காலை-மாலை சாலை

" ' டேய் போலீஸ் டா , டப்புன்னு இறங்கிக்கோ !! டிரிபிள்ஸ் மாட்னோம் பைன் தான், தெரு மொனைல ஏறிக்கோ... !!'
'மாப்ள போலீஸ் !! டாங்குக்கு பாதுகாப்பு போதும், ஹெல்மட்ட தலைல மாட்டி சட்டப் பையல இருக்குற 100 ரூபாய காப்பதிக்கோ!! '
'ப்ரோ (Bro) , சீட் பெல்ட் சூன் ! அங்க பாரு போலீஸ் !!' இப்படி பட்ட ஏக வசனங்களை அன்றாடம் நம் பயணங்களில் பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கிறோம், நாம் விதிகளுக்கு பயப்படுவதை விட காவலர்களுக்கு பயப்படுகிறோம்"

கடந்த வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாக (ஜனவரி 11- 17 ) இந்தியா முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரமாக மக்களிடம் பல அமைப்புகளும் , காவல் துறையினரும் இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்கள். சென்னையிலும் இந்த விழிப்புணர்வை பரவலாக பரப்புரை செய்தனர், தலைகவசம் அணியாதவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் காவல் துறை வழங்கியது குறிப்பிடத்தக்கது .கல்லூரி மாணாக்கர்கள் சென்னை சென்ட்ரலில் 'மைம்' என்று சொல்லக் கூடிய நாடக முறையில் தலைக்கவசத்தின் அவசியம், நான்கு சக்கர வாகனத்தின் இருக்கை பட்டை அணிவதின் முக்கியத்துவம், அலைப்பேசியுடன் வண்டி ஓட்ட கூடாது என பலவற்றை நிகழ்த்தினர், இது போல பல அமைப்புகளாலும் தமிழகமெங்கும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. வானொலியிலும் தொகுப்பாளர்கள் அதன் முக்கியத்துவத்தை கூறினர்.
இது ஒரு பக்கம் இருக்க, நமக்கு அடிப்படை விழிப்புணர்வு இருகிறதா ? என்ற கேள்வி நமக்கு நாமே எழுப்ப வேண்டும். நம் நலன் கருதியே காவலர்கள் இத்தகைய அபராதங்களை விதிக்கிறார்கள் என்பதை அம்னிஷியா நோயாளியாக மறக்கின்றனர்.தலைக்கவசம் அணியாமல் அவர்களைக் கண்டு பயந்து மறைகின்றனர், மேலும் பலர் வேகம் கூட்டி தப்பித்து மார் தட்டி கொள்கிறார்கள்,இன்னும் சிலர் அந்த வேகத்தால் விபத்திலும் சிக்குகிறார்கள்.
2013 இல் தமிழகத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களில் , 66238 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன அதில் 14504 நபர்கள் உயிர் இழத்து இருக்கிறார்கள், கடந்த எட்டு ஆண்டுகளில் சராசரியாக 60,000 க்கும் மேல் விபத்துக்கள் 10,000 க்கும் மேலாக உயிரிழப்புகள் என்று தெரிவிக்கின்றன. இத்தகைய செய்தி மனதை கனப்படுத்துவதோடு வருத்தத்திற்கும் தள்ளும் ஆனால் சில மணி துளிகளில் நாம் அதை மறந்திடுவோம் அதற்காக தான் சாலைப் பாதுகாப்புக்கென விழிப்புணர்வு முகாம்கள் ஆங்கங்கே நடத்தப்படுகின்றன, காவல் துறை சிக்னல்களில் பதாகைகள் தலைக்கவசத்தின் அவசியம், மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது என்று பல எச்சரிக்கை வகுத்தலும் நாம் மதிக்கிறோமா என்பது கேள்வி குறியே!
இன்றைய நிலையில் மக்கள் சிலர் அல்ல.. அல்ல.. பலர் அலைப்பேசியில் உரையாடியவாரே வண்டியோட்டுவது, பாட்டுக் கேட்டவாரே இருசக்கர வாகனத்தில் பயணிப்பது,எதிரே வண்டி வருகிறதா இல்லையா என்று பார்க்காமல் சாலையில் நடத்துக் கொண்டே அலைபேசியை அலாவுதீன் விளக்காக தேய்ப்பது , சிக்னலில் பச்சை விளக்கு விழுவதற்குள் மக்களிடம் பொறுமை விழுந்துவிடும், குடித்து விட்டு வண்டியோட்டுவது , வண்டி நெரிசலின் போது சாலைகளில் வண்டி ஓட்டுவதை விட நடைபாதையில் ஓட்டுவார்கள் அப்படி ஐந்து நிமிடங்கள் முன் செல்வதில் என்ன தான் பெருமையோ! குறிப்பாக சில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை வளைத்து நெளித்து வேகமே தோற்கும் அளவிற்கு நெரிசலில் ஓட்டுவார்கள், இந்த க்ஷணத்தில் ஒரு கைக்குழந்தை தாயின் மடியில் பயணிக்கலாம், முதியவர் மெதுவாக செல்லலாம் என்பதை யார் சொல்வது ? இதைப் போல நாம் அன்றாடம் பல சாலை விதிகளையும் மதிக்காமல் மிதிப்போம்.சாலைகளில் வாகனத்தின் வேகத்தாலும் அவசரத்தாலும் நம் சக மனிதனின் கனவு நிஜத்தில் குருதியாகிறது. இச்செயல்களை விட்டொழிப்பதற்கு அவரவரின் சுயவுணர்வினால் தான் முடியும், தங்களின் மனதிற்கு தெரியும் சரி எது தவறு எது என்று.
பத்திரிகை, வானொலி , தொலைகாட்சி என பல ஊடகங்கள் விபத்துக்களைப் பற்றியும் அதன் விழிப்புணர்வைப் பற்றியும் வலியுறுத்தி வருகிறதை நாம் பார்க்க மட்டும்மே செய்கிறோம்! யாரவது சாலையில் வேகமாகவோ தவறாகவோ வாகனம் ஓட்டி நம் அருகே நின்றால், நமக்கு கோபம் பீறிக்கொண்டு வரும் அதுவும் அந்த ஆசாமி கண் மறையும் தூரம் போனால் "எப்படி போறானுங்க பாருங்க சார்! இவனுங்கள திருத்தவே முடியாது" என்று அருகாமையில் புலம்புவார். திட்டுவது , வசைப்பாடுவது என போகாமல் "ப்ளீஸ் மெதுவா போங்க" என்று சொல்லுங்கள் நம்மிடம் மனிதம் வேகமாகும். குறிப்பாக விபத்து நேரத்தில் சிலர் காப்பாற்ற முயற்சிக்காமல் அலைப்பேசி மூலம் சுழலை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர செய்வார்கள் இந்த அவலத்திற்கு டிஸ்லைக் மட்டுமே! இந்த நிலை மக்களிடையே மாறும் என நம்புவோம்.திரைப்படங்களிலும் சாலைப் பாதுகாப்பைப் பற்றி மிக முக்கிய பதிவு இருக்கிறது, சமீபத்தில் வெளியான மிஷ்கின் அவர்கள் இயக்கிய 'பிசாசு', சரவணன் இயக்கிய 'எங்கேயும் எப்போதும்' , கோகுல் இயக்கிய 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஆகிய திரைப்படங்களில் சாலைப்பதுகாப்பின் சிறந்த பரப்புரைகளை காணலாம். நேச உறவுகளை மனிதில் கொண்டு கடந்த வாரம் மட்டும் அல்ல மீதமுள்ள 51 வாரமும் சாலைப்பாதுகாப்பிற்கு ஒவ்வொருவரும் பரப்புரை செய்வோம். காவல் துறையினரக்கு உதவுவோம் , சாலை விதிகளைக் கடைப்பிடிப்போம், சாலைப்பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு !!

சாலையில் நிதானம்
அதுவே
வாழ்கையில் பிரதானம்!!

எழுதியவர் : பவித்ரன் (5-Sep-15, 11:34 pm)
சேர்த்தது : pavithran
பார்வை : 581

மேலே