சமநிலையை ஏற்படுத்திவிடலாம்
என் படிப்பு முழுவதும் ஸ்காலர்ஷிப்பும், பேங்க் லோனும், அம்மா அப்பாவின் தியாகத்தாலும் நிறைந்தவை.. ப்ளஸ்2 படித்த போது நடந்த ஒரு சம்பவம்.. இந்த ஜாதிவாரி ரிசர்வேசன் சப்போர்ட் ஆட்களுக்காகத் தான் இந்தப் பதிவு..
ஸ்காலர்ஷிப் வந்துவிட்டதாகவும் 10ம் வகுப்பு வரை உள்ளவர்கள் தாங்களே பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதற்கு மேல் உள்ள ரெண்டுங்கெட்டான் வயசுள்ளவர்கள் பெற்றோரைக் கூட்டி வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பள்ளியில் அன்று அறிவிப்பு செய்தார்கள்.. எனக்கு வாத்தியார் தான் ஃபீஸ் கட்டியிருந்தார்.. இதை வாங்கி அவரிடம் கொடுத்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.. டெய்லி அந்த ஆள் வேற ஒரு மாதிரி பாத்துக்கிட்டே இருந்தார்..
மறுநாள் எங்கள் வகுப்பில் இருந்து ஸ்காலர்ஷிப்புக்கு மனு போட்டிருந்தவர்கள் அனைவரும் காசு கொடுக்கும் அறைக்கு வெளியே பெற்றோரோடு தவமிருந்து கொண்டிருந்தோம். ஜாதி வாரியாக நாங்கலெல்லாம் BC, MBC, SC என வெவ்வேறு தட்டு என்றாலும் அங்கிருக்கும் அனைவரையும் இணைத்தது, கையேந்த வைக்கும் வறுமை என்னும் தட்டு. லோடுமேன், தீப்பெட்டி ஆபிஸ் கூலி, ஃபயர் ஆபிஸ் ஆள், பிரிண்டிங் ப்ரெஸ் பிரிண்டர், கட்டிங் மெஷின் ஓட்டுபவர் என எங்கள் ஊரின் அடித்தட்டு அடையாளமே அங்கு நின்றுகொண்டிருந்தது..
ஸ்காலர்ஷிப் கணக்கை நிர்வகிக்கும் ஆசிரியர் புதியவர். முன்பு இருந்த சொங்கி மாதிரி கிடையாது.. எல்லோரிடமும் தீர விபரம் கேட்டுத்தான் பணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.. நானும் அம்மாவும் அவரது அறையின் உள்ளே சென்றோம்.. அப்பாவை கூட்டி வராததற்குக் கொஞ்சம் வசவு கொடுத்துவிட்டு, அப்பாவின் வேலை, சம்பளம் எல்லாம் விசாரித்து விட்டு, அம்மாவிடம் காசை நீட்டி, என்னை ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போடச்சொன்னார்.. நான் கையெழுத்துப் போடப் போகும் போது அவனை அழைத்தார்..
அவன் மட்டும் தனியாக உள்ளே வந்தான்.. அப்பா, அம்மா யாரும் ஏன் வரவில்லை என்றதற்கு இருவரும் வேலைக்குப் போவதாகச் சொன்னான்.. ரொம்ப கஷ்டப்படுற குடும்பம் போல என நினைத்துவிட்டு, அவன் கையில் காசைக் கொடுத்து, கையெழுத்துப்போடப்போகும் போது, “என்ன வேலடே பாக்குறாங்க?” என்றார்.. “அப்பா ஊராட்சி ஸ்கூல்ல எட்மாஸ்டரு, அம்மா ஐஸ்கூல்ல...” அவன் சொல்லி முடிப்பதற்கு முன் அவன் செவிட்டில் ஒரு அறை விழுந்தது..
”ஏம்லே இங்க நிக்கவனலாம் பாத்தா ஒனக்கு என்ன இளிச்சவாயனுங்க மாரி இருக்கா? கவர்மெண்ட்டு வாத்தியார் மவனுக்கு எதுக்குடே ஸ்காலர்ஷிப்பு?” மீண்டும் கையை ஓங்கினார்..
அவன் அசரவில்லை. “சார் எங்கப்பா சொல்லிருக்கார்.. MBCன்னா ஸ்காலர்ஷிப்பு குடுக்கலாம்னு.. போன வருசம் வரைக்கும் வாங்கிருக்கேன்.. எங்க அக்கா ரெண்டு வருசம் முன்னாடி தான் ப்ளஸ்2 முடிச்சா, அவளும் வாங்கிருக்கா. வேணும்னா ரிஜிஸ்டர்ல பாருங்க” என்று திமிராகச் சொன்னார்.. வாத்தியாருக்குக் கண்கள் சிவந்துவிட்டன, “நீ இப்பச் சொன்னதெல்லாம் பேப்பர்ல எழுதிக்குடு.. நீயும் ஒங்கக்காக்காரியும் வாங்குன மொத்த காசையும் ஃபைனோட திருப்பி கட்ட வச்சி, ஒங்கய்யா வேலையவும் காலி பண்ணுறேன் பாரு” என்று சீறினார்.. பய லேசாகப் பம்மினான்.. இன்னும் ரெண்டு அறை விட்டு அவனின் அப்பாவை அழைத்து வரச்சொன்னார்..
மறுநாள் பள்ளிக்கு வந்த அந்த ஊராட்சி தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியரும் “கவர்மெண்ட்டு ரூல்ஸ் இருக்குல்ல, குடுக்குறதுக்கு என்ன? நான் யாரு தெரியுமா? எங்க சாதிக்காரனப் பத்தித் தெரியுமா? ஒங்க ஆளுக ஸ்கூலுன்னா எங்க பயலுக்கு ஸ்காலர்ஷிப்பு குடுக்க மாட்டியா?” என்றெல்லாம் சாதியை இழுத்து அலம்பல் விட்டார்.. நம்ம வாத்தியார் விடாப்பிடியாகக் ”கொடுக்கவே முடியாது, எவன வேணும்னாலும் பாத்துக்கோ. இல்ல ஸ்காலர்ஷிப் தான் வேணும்னா உன் வேலையை விட்டுட்டு வா தாரேன்” என்று கராராகக் கூறி அனுப்பிவிட்டார்..
அப்போது நினைத்தேன், எதற்கு இவ்வளவு பிரச்சனை பாவம் நம்ம கிளாஸ்காரனுக்கும் கொடுத்திருக்கலாமே என்று.. ஆனால் இன்று தெரிகிறது அவனைப் போன்றப் பலர் தான் அனைத்து ஜாதியிலும் சலுகையை திரும்பத் திரும்ப அனுபவித்து தன் சொந்த ஜாதியைக் கூட முன்னேறவிடாமல் சிதைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று.. அன்று அந்த ஆசிரியர் செய்தது போல் அரசாங்கம் கவனமாக இடஒதுக்கீட்டையும் சலுகையையும் பின்பற்றினாலே ஓரளவு சமநிலையை ஏற்படுத்திவிடலாம் என்பது என் கருத்து & கணிப்பு..

