மாறுமா நம் கல்வி முறை

PISA.................... Program for International Student Assessment ....என்பதன் சுருக்கம்தான் PISA.

உலகளவிலான ஒரு தனிப்பட்ட அமைப்பு இது.

மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதினைந்து வயது நிரம்பிய பள்ளி மாணவர்களிடையே ஒரு தேர்வு நடத்துகிறார்கள். மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்களால் இந்தத் தேர்வை சமாளிக்க முடியாது.

சிந்திக்கும் திறன் அடிப்படையிலான தேர்வு இது.

இந்த அமைப்பு யாரையும் வெற்றிலைபாக்கு வைத்து அழைப்பதில்லை. எந்த நாடு வேண்டுமானாலும் தேர்வு முறையில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இந்த அமைப்பினர் தேர்வு நடத்தி மாணவர்களின் திறனை அறிந்து ஒரு அறிக்கையைத் தருவார்களே தவிர எந்த அறிவுரையும் கொடுப்பதில்லை.

2009 ஆம் ஆண்டு இந்தத் தேர்வில் இந்தியா கலந்து கொண்டது.

Pilot mode. முதலில் தமிழ்நாடு மற்றும் ஹிமாச்சலப்பிரதேசம் மாநிலங்கள் மட்டும் பங்கேற்கட்டும் அடுத்த முறை வேண்டுமானால் இந்தியா முழுவதும் கலந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு முடிவு செய்தது. இந்த இரண்டு மாநிலங்களும்தான் மனிதவள மேம்பாட்டில் மிகச் சிறந்த வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்பதால்தான் இந்த ஏற்பாடு. தேர்வு முடிவுகள் பல்லைக் கெஞ்சின.

74 நாடுகள் பங்கேற்ற இந்தத் தேர்வில் இந்தியா 73வது இடத்தைப் பெற்றது. சீனாக்காரனுக்கு ஆங்கிலம் தெரியாது என்று கூப்பாடு போடுகிறோம். அவனது மாணவர்கள்தான் இந்தத் தேர்வில் கொடிகட்டினார்கள்.

சிந்திக்கும் திறனேயில்லாத வெறும் அடிமைகளை உருவாக்கும் கல்வித்தரத்தை வைத்துக் கொண்டுதான் இந்தத் தனியார் பள்ளிகள் திருடித் தின்கிறார்கள். ஒரு முறை அடி வாங்கியதே போதும் என்று இந்தியா விலகிக் கொண்டது. 2012 ஆம் ஆண்டுத் தேர்வில் கலந்து கொள்ளவேயில்லை. 2015 ஆம் ஆண்டுத் தேர்விலும் கலந்து கொள்ளப் போவதில்லை. குறை இருப்பது சகஜம்தான். ஆனால் அதைத் திருத்திக் கொள்வதுதானே சரியானதாக இருக்கும்? ம்ஹூம். எல்லாவற்றையும் மூடி வைத்துக் கொள்வோம். எவனுக்கும் தெரியக் கூடாது.

வெளியில் ஒரே ஆர்ப்பாட்டம்தான். ‘நாங்கள்தான் தில்லாலங்கடிகள்’ என்று ஒரே அட்டகாசம்தான். கோடிக்கணக்கில் கொண்டு போய் ஐஐடியில் கொட்டுகிறார்கள். அப்படியே கொட்டினாலும் ஒரு ஐஐடி கூட உலகின் மிகச் சிறந்த முதல் இருநூறு கல்லூரிகளில் இல்லை என்பதுதான் நிதர்சனம். சீனாவும் ஜப்பானும் தங்களது அடிப்படையான கல்வித்தரத்தில் மிகச் சிறந்த கவனத்தைச் செலுத்துகின்றன. ஆனால் நமது அடிப்படைக் கல்வித்தரமே ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. ஆரம்பக்கல்வியிலிருந்து பட்டதாரிப் படிப்பு வரை எல்லா மட்டங்களிலும் ஊத்தை வாய்தான் நம்முடையது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டோம்.

எழுதியவர் : முகநூல் பதிவு : திவ்ய தர்ஷ (3-Sep-15, 12:18 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 1506

மேலே