கம்பரச மயக்கம்

சோர்ந்த தென்றல் உணர்வு கொள்ளுமிடம்
சேர்ந்த குயில்கள் இதமான இசைபாட
நேர்ந்த மாற்றம் என்னில் நிலைக்க மனம்
சார்ந்த சயனம் சடுதியில் கலைத்தேன்!!!

கானம் கொண்டு துவக்கிய நாளை
நானும் இன்று இனிதாய் கடத்த
வேணும் என்றே சிந்தனை செய்து
தேனும் தோற்கும் கவியை எடுத்தேன்!!

செய்யுள் சிறக்க மாயம் செய்த
தெய்வ கவிசெய் கம்ப ரசத்திலே
மையோ மரகதமோ மரிகடலோ மழைமுகிலோ
ஐயோ என்தமிழ் அமுதுண்டு மரித்தேன்

அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சென்றார்
அளவிலா துண்டுனான் இன்பம் நிறைகண்டேன்
செலவிலா போதை கவியிலே நிறைந்திருக்க
உலகெலாம் மதுவை கடைகளில் கேட்பதேனோ!!!

மயக்கம் எதுவென்று என்னிடம் கேட்டால்
உனக்கு வேண்டினால் உண்டுபார் தெரியும்
என்றுதான் சொல்லுவேன் சுயநலத் திலன்று
உண்ட போதையின் வீரிய விளைவு!!!

எழுதியவர் : கார்த்தி கண்ணதாசன் (6-Sep-15, 10:50 am)
பார்வை : 189

மேலே