மதமாற்றம் மனமாற்றமாகுமா

உலகெங்கும் அடிப்படைவாத குழுக்களின் ஆதிக்கம் அதிகமாகி வரும் இன்று அடிக்கடி ஊடக தலைப்புகளில் தோன்றும் வார்த்தைளில் ஒன்று மதமாற்றம். மதமாற்றம் என்பது நேற்று தோன்றியது அல்ல. என்று இரண்டாவதாக ஒரு மதம் பூமியில் தோன்றியதோ அன்றே மதமாற்றமும் நிகழ தொடங்கிவிட்டது ! மதமாற்றத்துக்கு தனிமனித உணர்வு தொடங்கி சமூகம், பொருளாதாரம் என பல காரணங்கள் உண்டு. ஆனாலும் இன்று மதமாற்றம் அதிகமாக பேசப்படுவதற்கு காரணம் மதம் சார்ந்த அரசியல் மற்றும் கடைக்கோடி வரை பாயும் ஊடக வீச்சு !

ஒரு மொழி, ஒரு மத பெரும்பான்மையை கொண்ட மேற்கத்திய நாடுகள் தொடங்கி உலகின் வேறு எந்த நாட்டையும்விட, உலகின் அனைத்து மதங்களையும் தன்னுள்ளே கொண்டு, சிக்கலான ஜாதி அடுக்குகளுடன் பலமொழி கலாச்சாரங்களை கொண்ட இந்தியாவில் மதமாற்றம் ஏற்படுத்தும் தாக்கமும் அதிர்வும் மிக அதிகம் !

மதங்களின் தோற்றம் மற்றும் தேவை பற்றிய கருத்தை முன்வைப்பது இந்த பதிவின் நோக்கம் அல்ல என்றாலும், சற்றே சுருக்கமாக அதனை இங்கு குறிப்பிடவேண்டியது அவசியமாகிறது... எனவே, ஆத்திக, நாத்திக மற்றும் இரண்டுக்கும் நடுவில் அல்லாடும் அன்பர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்படாமல் இறுதிவரை படித்துவிட்டு பின்னூட்டம் பற்றி யோசிக்க வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள் !

உலகின் ஏனைய உயிர்களைப்போல பசிக்கு வேட்டை, ஆபத்தை உணர்ந்தால் ஓடி ஒளிதல் என்ற அடிப்படை உயிர்ச்சுழலிலிருந்து விடுபட்டு, என்ன செய்தால் உயிரை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் ஆறாம் அறிவு உதித்த தருணத்திலேயே வழிப்பாட்டுக்கான அவசியமும் தோன்றியிருக்க வேண்டும் !

மற்ற உயிரினங்களை அடக்கியும், அழித்தும் மனிதன் தன்னை மேலானவனாய் பாவிக்க தொடங்கிய கணத்தில் தன்னால் அடக்க முடியாத இயற்கை சீற்றங்களை தன்னைவிட மேலானதாக பாவிக்கத்தொடங்கி, அவற்றிலிருந்து தன்னை காத்துக்கொள்ள, அதாவது உயிரை தக்கவைத்துக்கொள்ள தோற்றுவித்ததே வழிப்பாடு ! மதம் தொடங்கி மனிதனின் கண்டுபிடிப்புகள் அனைத்துமே உயிரை தக்கவைத்துக்கொள்வதற்கான போராட்டம்தான்.

மத நம்பிக்கைகளுக்கான அடிப்படை என்ன ? மரணம் பற்றிய பயம். இத்தனை போராட்டமும் வீணா என்ற அச்சம். மரணத்துக்கு பிறகு என்ன என்பதை அறிந்துகொள்ள முடியாததே மத தேடலுக்கான காரணம் !

இரண்டு சூழ்நிலைகளில் மனிதன் மதத்தை உதறத்துணிவான் !

அவன் மரணத்தை வெல்லும் சூழ்நிலையில் ! மரணமே கிடையாது எனும் போது அதற்கு பிறகான சொர்க்கம், நரகம், தீர்ப்பு நாளுக்கெல்லாம் தேவையில்லாதபோது மனிதனுக்கு மதத்தின் தேவை இல்லாமல் போகும் !

அல்லது இறப்புக்கு பின்னர் இதுதான் நடக்கும் எனும்போதும் மதம் மற்றும் மார்க்கங்கள் அவசியமற்று போகலாம் ! உதாரணமாக இறந்தவர்கள் அனைவருக்கும் பூமியை விட மேலான அற்புத உலகம் காத்திருக்கிறது என்பது உறுதிப்பட நிருபிக்கப்படுமானால் மனிதர்கள் மரணத்தைவிரும்பி ஏற்கும் நிலைக்கூட ஏற்படலாம் !

சரி, இனி மதமாற்றத்துக்கு வருவோம்...

இன்று பொதுகருத்தாக இருப்பது போல இந்தியாவில் மதமாற்றம் மற்றும் கட்டாய மதமாற்றம் முகலாயர்கள், ஆங்கிலேயர்களால் மட்டுமே ஆரம்பிக்கப்படவில்லை. இவர்களின் வருகைக்கெல்லாம் முன்னால் இந்திய சமயங்களுக்கிடையேயான மோதல்களுடன் ஒப்பிட்டால் முகலாய, ஆங்கிலேயே காலத்திய மத கொடுமைகள் குறைவுதான் !

முகலாய, ஆங்கிலேய காலத்தில் மதமாற்றத்துக்கான தூண்டிலாக அமைந்தது இந்திய சமூகத்தின் ஜாதிய அடுக்கும், அடக்குமுறையும் ! மெரும்பாலான இந்தியர்கள் இஸ்லாமிய மற்றும் கிருஸ்த்தவ மதங்களுக்கு மாறியதற்கான காரணம் ஜாதிக்கொடுமையே !

ஆனால் மதமாற்றத்தால் மறைந்திருக்க வேண்டிய ஜாதிகள் புதிய மதங்களிலும் குடியேறியதுதான் ஆச்சரியம். தேவாலயங்களில் கீழ்சாதிக்காரர்களுக்காக தனி இடம் ஒதுக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் குறுக்குச்சுவர் கூட எழுப்பப்பட்டது. இதனை எதிர்த்த பாதிரிமார்கள் மாற்றப்பட்டார்கள் ! இந்த அளவுக்கு இல்லையென்றாலும் கூட இந்திய இஸ்லாமிய மார்க்கத்துக்கு என சில பிரிவுகள் உண்டு. தென்னிந்திய மரைக்காயர் முஸ்லிம்கள் வட இந்திய பூர்வீக பதான் முஸ்லீம்களுடன் அவ்வளவாக ஒட்ட மாட்டார்கள். லெப்பை பிரிவும் உண்டு !

புதிய மத தேடலை இரண்டு வகையாக பிரிக்கலாம்...

ஒன்று நாத்திகனின் தேடல். மற்றொன்று ஆத்திகனின் வேறு மத தேடல் !

ஒரு நாத்திகன் தன் அந்திம காலத்தில் ஏதோ ஒரு மதத்தின் மீது பற்றுக்கொள்வது இயல்பானதாகவே தோன்றுகிறது ! காரணம் இந்த பதிவின் ஆரம்பத்தில் சொன்ன மரண பயம் ! வாலிபத்தில் பகுத்தறிவு பேசும் பலருக்கு வயோதிகம் நெருங்க நெருங்க, இறப்புக்கு பின்னர் என்ன என்ற கேள்வி எழும்போது மதத்தின் நினைவும் வந்துவிடுகிறது !

ஆத்திகர்களின் மாற்றத்துக்கு வாழ்க்கை சூழல், தங்கள் மதத்தில் அவர்கள் நடத்தப்படும் முறை என பல காரணங்கள். இனி என்ன செய்வது என தெரியாமல் வாழ்க்கையில் திக்கற்று நிற்கும் தருணங்களிலும், ஏதோ ஒரு காரணத்தால் சொந்த மதத்தை சேர்ந்தவனே தன்னை ஒதுக்கும் நிலையிலும் ஆத்திகன் தன் பூர்வீக மதத்திலிருந்து விடுபட விரும்புகிறான் !

உணர்ச்சிவசப்படாமல் உள்வாங்கி யோசித்தால் மேலே குறிப்பிட்ட இரண்டு பேருமே மனத் தெளிவற்ற நிலையிலேயே மதம் மாறுகின்றனர் !


சீக்கிய குரு நானக்கிடம்,

" உங்கள் புனித புத்தகத்தில் இருப்பது முழுவதையும் ஒரே வரியில் கூறிவிட்டால் உங்கள் மதத்தை ஏற்றுக்கொள்கிறேன் ! "

என நாத்திகர் ஒருவர் கேட்டதாகவும், அதற்கு குரு நானக்...

" மற்றவர்கள் உனக்கு எதை செய்யக்கூடாது என நீ நினைக்கிறாயோ அதனை நீ அவர்களுக்கு செய்யாதே ! அவ்வளவுதான் !! "

எனக்கூறியதாகவும், அதனை கேட்ட நாத்திகர் சீக்கிய மதத்தில் சேர்ந்ததாகவும் ஒரு குட்டிக்கதை உண்டு.

இந்த கதை சீக்கிய மதத்துக்கு மட்டுமல்ல, உலகின் அனைத்து மதங்களின் சாரமும் இதுதான் !

இந்த தெளிவு இயல்பாகவே இருப்பவர்கள் நாத்திகர்களாகவே தொடரலாம்... இல்லாதவர்கள் சொர்க்கம், நரகம் பயத்துடன் ஆத்திகர்களாக அவரவர் மதத்திலேயே இருக்கலாம் என்றாலும் ஒருவன் மாற்றுமதம் ஒன்றினால் ஆத்மார்த்தமாக ஈர்க்கப்பட்டு மாறினால் அது தனிமனித உரிமை. அதை பேச வேறு எவருக்கும் உரிமை கிடையாது ! இதற்கு மேலை நாட்டவரின் மதம் பற்றிய கண்ணோட்டத்தை உதாரணமாக குறிப்பிடலாம்...

அவர்களை தீவிர மத பற்றுடையவர்கள், மிதவாதிகள், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என மூன்று தெளிவான குழுக்களாக பிரித்துவிடலாம். அந்த மூவருக்குமே இறை சார்ந்த நம்பிக்கை அந்தரங்கமானது ! வெளியில் பேசமாட்டார்கள் ! இதில் மிதவாதிகளில் சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு அனைத்து மத தத்துவங்களையும் போதித்து, தங்கள் பிள்ளைகளுக்கான மத தேர்வு உரிமையை அவர்களிடமே விட்டுவிடுவதும் அங்கு சகஜம் !

இங்கு மதமாற்றம் உணர்ச்சியுடன் விளையாடுவதாக அமைந்துவிடுவது சோகம் !
காதலுக்காக மதம் மாறுவதை ஒரு முக்கிய உதாரணமாக குறிப்பிடலாம்...

இதையும் மிக கவனமாக அலச வேண்டும் !

இரு வேறு மதங்களை சேர்ந்த ஜோடி திருமணம் முடிந்து ஒன்றாக பல காலங்கள் வாழ்ந்து, ஒருவர் ஏதோ ஒரு காரணத்தினால் மற்றவரின் மதத்தின்பால் ஈர்க்கப்பட்டு மதம் மாறுவது இயல்பானது ! தனிமனித உரிமை சார்ந்தது.

ஆனால் கண்டதும் காதலாகி, கல்யாணம் நெருங்கியவுடன் மதம் மாறினால்தான் திருமணம் என பெற்றோர்கள் சோல்லிவிட்டார்கள் என உணர்ச்சி மிரட்டலில் இறங்குவது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று ! வேற்றுமத திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்று தெரியும் என்றால், அதனை எதிர்த்து நிற்கவோ, அல்லது எடுத்துச்சொல்லி சம்மதிக்கவைக்கவோ துணிச்சல் இல்லையென்றால் அந்த காதல் எதற்கு ?

காதலித்த காலத்தில் ஒருவர் மற்றொருவரின் மதத்தின் மீது ஆத்மார்த்த பற்றுக்கொண்டிருக்கலாம்தானே என்ற கேள்வி எழுகிறதா ?...

" இரு வேறு மதங்களை சேர்ந்த ஜோடி திருமணம் முடிந்து ஒன்றாக பல காலங்கள் வாழ்ந்து, ஒருவர் ஏதோ ஒரு காரணத்தினால் மற்றவரின் மதத்தின்பால் ஈர்க்கப்பட்டு மதம் மாறுவது இயல்பானது ! தனிமனித உரிமை சார்ந்தது. " ...

அதற்கு காலம் தேவை நண்பர்களே ! தைரியமாய் நின்று பேசக்கூட இடம் கொடுக்காத நம் சமூகத்தில் சில மாதங்களே கடந்த இளம் காதலர்களுக்கு அவரவர் மத தத்ததுவங்களை அலச ஏதய்யா நேரம் ?!!!

காதலுக்காகவும், அரசியலுக்காகவும் மதம் மாறவும், மதம் மாற்றவும் முயற்சிக்கும் வாலிப வயோதிக அன்பர்களே....

காதலிப்பவர்கள் ஓடிப்போயாவது திருமணம் செய்துக்கொண்டு பிள்ளைகள் பெற்று உங்கள் குடும்பத்தை வளர்ப்பதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் ஓட்டு வங்கி வளர்ப்புக்கு பிரியாணி பொட்டலங்களை மட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் ! ( பிரியாணியில் வெஜிடபிளும் இருப்பதால் அனைத்து தரப்புக்கும் இதுவே போதுமானது ! ) உங்கள் ஓட்டு பிச்சைக்கு கட்சியின் கலர்களும், கறைகளும் படிந்த வேட்டியே போதும் ! தயவு செய்து மத சட்டையை கழற்றிவிடுங்கள் !

கடவுள்தான் மதங்களை படைத்தார் என்றால் அந்த மதங்களையும் அவரே பாதுகாத்துக்கொள்வார் !

இருந்த மதத்தின் அருமையை புரிந்துகொள்ளமுடியாத உங்களால் வந்த மதத்தில் எதையும் புரிந்துகொள்ள முடியாது ! இரண்டு மதங்களுமே உங்களால் கேவலப்படுவது மட்டுமே எஞ்சும் !

எழுதியவர் : செல்வமணி (வலைத்தளத்தில் ப (1-Sep-15, 4:44 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 104

சிறந்த கட்டுரைகள்

மேலே