வேதனைப் பாடல்களும், விளங்காத பாடத் திட்டங்களும்

திருமதி சங்கமித்ரா நாகராஜன் அவர்களின் குழந்தைப்பாடலா, ஒப்பாரிப் பாடலா என்ற படைப்பை ஆடிட்டர் ஐயாவின் வழங்களில் காலங்கடந்து பார்த்தேன்.

அவர்கள் சொன்னது போல ”ரிங்கா ரிங்கா ரோசஸ்” மட்டுமல்ல இன்னும் எத்தனையோ கய்யா முய்யா, ஹாஹா ஹா, ஹோ ஹோ ஹோ என ஆங்கில மழலைப் பாடல்கள் தேவையில்லாத அலங்காரத் தோரணைகளோடு, குழந்தைகளின் மனதில் விதைக்கப் பட்டுத்தான் வருகிறது.

உதாரணத்திற்காக சிலவற்றை இங்கே உங்கள் முன் வைக்கிறேன் ( நன்றி விளாமரத்தோட்டத்து சுருதி பாப்பா).

”ஜேக் அண்ட் ஜில்” என்ற மழலையர் பாடல். பாப்பா சொன்ன பாடல் அர்த்தம் கேட்டு அதை எழுதியவர் மீது கண்டபடி கோபம் வருகிறது. இந்தப் பாடலை எழுதிய புத்திசாலியைக் கேள்வி கேட்க வேண்டும். அதை நம் நாட்டில் பாடமாகக் கொண்டு வந்த மேதாவிகளைக் கேள்வி கேட்க வேண்டும்

பூமி மட்டத்தில் ஆறு குளம் ஏரி என்று நீர் ஆதாரங்கள் பல இருக்க, நீருக்காக எதற்கு குழந்தைகளை மலை உச்சிக்குச் சென்று கால் உடைத்து உருண்டு வரச்செய்ய வேண்டும்..? சொன்னதைச் செய்யும் குழந்தைகள் இதுபோல் செய்தாலும் செய்யும். ஏனென்றால் அந்தப் பருவம் அப்படி. பாடலாகப் பாடும் குழந்தைகள், பாடல் ஆர்வத்தில் மலை உச்சிக்கு சென்று உருண்டு வந்து அதன் விளைவுகளில் பெற்றோர்கள் ஒப்பாரி வைக்கவா? .(கிராமத்தான் என்பதால் கோபம் தாறுமாறாக வருகிறது. அதிகம் படிக்காத என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உண்மையில் இந்தப் பாடலுக்கு வேறு பொருள் இருந்தால் படித்த பெருமக்கள் கூறுங்கள்)

இதே போல் இன்னொரு பாடல் ”ரெய்ன் ரெய்ன் கோ அவே..”. மழையை நம்பி பயிர் செய்யும் நம் நாட்டில் மழையே மழையே தூரப்போ என்று மழையைத் துரத்தியடிக்கும் இந்தப் பாடல் தேவைதானா?

ஏதோ சொற்ப மழையை நம்பி சோளமாவது போட்டு, நாங்கள் குடும்பத்தை சமாளித்து வருகிறோம். அதில் மண்ணள்ளிப் போடுவதுபோல் அமைந்த இந்தப்பாடல் நம் பிள்ளைகளுக்குத் தேவைதானா?

ஒருவகையில் பார்த்தால், கிராமத்தில் இருக்கும் நாங்கள் ஒருபடி மேல் என்று நினைக்கிறேன். காரணம், குழந்தைகள் பாடும் ஆங்கிலப் பாடலுக்கான விளக்கப் பொருள் என்ன என்று கேட்டு, அது தேவைதானா என்று ஆராய்கிறோம். ஆனால் ஆங்கில மோகத்தில் இருக்கும், மெத்தப் படித்த நகரத்துப் பெற்றோர் பலர், ஆங்கிலம் பாடும் தன் பிள்ளைகளைப் பார்த்து பெருமைப் படுகிறார்கள். அந்தப் பாடலின் பொருள், அப்பாடல் சொல்லும் கருத்து இவற்றை நினைத்துக் கூடப் பார்ப்பதற்கு நேரமில்லை.(அதனால்தான் நாங்கள் இப்படி இருக்கிறோமோ?)

ஆங்கில நாடுகளைச் சேர்ந்த அவர்கள் எழுதுவதை விட, மிக அழகாக நம் நாட்டுச் சூழ் நிலை,கலாச்சாரத்துக்கு ஏற்ப எழுதும் எத்தனையோ அறிஞர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களை வைத்து வடிவமைத்தால் அது தீண்டத் தகாத பாடலாகி விடுமா அல்லது அதற்கு இந்திய சட்டம் ஒத்துக்கொள்ளாதா?.

உதாரணத்துக்குப் பல ஆங்கிலப் பாடல்கள், நம் குழந்தைகளின் நாக்கில் இறுமாப்போடு அமர்ந்துகொண்டு தமிழை ஏளனமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலை நன்றாகவே தெரிகிறது

நம் நாட்டுக்கும் கலாச்சாரத்துக்கும் ஒத்துப் போகாத பல ஆங்கிலப் பாடல்களின் ஒலி பெருக்கிகளாக இருக்கும் அவர்களின் பிள்ளைகளைப் பார்த்து, நாங்கள் பரிதாபப் படுகிறோம். அவர்கள், அதை பெருமை என நினைக்கிறார்கள்.

மொழிகள் மொழிகளாக இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக மற்ற மொழிகளின் மோகத்தில், தமிழை ஒரு அசிங்கப் பொருளாகப் பார்க்கும் நிலை இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அது மாறிக்கொண்டிருக்கிறதா என்றால், அதற்கு அதிகம் படிக்காத என் பதில் செல்லாது செல்லாது என, எங்கள் ஊர் நாட்டாமையே சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

பாரதியார் கூறியது போல, பல மொழிகளைக் கற்பதில் தவறில்லை. அந்த மொழிகளில் உள்ள உயர்ந்தவற்றை, நம் மொழியில் மொழி பெயர்த்து, நம் மக்களுக்கு அறியப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சொல்லப்பட்ட கருத்து. அதை தவறாகப் புரிந்து கொண்டதால் என்னவோ, தமிழை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு, ஆங்கிலத்தை உயரத்தில் வைத்து கவுரவமான மொழி என்று பட்டம் கொடுத்து அழகு பார்க்கும் மனிதர்கள் அதிகமாகவே காணப்படுகிறார்கள்

இன்னொன்று, .இன்றைய பாடத் திட்டங்களை வடிவமைக்கும் கல்வியாளர்களின் கால் பிடித்துக் கேட்டுக் கொள்கிறேன். எதற்கும் உதவாத இதுபோன்ற ஆங்கிலப் பாடல்களையும் தேவையற்ற பாடங்களையும், பாடத் திட்டங்களையும் விட்டொழித்து வாழ்வியல் அறிவியல், குடும்பப் பற்று, பெரியோரை மதித்தல், கைத்தொழில், தோல்வி கண்டு கலங்காத தன்னம்பிக்கை, முடிந்தவரை தன் தேவைகளை தானே பூர்த்தி செய்துகொள்ளும் திறன், என வாழ்க்கை எல்லைகளை வரையறுத்துக் கொடுத்து, புதிய வெளிச்சத்தைக் கொண்டு வாருங்கள். புண்ணியமாகப் போகட்டும் உங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும்.

எழுதியவர் : க.அர.இராசேந்திரன். (7-Sep-15, 11:37 pm)
சேர்த்தது : இராசேந்திரன்
பார்வை : 592

சிறந்த கட்டுரைகள்

மேலே