கவி மனம்
கருத்தொருமிக்க கண்விழித்து கவி எழுதுவான்
கல்லாதவன் கூட கண்முழித்து திருந்துவான்
காலம் என்றும் தடைபோடாமல் அவனுக்கும்
ஞாலமே எதிர்த்தாலும் நடைபோடும் துணிவிருக்கும்!
கண்ணில்படும் எதுவும் கவிதையாய் மாறும்
மண்ணில்போகும் நாள்வரை மனம் சிந்தனையில் ஊறும்
கற்பனைகள் கைகோர்த்து நண்பனாய் மாறும்
கற்சிலைகள் அவன்கூட பேசுவதாய் தோன்றும்!
சமுதாய சிக்கல்கள் காணும்போதினில் அவன்
மனம் விக்கல்கள் கொள்ளும் நாளும்
தீர்வை எண்ணி மனம் கவலைகொள்ளும்
கோர்வையாய் வார்த்தைகள் வந்து வலையில்விழும்!
சுயநலத்தை சுட்டெரிக்கும் சூரியக் கதிராய்
பொதுநலத்தை மீட்டெடுக்கும் காரியப் புதிராய்
அறிவையும் மனதையும் பிரித்தறியும் ஆற்றலோடு
நெறிமுறை அனைத்தும் பின்பற்றும் பண்போடு!
சொற்களை ஆளத் தெரிந்த மன்னராய்
பொய்களையும் வாய்மையிடத்து வைக்கும் சான்றோராய்
உணர்வுகளை உணர்ந்து உறவுகளை உயிர்ப்பித்து
உன்னத கவிதைகள் படைக்கும் கவி மனம்!