இலக்கிய வெடிக்குண்டு --சந்தோஷ்

அநியாயங்களைக் கண்டு
மெளனத்தைக் குதப்பியவாறு
நீண்ட நாளின்
எரிமலைக் குழம்பினை
நெஞ்சகத்தில் சுமந்துக்கொண்டிருக்கும்
ஜனநாயக பிராணிகளுக்கு
அரசியல் நரிகள்
தேர்தல் நேரத்தில்
விட்டெறியும்
இலவசம் இலவசம் இலவசமெனும்
ஆசை வஞ்சகத்துண்டுகளில்
எச்சிலொழுகி பழகியப்பின்பு
"புரட்சி" என்பதெல்லாம்
பொறுத்தமற்ற பிணச்
சொல்லாடலாகிவிட்டது.

ஊழல் செய்த மவராசன்களும்
சொத்துக்குவித்த மகராணிகளும்
குளிரூட்டப்பட்ட அறையில்
பொய் புகையிலைப் புகைத்து
நீதிதேவதைக்கு கொடும்
புற்றுநோய் வரவழைத்தாலும்
கிழட்டுச்சட்டங்களை
புரட்டிப்பார்த்து
சட்டப்புத்தகத்தின் வார்தைகளின்
ஜோடனையில் ஆருடம் தேடும்
கருப்பு நீதிபதிகள்
இருக்கும் வரை....

தேசமே...
என் இந்தியத்தேசமே
உன் மண்ணில்
எந்த கோணத்திலும்
புரட்சி என்பது
புழுத்துப்போன சொல்லாடல்தான்...

ஆனாலும்
ஆனாலும்...

எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது...
இளம் எழுத்தாளர்கள்
யாப்புக்கு கட்டுப்படும்
சோம்பேறி வார்த்தைகளுக்கு
மதி மயங்காமல்
அந்த பாரதி
விட்டுப்போன
மீந்த
அக்னித்துளிகளை ஊற்றி
தங்கள்
சுயமரியாதை எழுதுகோலை
ஏந்த ஆரம்பித்தால்.....
இதன் மூலம்
சிந்திக்கத் தெரியா
ஆயிரமாயிரம் தோழர்கள்
சே குவேராக்களாக
எழுச்சிப் பெற்றால்

புரட்சி என்பதன்
சொல்லுக்கு...
இலக்கிய வெடிக்குண்டு...
என இனி
அகராதிகள் கொண்டாடலாம்..


**
-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : -இரா.சந்தோஷ் குமார். (12-Sep-15, 6:46 pm)
பார்வை : 177

மேலே