பேராசை தான்
ஆசை தான் எனக்கு...
பேராசையாய் உள்ளுக்குள்
குவிந்து கிடக்கிறது
நெடுநாளாய்...
சீறி எழும் என் சினத்தை
நனைத்து நமுத்து
துடைத்தெறியும் என்
கோழைத்தனத்தை தூக்கி
எறிந்திட ஆசை...
குழந்தை போலே
துள்ளி எழும் மனதை
துயில் பாடி
உறங்க வைக்கும் என்
வயதை சில நொடிகளுக்காவது
மறந்து விட ஆசை...நட்பின்
மடி சாய்ந்து
விழி மூடி கரம் கோர்த்து
அன்பின் துளி ஸ்பரிசிக்க
விடாமல் என்னை சிறைபிடித்த
கௌரவத்தை துண்டுதுண்டாக்க
நீண்ட நாளாய் ஆசை...
எனக்கு பிடிக்காத விஷயங்களை
பிடிக்காது என்று சத்தமாக
உரைத்துவிட்டு இத்தனை
நாள் நான் மூடிவைத்த
என் ஆசைகளை மனம்திறந்து
கத்தி சொல்ல ஆசை...
என் அடையாளத்தை மறைத்துக்கொண்டு
பொய்யும் போலியுமாய்
நான் தரித்திருக்கும் முகமூடியை
கிழித்து எறிய
என் நெஞ்சுக்குள்ளே நெடுநாளாய்
புதைத்து வைத்திருக்கிறேன்
ஆசையிலும் மிக பெரிய பேராசை....