எனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கலை

போன வாரம், ஒரு நண்பரைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.

அவருக்கு ஒரே மகள், வயது ஐந்தரையோ, ஆறோ இருக்கலாம், ஒரு கால் பிறவியிலேயே கொஞ்சம் ஊனம், அதைப்பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடாமல் தன்னம்பிக்கையோடு வளர்க்கிறார்கள்.

ஆனால், இந்தமுறை நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது, அந்தப் பெண் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள். என் நண்பரும் அவருடைய மனைவியும் அவளைத் தொடர்ந்து திட்டிக்கொண்டிருந்தார்கள்.

நான் தர்ம சங்கடமாக விழிக்க, நண்பர் என்னையும் அந்தச் சண்டைக்குள் இழுத்துப்போட்டார், ‘நல்ல நேரத்தில வந்திருக்கே, நீயே இவளுக்கு ஒரு நல்ல புத்தி சொல்லுப்பா’

‘என்னாச்சு?’

சென்ற வருடம் அக்டோபர் மாதம் தொடங்கி, நண்பரும் அவருடைய மனைவியும் தங்கள் மகளுக்காக ஒரு நல்ல பள்ளியைத் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். பெங்களூரில் இருப்பதிலேயே ‘தி பெஸ்ட்’ பள்ளிகளைமட்டும் வடிகட்டி அப்ளிகேஷன் வாங்கியிருக்கிறார்கள்.

அப்புறமென்ன? வரிசையாக இண்டர்வ்யூக்கள், அலுவலகத்துக்குக்கூட டை கட்டாத நண்பர், கோட், சூட் சகிதம் கல்யாண மாப்பிள்ளைபோல் பள்ளிப் படிகளில் ஏறி இறங்கியிருக்கிறார்.

அவரை விடுங்கள், அந்தப் பெண்? ஐந்து வயதுக் குழந்தையை, இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் என்று சரமாரியாகக் கேள்வி கேட்டு, அதையும் இதையும் எழுதச் சொல்லிப் பரீட்சை வைத்து பாடுபடுத்தியிருக்கிறார்கள். அதுவும் அப்பா, அம்மா திட்டுவார்களே என்று பயந்து ஒவ்வோர் இண்டர்வ்யூவாகப் போய்வந்திருக்கிறது.

கடைசியாக, ஒரு மிகப் பெரிய பள்ளியில் அவளுக்கு அட்மிஷன் கிடைத்துவிட்டது. நண்பருக்கும் அவர் மனைவிக்கும் பெருமை தாங்கவில்லை. தன் மகளைச் சான்றோள் எனக்கேட்ட சந்தோஷத்துடன், டொனேஷன், ஸ்கூல் ஃபீஸ், இன்னபிற செலவுகளுக்காக எங்கே பர்ஸனல் லோன் போடலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.

அப்போதுதான், அவர்களுடைய மகள் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறாள், ‘எனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கலை, நான் இங்கே சேரமாட்டேன்’

இதைக் கேட்டதும், அவளுடைய அப்பா அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை. பொறுமையாக மகளுக்கு அறிவுரை சொல்வதில் ஆரம்பித்தார்கள், அந்தப் பள்ளியின் மேன்மை, அதில் படித்தவர்கள் எப்படியெல்லாம் பெரிய ஆள்களாக வளர்ந்திருக்கிறார்கள் என்கிற சரித்திரத்தை விளக்கிச் சொன்னார்கள், அங்கே சீட் கிடைக்காதா என்று எத்தனையோ பேர் ஏங்கிக் காத்திருப்பதைச் சொன்னார்கள், அவர்கள் தங்களுடைய தகுதிக்கு மீறி இந்தப் பள்ளிக்காகச் செலவு செய்யத் தயாராக இருப்பதையும், அங்கே படித்தால்தான் அவளுடைய எதிர்காலம் வளமாக இருக்கும் என்பதையும் படம் வரைந்து பாகம் குறித்தார்கள்.

ஆனால், இதெல்லாம் குழந்தைக்குப் புரியுமா? ‘நீங்க எவ்வளவுதான் கத்தினாலும் நான் அந்த ஸ்கூலுக்குப் போகமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு டிவியில் பப்பாய் கார்ட்டூன் பார்க்கப் போய்விட்டது.

அப்புறம், கத்தல், மிரட்டல், அடிதடி, கெஞ்சல், கொஞ்சல் எல்லாமே வரிசைக்கிரமமாக அரங்கேறியது. தாத்தா, பாட்டி, சித்தப்பா, மாமா, மாமி, பக்கத்துவீட்டு நாய்க்குட்டிவரை அவளுக்கு ’நல்ல புத்தி’ சொல்லியாகிவிட்டது.

அப்போதும், அவள் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளவில்லை, ‘இந்த ஸ்கூலுக்குப் போகமுடியாது, அவ்ளோதான்’ என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள்.

அதன்பிறகு, வேறு வழியில்லாமல் மகளை இன்னொரு ‘சாதாரண’(?)ப் பள்ளியில் சேர்த்திருக்கிறார் நண்பர். அவளும் கடந்த ஜூன் மூன்றாம் தேதியிலிருந்து உற்சாகமாகப் பள்ளிக்குப் போய் வருகிறாள்.

ஆனால், என் நண்பருக்குதான் இன்னும் மனசே ஆறவில்லை, ’பொண்ணை எங்கே சேர்த்திருக்கீங்க?’ என்று யாராவது கேட்டால், அவர் முகம் உடைந்து விழுந்துவிடுகிறது, அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் கூச்சத்துடன் பேச்சை மாற்றுகிறார்.

இத்தனைக்கும், அவருடைய மகள் இப்போது படிக்கும் பள்ளியும், பிரபலமான தனியார் பள்ளிதான். மிக நல்ல ஆசிரியர்கள், வகுப்பறைகள், மற்ற வசதிகளைக் கொண்டதுதான்.

ஆனால், பெங்களூரின் மிகச் சிறந்த ‘நம்பர் 1’ பள்ளியில் படிக்க வாய்ப்புக் கிடைத்தும், அதைத் தன் மகள் முட்டாள்தனமாகத் தவறவிட்டுவிட்டாளே என்பதை நினைக்கும்போது அவர் கூனிக் குறுகிப்போகிறார். எந்நேரமும் கலகலப்பாகப் பேசுகிற அவருடைய ஆளுமையே இப்போது தலைகீழாக மாறிவிட்டது.

இதனால், தினந்தோறும் வீட்டில் அந்தப் பெண்ணுக்கு ஏகப்பட்ட திட்டு, அடி, உதை. அம்மாவும் அப்பாவுமாகச் சேர்ந்து ‘அறிவில்லாத ஜென்மம், நீயே உன் தலையில மண்ணை வாரிப் போட்டுகிட்டே’ என்பதில் ஆரம்பித்து, ’நீ பன்னி மேய்க்கதான் லாயக்கு’வரை எல்லாவிதமான வசவுகளையும் அவள்மேல் திணிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த விஷயத்தையெல்லாம், நண்பர் எனக்கு நேரடியாகச் சொல்லவில்லை. பின்னால் அவருடைய குழந்தையிடம் தனியாகப் பேசியதைவைத்து ஒருமாதிரியாக ஊகித்துக்கொண்டேன்.

அப்போதும், எனக்கு ஒரு சந்தேகம் தீரவில்லை, ‘உனக்கு ஏன்ம்மா அந்த ஸ்கூல் பிடிக்கலை?’

நான் இப்படிக் கேட்டதும், அவள் முகத்தில் ஒரு திருப்திப் புன்னகை. உற்சாகமாக அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.

’அந்த ஸ்கூல்ல என்னை இண்டர்வ்யூ செஞ்ச ஆன்ட்டி, என் கையைப் பிடிச்சு முறுக்கி இழுத்துட்டுப் போனாங்க, எனக்கு ரொம்ப வலிச்சது தெரியுமா?’

‘அப்புறம், அப்பா, அம்மாவை வெளியே இருக்கச் சொல்லிட்டு, என்னை இன்னொரு ரூம்ல உட்காரவெச்சுக் கதவைச் சாத்தினாங்க, அது எனக்குப் பிடிக்கலை’

’அவங்க என்னை உச்சா போகக்கூட அலவ் பண்ணலை, வரிசையா இங்க்லீஷ், மேத்ஸ், சைன்ஸ்ல கேள்வியாக் கேட்டாங்க, நிறைய எழுதச் சொன்னாங்க’

நான் குறுக்கிட்டுக் கேட்டேன், ’அந்த டெஸ்ட்ல்லாம் உனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்ததா?’

’ம்ஹூம், இல்லவே இல்லை, அவங்க கேட்டது எல்லாமே செம ஈஸி’ என்று சிரித்தாள் அவள், ’நான்தான் ஏற்கெனவே எல்கேஜி யுகேஜியில அதெல்லாம் படிச்சுட்டேனே’

’அந்த மிஸ் கேட்டதை எல்லாமே நான் கரெக்டா எழுதிட்டேன். ஆனா அவங்கதான் இன்னும் இன்னும் டெஸ்ட் கொடுத்துகிட்டே இருந்தாங்க, கை வலிக்குது மிஸ்-ன்னு சொன்னேன், கீப் ரைட்டிங்-ன்னு அதட்டினாங்க’

’அப்புறம் என்ன ஆச்சு?’

’இண்டர்வ்யூ முடிஞ்சதும் அவங்க எனக்கு ‘வெரி குட்’ சொன்னாங்க, அவங்களுக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப்போச்சு, ‘யு ஆர் வெரி ப்ரைட்’ன்னாங்க’

‘அப்புறம்?’

’ஆனா, எனக்குதான் அவங்களைப் பிடிக்கலையே, நான் அந்த ஸ்கூலுக்குப் போகமாட்டேன்னு சொல்லிட்டேன்’

யாராவது அரைகுறையாகப் பேசினால், ‘குழந்தைத்தன’மான சிந்தனை என்று சொல்கிறோம். ஆனால், இந்த விஷயத்தில் நான் ’நல்ல புத்தி’ சொல்லவேண்டியது இந்தப் பெண்ணுக்கா, அல்லது அவளுடைய அப்பா, அம்மாவுக்கா என்று இன்னும் விளங்கவில்லை!

***

என். சொக்கன் …

23 06 2009

எழுதியவர் : செல்வமணி (17-Sep-15, 10:30 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 363

மேலே