ஆசான்

ஆழ் மனத்தின் ஆசைகள்
கனவுகளாய் பரிணமிக்குமாம் !
தொடர் கனவுகள் சிலசமயம்
நனவுகளாய் நடக்குமாம் !
எனது தொடர் கனவொன்று
நனவான கதை -

மூன்றாம் வகுப்பின்
சுந்தர வாத்தியார் !
வெள்ளை முழுக்கைச் சட்டையும்
வேட்டியும் குடையும்தான்
அவரது அடையாளங்கள் !

காலங்கள் கடந்தபோதும்
சுந்தர வாத்தியார் மட்டும்
அவரது அடையாளங்கள் மாறாமல்
என் கனவுகளில் வருவதுண்டு !

நகரத்தின் புறநகர்ப் பகுதியில்
ஊராட்சித் தொடக்கப் பள்ளி !
மங்களூர் ஓடு வேய்ந்த
ஒரு பட்டிதொட்டி வீடு
பள்ளியாய் மாறியிருந்தது !
மூங்கிலில் முடைந்த தடுப்புக்கள்
வகுப்பறைகளாய் வகுந்திருந்தன !

அகர முதல உயிரெழுத்து
ஆத்திச் சூடியாய்
அகத்தின் கல்வெட்டில்
ஆழமாய் பதித்திடும்
தமிழ்ப் பாடம் -
ஈசாப் நீதிக் கதைகள் -
ஈரேழு பதினான்கு என
வாய்ப்பாட்டு மனப்பாடம் -
என்ன எதற்கு எங்கிருந்து
என இனம்புரியா சுதந்திரம்
வாங்கித்தந்த காந்தித்தாத்தா -
கிழக்கே உதிக்கும் சூரியன் -
எல்லாப் பாடங்களுக்கும்
சுந்தர வாத்தியார்தான் !

பின்னாட்களில்
மனக் குழப்பம் நேர்கையில்
என்னுள் எட்டிப் பார்க்கும்
ஒவ்வொரு குறளிலும்
சுந்தர வாத்தியார் குரல்தான் !

வசிப்பிடம் பெயர்ந்து
வடக்கே சென்றபின்
விடுமுறை நாட்களில்
வேர்கள் தேடப் புறப்பட்டேன்
நாற்பதாண்டுகள் கழித்து !

அடையாளம் தெரியாமல்
மாறிப் போயிருந்த ஊருக்குள்
அடையாளம் தொலைத்த நான்
நடந்தபடி செல்கையில்
எதிரே-
வெள்ளை முழுக்கைச் சட்டை
வேட்டி குடை சகிதம்
சுந்தர வாத்தியார் !
சில்லிட்டுப் போனது மனது !
வணங்கியபின் அறிமுகம் செய்ய
கண்ணாடி போட்டிருந்த என்னை
கண்களை இடுக்கிப் பார்த்து
நலன்கள் விசாரித்து
நானே மறந்துபோன
என் வகுப்புத் தோழர்கள்
பெயரை ஒவ்வொன்றாய்
கூறி நினைவு கூர்ந்தார் !

நாட்கள் உருண்டோட
நண்பன் ஒருவன்
அலட்சியமாய் அறிவித்தான்
அந்த எழுத்தறிவித்த
இறைவனின் மறைவுச்
செய்தியை -
வீட்டு விசேஷங்கள்
நாட்டு நடப்பென நீண்ட
தொலைபேசி உரையாடல்
காற்றில் எங்கோ கரைந்தது !
கால் பதித்த தரை நழுவியது!

இப்போதெல்லாம் -
சுந்தர வாத்தியார்
என் கனவில் வருவதில்லை !


==============================================================================================#மீள் பதிவு #
(இந்தப் பதிவில் வரும் பெயரும் சம்பவங்களும் முற்றிலும் உண்மை (சில கவியலங்கார சொற்களை தவிர )

எழுதியவர் : ஜி ராஜன் (5-Sep-15, 10:55 am)
Tanglish : aasaan
பார்வை : 251

மேலே