அவனைச் சொன்னேன்
..............................................................................................................................................................................................
மருந்து குடித்து
மருத்துவமனையில் கிடந்தாள் அவள்..
தாய் திட்டியதால் தற்கொலைக்கு முயன்றாளாம்...
(கதையளக்கிறாள் என்னிடம்.)
“ காதல் தோல்வியென்று வந்த
கடன்கார நண்பனைப் பார்க்க வந்தேன்”
(கதையளந்தேன் நான்..!
காதல் தோல்வியாம்..
காதல் தோற்குமா? கதிரவன் இருளுமா?
கல்யாணத்தில் முடியாது போகலாம் காதல்..!
அந்த அங்கீகரிப்பு இல்லாவிட்டால்
ஆதவன் உதிக்காதா? அடுப்புதான் எரியாதா..?
இல்லை,
அருமையானவை அனைத்தையும்
அங்கீகரித்ததா சமூகம்?
அதற்காக
பாத்திரம் உடைந்தால் பால் நிற்பது எங்கு?
ஓ பெண்ணே..
நான் அவனைச் சொன்னேன்...
காதலை ஏற்காது அவள் குடும்பம்..!
காதலைத் தாங்காது அவன் குடும்பம்..
பின்...... ஏன்?
நான் அவனைச் சொன்னேன்...
காதில் காற்றுப்பட்டாலே
கரன்சி கறக்கும் மருத்துவமனைகள்..!
அப்பாவின் ரத்த அழுத்தமும், அம்மாவின் முதுகு வலியும்
மாத்திரை வாங்கினால் துண்டு விழும் என்று
வலியை சகித்தது மீறி வைத்தியரிடமே போனது..
இழந்தது பணம் மட்டுமல்ல; இல்லத்தின் ஆனந்தமும்..!
வீட்டைச் சுற்றி தோட்டம் வைக்கலாம்;
கடன் வைக்கலாமா?
நான் அவனைச் சொன்னேன்...
உன்னைப் போலவே
காலை சூரியனும் அம்மாவின் முகமும்
ஒன்று என்பான்....
இன்றும்
வயது வந்தோர் காதல் அன்னை
வயிற்றில் கரைக்கிறது புளியை..!
கட்டித்தயிர் அளையும் கை
கன்னத்தில் அளைந்தால் தாங்குவாயா?..
நான் அவனைச் சொன்னேன்...
பிருதிவி ராஜனாக இவன் தயார்..!
பெண்ணை தூக்கிக் கொண்டு போய்
எங்கே வைப்பது?
நாங்களிருப்பதே உன் வீட்டில் தானே..!
இல்லை... எங்களைப் போல்
இவனிருப்பதே அவள் வீட்டில்தானே..?
வீட்டுக்காரர் பெண்ணைத் தூக்கினால்
வாலிபன் இருக்கிற குடும்பத்துக்கு
வாடகை வீடு கிடைக்காதம்மா..!
நான் அவனைச் சொன்னேன்...
சமர்த்தென்று நினைத்தேனே..
தெத்துப் பல்லும் அழுக்கு நகமுமாய் நான்..! சிச்சீ..!
அரைக்காசு பெறாத என் நினைவைச் சுமந்து
அசடாகி நிற்கிறாயே..! இல்லையில்லை நிற்கிறானே...!
முடியாதென்றதற்கா மூட்டைபூச்சி மருந்து?
உன்னையல்லம்மா..!
நான் அவனைச் சொன்னேன்...
வெளியில் வந்தேன்...
உள்ளுக்குள் உடைந்தேன் சுக்கலாக..
உண்மையை மறைத்தேன் சிக்கலாக..
முந்திக் கொண்டாள் அவள்..!
மறைமுகமாய் நா நவின்றது அவளுக்கா... எனக்கா...?
மண்ணில் எறிந்தேன்...!
பால்டாயில் புட்டியை..!