நீங்கள் எப்போதாவது

நீங்கள் எப்போதாவது
வெளியில் தாழிட்ட கண்ணாடி
அறைக்குள் மாட்டிக்கொண்டு
கதறி கதறி மயங்கியதுண்டா ?
நீங்கள் எப்போதாவது
பேரலையில் நீந்த முடியாமல்
மூக்கு, வாய், தொண்டைகளில்
நீர் ஏறி உயிருக்கு போராடியதுண்டா?
நீங்கள் எப்போதாவது
இருண்ட காட்டுக்குள்
வழி தெரியாமல் இங்கும் அங்கும்
ஓடி அலைந்து ஓய்ந்து விழுந்ததுண்டா?
நீங்கள் எப்போதாவது
தூக்கிட்டுக் கொண்டு
வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில்
வலியில் தொங்கியதுண்டா ?
அட அதெல்லாம் விடுங்க
நீங்கள் எப்போதாவது
நுரைக்க நுரைக்க காதலித்து
அதில் தோற்றதுண்டா ?