் வயலுக்கு சென்றுதிரும்பிய
பாட்டனின் மூக்கோடும் நாக்கோடும் நின்றுவிட
கழுவிய மண்சட்டியின் கரிகளோடு
அவ்வாறே சிதவலாய் நொறுங்கிச் சிதைந்தது
அவளது கல்விக் கனவுகளும் !
- கற்குவேல் . பா