பாவைக்கூத்திற்கு பார்வைப்படுமா

" 'சமீபத்துல ஒரு அனிமேஷன் படம் பார்த்தேன் சார் , அடடா !! என்னமா எடுத்திருக்காங்க , வெளிநாட்டுகாரனால தான் இப்படி யோசிக்க முடியும் சார் !' என்றார் ஒருவர். இதற்கு பதிலாக இன்னொருவர் 'நம்ம தாங்க அனிமேஷன், கார்டூனுக்கெல்லாம் குரு; பாவைக்கூத்து தெரியுமா ?? அட பொம்மலாட்டம் ங்க! பாவைக்கூத்தோட பரிணாம வளர்ச்சி தான் இந்த மாதிரி வேறரூபத்துல இருக்கு' "

இயல், இசை, நாடகம் என்பது முத்தமிழ் .நாடகம் எனபது ஆடலால், நடிப்பால் உணர்த்தப்படும் தமிழ். நாடகத்தில் ஓர் அங்கம் 'பாவைக்கூத்து', கிராமியக் கலைகளில் ஒன்று; நமது பாரம்பரியக் கலை. நம்மில் பலருக்கு 'பாவைக்கூத்து' என்ற கலை இருக்கிறதே தெரியாது அதுவும் இக்காலக்கட்டத்தில் சொல்லவா வேண்டும். பாவைக்கூத்தைப் போல் பல கூத்துகள் திரைப்படத்தின் வளர்ச்சியாலும், தொலைக்காட்சியின் ஆதிக்கத்தாலும் குத்து வாங்கி அடிபட்டு போயின. நமது கலையைப் பற்றி அறிவதும் , அதைப் பேணிக் காப்பதும் நம் தலையாய கடமையாகும்.

பாவைக்கூத்து என்றல் என்ன ?
உயிரற்ற பாவைகளை உயிருள்ள பாத்திரங்களைப் போல இயக்கி நிகழ்த்தப்படும் கூத்து 'பாவைக்கூத்து', இதை இரண்டு கூத்து முறைகளாக பிரிக்கலாம். ஒன்று 'தோற்பாவைக்கூத்து', இரண்டு 'மரப்பாவைக்கூத்து'.

தோற்பாவைக்கூத்து :
தோலினால் செய்யப் பெற்ற பாவைகளின் நிழலை மையப்படுத்தி அமைவதால் இப்பெயர் பெற்றது. பல வண்ணங்களில் வரையப்பட்டு விளக்கின் ஒளியில் வெள்ளைத் திரையின் அதன் நிழல் தெரியுமாறு ஆட்டி அசைத்து நிகழ்த்துவது தோற்பாவைக்கூத்தின் முறை. பெரும்பாலும் புராண கதைகளை அரங்கேற்றுவார்கள், கதைகளில் இடம் பெறும் பாத்திரங்களுக்கேற்ப பதப்படுத்தப்பட்ட ஆட்டுத் தோலில் வரையப்பட்டு அதற்குரிய அளவில் வெட்டப்படும், பாவைகளின் கீழே துடுப்பு போல் இணைக்கப்பட்டிருக்கும் அதை பாவையாட்டியின் திறமையான செயல்பாட்டினால் இயக்கம் பெற்று, திரையில் நிழல் வடிவங்களாகப் படிமம் பெறும்.
பாவைக்கூத்து உயிருள்ள நாடகத்தின் நிழல் வடிவம், இதற்கு பெரியளவில் கலைஞர்களோ மேடையோ தேவைப்படாது, சிறிய இடமிருந்தால் போதுமானது. பாவைகள் பின்னாலிருந்து இயக்கும் கலைஞர்களின் சிந்தனைகளும், எண்ணங்களும் பாவைகள் வழியே வெளிப்படுகின்றன. பாவைகளை உயிருள்ள கதைப் பாத்திரங்களாகவே பார்வையாளர்கள் எண்ணும் அளவிற்கு நேர்த்தியாகத் திகழும்.அக்காலக்கட்டத்தில் பெரியக் கருத்துக்களை எளிய முறை பிரச்சாரங்களாக மக்களுக்கு சென்று சேர்த்தது தோற்பாவைக்கூத்து. மேலும் சுதந்திர போராட்டத்தின் போது பிரச்சார ஊடகமாகவும் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது .
'அழகி' படத்தில் 'ஒளியிலே தெரிவது தேவதையா' என்ற பாடலில் தங்கர் பச்சான் அவர்கள் தோற்பாவைக்கூத்தைப் பயன்படுதிருப்பார்கள் மற்றும் 'தசாவதாரம்' படத்திலும் 'முகுந்தா முகுந்தா' பாடலிலும் காணலாம்.

மரப்பவைக்கூத்து:
மரத்தை நீரில் நன்றாக ஊறவிட்டு பின்னர் காய வைத்து, கதைப் பாத்திரங்கள் ஆணோ, பெண்ணோ அதற்கேற்ப வடிவம் அமைத்து வண்ணம் பூசுவார்கள். தலைப்பகுதி, உதடு , மூக்கு , கன்னம் போன்றன அமைக்கப்படும் .மார்புப் பகுதியில் துணி சுற்றப்படும். பொம்மையின் முதுகில் 6 அங்குல துவாரம் இடம் பெற்று தலை, கை, கால் ஆகிய உறுப்புகள் ஒரு இணைப்பின் மூலம் இழுத்துக் கட்டப்படும். பொம்மைகளின் உயரம் 1.5 அடி முதல் 3 அடி வரையிருக்கும். பொம்மைகளின் இணைப்பில் பிணைக்கப்படும் ஆதாரம் 'சுண்டுக் கயிறு' எனப்படும். பொம்மையின் தலை, கை, கால் , முதுகு ஆகியவற்றில் பிணைக்கப்பட்டுள்ள சுண்டுக் கயிறுகளின் மற்றொரு முனை 1/2 அடி நீளமுள்ள மூங்கில் குச்சிகளில் கட்டப்பெறும் . பாவையாட்டி இக்குச்சிகளைப் பிடித்துக் கொண்டு கயிறுகளை அசைக்க பாவைகள் இயங்கத் தொடங்கும், இதற்கான மேடை பொதுவாக 12 அடி நீள அகலமான மேடையில் 8 அடி உயரத்தில் வேயப்படுகிறது . மேடையின் முன்புறத்தில் பாவைகளை ஆட்டுவதற்கு 1.5 அடி இடைவெளி விட்டுக் கறுப்புத் துணியால் மறைக்கப்படுகிறது, இதனால் பாவையாட்டியின் அசைவுகள் வெளிப்படாது. மரப்பாவைகூத்திற்கும், தோற்பாவைக்கூத்திற்கும் பாவைகள் தான் வேறுபாடே தவிர படைப்பு நிலையில் பெரிய வேறுபாடுகள் இல்லை.திருக்குறளிலும் மரப்பவைகூத்தின் பதிவிருக்கும்.

"நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று."

சமீபத்தில் வெளியான கரு. பழனியப்பன் இயக்கிய ' ஜன்னல் ஓரம்' படத்தின் ட்ரைலர் மரப்பாவைக்கூத்து பாணியில் வெளிவந்திருக்கும். வெகு சில இயக்குனர்கள் மட்டுமே இக்கலையை மறவாமல் படத்தில் கோர்த்து அக்கலைஞர்களுக்கு உரிய இடம் கொடுப்பார்கள் , அது பாராட்டுக்குரியது.

ஒரு காலக்கட்டத்தில் பாவைக்கூத்து மக்களின் பொழுதுப்போக்காகவும் , செய்திகளை அவர்களிடையே தெரிவிக்கும் ஊடகமாகவும் செயல்பட்டுள்ளது. இத்தகைய கலைகள் இருகிறதா என்ற கேள்வி இளைய சமூதாயத்திடம் அதிகமுள்ளது மேலும் இக்கலைகள் அழிவில் இருக்கிறது என்பதையும் மறுக்கமுடியாத உண்மை. பாவைக்கூத்துப் போன்ற பல கிராமிய கலைகளையும் அக்கலைஞர்களையும் நாளடைவில் இழந்துவிடக் கூடாது, இக்கலையை பரம்பரை பரம்பரையாக அரங்கேற்றுவோர் குறைந்து கொண்டே வருகிறார்கள், இதை காப்பாற்றுவது நமது கடமையாகும். பாவைக்கூத்தை பள்ளி, கல்லூரிகளின் விழாவில் அரங்கேற்ற வேண்டும் அதுமட்டுமல்லாமல் நல்ல கலைஞர்களை கொண்டு மாணவர்களுக்கு கற்று கொடுத்தால் பழையக் கலை புதுக் கலையாக உருமாறும்.
இப்போதைய ஊடகங்கள் குறும்படம், நடனம் , இசை என ஒவ்வொன்றுக்கு போட்டிகள் வைத்து திகட்டி போயிருக்கும் சூழலில், பாவைக்கூத்திற்கான போட்டிகளோ அல்லது அரை மணிநேரம் அதற்கான நிகழ்ச்சியையோ அடித்தளமாக கொடுத்தால் பாவைக்கூத்து புத்துயிர் பெறும், அக்கலைஞர்களின் திறமைகளை பரைசாற்றும் விதமாக மறு விதையாக அமையும். நலிந்த கிராமிய கலைகளுக்கு சத்துணவு நம் ஊக்கம் தானே !...
வரும் 29-ல் சுற்றுலா தொழில் பொருட்காட்சி சென்னை தீவுத் திடலில் தொடங்குகிறது, அதில் பல கிராமிய கலைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, அவசியம் பாவைக்கூத்தின் நேர்த்தியை கண்டு மகிழுங்கள்.

"உயுரற்ற பாவைகளுக்கு ஜீவன் கொடுப்போம்,
கிராமிய கலைகளைக் கொண்டாடுவோம் "

எழுதியவர் : பவித்ரன் (5-Sep-15, 11:32 pm)
சேர்த்தது : pavithran
பார்வை : 247

மேலே