கல்விக் கடன் எனும் நஞ்சு

இந்தியக் கல்வி முறை மனிதனுக்கு வாழ்க்கையை சொல்லித்தருவதற்கு பதிலாக, மனிதனை எந்திரமாக இயங்க வைக்கவே பயன்படுகிறது. அதுவும் பொருள்தேடும் எந்திரமாக. எதற்கு படிக்கிறோம், ஏன் படிக்க வேண்டும் என்கிற எந்தவிதமான சுய சிந்தனையும் இன்றி லட்சக்கணக்கானவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து தங்கள் பட்டப்படிப்புகளை முடித்து வெளியேறுகிறார்கள். ஏன் படிக்க வேண்டும்? வேலைக்கு செல்ல, நிறைய சம்பாதிக்க, இதனைத் தவிர்த்து யாரிடமாவது வேறு பதில் இருக்கிறதா? இருக்க வாய்ப்பில்லை என்பதைவிட, இருந்தும் பயனில்லை. காரணம், படிப்பதே வேலைக்கு செல்வதற்கும், பணம் சம்பாதிக்கவும்தான் என்று சொல்லித்தரப்படுகிறது. இதற்கு மேலும் வலு சேர்க்கிறது, அரசின் கல்விக் கடன் திட்டம். முன்னாள் மத்திய அமைச்சர் மிக நல்லவர் போல தன்னைக்காட்டிக்கொண்டு, பட்டப்படிப்பு படிக்க விரும்பும் அனைவருக்கும் நிச்சயம் வங்கிகள் கடன் கொடுத்தாக வேண்டும் என்று தொடர்ந்து எச்சரித்துக்கொண்டே இருந்தார். எத்தனை மோசமான திட்டம் இது என்பதைக் கூட புரிந்துக்கொள்ளாமல், எல்லாரும் இதன் சாதகத்தன்மை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி கல்விக் கடன் வாங்கிப்படிக்கும் மாணவர்கள், வேறு வழியின்றி நிச்சயமாக படித்து முடித்ததும் ஒரு நல்ல வேலையில் சேர்ந்தே ஆகவேண்டும். இல்லையென்றால் வாங்கியக் கடனுக்கு வட்டிக் கட்டியே சாகவேண்டியதுதான். ஒரு மாணவன் படித்து முடித்ததும், என்ன செய்யவேண்டும், தான் யாராக வாழ வேண்டும் என்று சிந்திப்பதற்கே இந்த கல்விக்கடன் வழிவிடுவதில்லை. மாறாக, படிக்கும்போது ஒருவித அச்சத்தை மனதில் விதைக்கத்தான் செய்கிறது.

கல்விக்கடன் வாங்குவதற்கு முன்னரே, நன்றாக சிந்தித்து, நாம் வேலைக்கு செல்ல விரும்புகிறோமா, அல்லது வேறு துறையில் சாதிக்க விரும்புகிறோமா என்பதை முடிவு செய்துக்கொண்டு கல்விக்கடன் பெற்றால் பிரச்சனையில்லை என்று நண்பர்கள் எதிர்வாதம் செய்யக்கூடும். ஆனால் அதுதான் இந்தக் கல்விமுறையின் பிரச்சனையே. 25 வயதைத் தாண்டியும், தான் யார் என்பதை அறிந்துக்கொள்ள முடியாத தெளிவைதான் இந்த கல்விமுறை கொடுக்கிறது. அப்படி இருக்க பள்ளிப்படிப்பை முடித்ததும், எப்படி மாணவர்களால் தங்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்க முடியும்? பெற்றோர் சொல்வதையோ, தங்களுக்கு தெரிந்தவர்கள் சொல்வதையோ, ஆசிரியர்கள் சொல்வதையோ, அல்லது தாங்கள் பெரிய படிப்பு என்று தங்கள் அறிவுக்கு உட்பட்டு விரும்புவதையோத்தான் தேர்ந்தெடுக்க முடியும். அதற்கு கல்விக்கடன் கிடைத்தால், யார்தான் மறுப்பார்கள். ஆனால் கல்விக்கடன் என்கிற பெயரில் மாணவர்களின் சிந்திக்கும் திறனை நசுக்கி, அவர்களை தொழில் செய்யும் எந்திரங்களாகவே இந்தக் கல்வி முறை மாற்றிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான உயர்கல்வியை வழங்க வேண்டியது அரசின் கடமை. ஃபின்லான்ட் போன்ற தேசங்கள் எப்படி தங்கள் நாட்டு குடிமகன்களின் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது என்பதை நண்பர்கள் ஒருமுறை ஆராய்ந்துப் பார்க்க வேண்டும். லாபம் தரும் துறையை மட்டுமே அரசு வைத்துக்கொண்டு, மக்களுக்கு சேவை வழங்காமல், தனியார் கல்வி நிறுவனங்கள் கொள்ளை அடிக்க வழிவகை செய்தால், இந்த தேசம் மனிதர்களை இழந்து, எந்திரங்களை மட்டுமே உற்பத்தி செய்துக்கொண்டிருக்கும்.

இலவசமாக வழங்க வேண்டியக் கல்வியை முழுக்க முழுக்க வியாபாரமாக்கிவிட்டு, அதற்கு கடன் தருகிறோம் படித்துக்கொள்ளுங்கள் என்பது எத்தனை பெரிய அயோக்கியத் தனம். இதுதான் உலகமயமாதலின் சாபக்கேடு. வங்கிகள் கொடுக்கும் கடன், திரும்ப கொழுத்திருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு சென்று சேர்கிறது. அதில் இருந்து வெவ்வேறு வகையில் அந்தப் பணம் ஊழலாக பிரிந்து செல்கிறது. இறுதியில் இளைஞர்கள் தங்கள் கனவுகளை தொலைத்து, செக்கு மாடுகளாக தொழில் நிறுவனங்களையே சுற்றி வருகிறார்கள். கல்விக்கடன் என்பது காற்றில் கலந்திருக்கும் நஞ்சுப் போன்றது. அது ஏற்படுத்தவிருக்கும் மோசமான விளைவுகளை, எதிர்கால சந்ததி தாங்குமா என்பதே கேள்விக்குறிதான்.

எழுதியவர் : முகநூல் : அருண் M (3-Sep-15, 12:00 pm)
பார்வை : 547

சிறந்த கட்டுரைகள்

மேலே