ஒரே ஒரு கெட்டவன்

அலுவலகத்தில் என் மேனேஜரும், வீட்டில் என் மனைவியும் யோகாசனப் பிரியர்களாக மாறிச் சில மாதங்கள் ஆகின்றன.

’ஆஃபீஸ் பாஸ்’பற்றிப் பிரச்னையில்லை. எப்போதாவது, ‘You should try Yoga, Its amazing’ என்று புதுச் சினிமாவுக்கு சிபாரிசு செய்வதுபோல் ஒரு வரி சொல்வார். அதற்குமேல் வற்புறுத்தமாட்டார்.

ஆனால் என் மனைவிக்கு, யோகாசனம் என்பது ஒரு செல்ல நாய்க்குட்டியை வளர்ப்பதுமாதிரி. அவர்மட்டும் அதைக் கவனித்துப் போஷாக்கு பண்ணிக்கொண்டிருக்கையில், நான் சும்மா வெட்டியாக உட்கார்ந்திருப்பதை அவருக்குப் பார்க்கப் பொறுக்கவில்லை.

ஆகவே, ‘யோகாசனம் எப்பேர்ப்பட்ட விஷயம் தெரியுமா? அதைமட்டும் ஒழுங்காச் செஞ்சா உடம்பில ஒரு பிரச்னை வராது, ஆஸ்பத்திரிக்கே போகவேண்டியிருக்காது’ என்று தன்னுடைய பிரசாரங்களை ஆரம்பித்தார்.

அடுத்தபடியாக, அவருடைய யோகாசன மாஸ்டரைப்பற்றிய பிரம்மிப்புகள் தொடர்ந்தன, ‘அவரை நீ நேர்ல பார்த்தா, எண்பது வயசுன்னு நம்பக்கூட முடியாது, அவ்ளோ சுறுசுறுப்பு, கை காலெல்லாம் ரப்பர்மாதிரி வளையுது, கடந்த இருபது வருஷத்தில நான் எதுக்காகவும் மருந்து சாப்பிட்டது கிடையாது-ங்கறார், ஒவ்வொரு வருஷமும் யோகாசனத்தால அவருக்கு ரெண்டு வயசு குறையுதாம்’

எனக்கு இதையெல்லாம் நம்பமுடியவில்லை. யோகாசனம் ஒரு பெரிய விஷயம்தான். ஆனால் அதற்காக அதையே சர்வ ரோக நிவாரணியாகச் சொல்வது, எண்பது வயதுக்காரர் உடம்பில் ‘தேஜஸ்’ வருகிறது, எயிட்ஸ், கேன்சர் போன்ற வியாதிகளுக்கு மருந்து கிடைக்கிறது என்றெல்லாம் இஷ்டத்துக்கு அளந்துவிட்டால் அவநம்பிக்கைதானே மிஞ்சும்?

ஆகவே, என் மனைவியின் பிரசார வாசகங்கள் ஒவ்வொன்றையும் நான் விடாப்பிடியாகக் கிண்டலடிக்க ஆரம்பித்தேன், ‘உங்க யோகாசன மாஸ்டர் பெயர் என்ன பிரபு தேவா-வா? ஆஸ்பத்திரிக்குப் போறதில்லை, மருந்து சாப்பிடறதில்லைன்னா அவர் தனக்குன்னு சொந்தமா மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்காரா? இல்லையா? வருஷத்துக்கு ரெண்டு வயசு குறைஞ்சா இன்னும் பத்து வருஷத்தில அவர் வேலைக்குச் சேர்ந்து, அடுத்த இருபது வருஷத்தில காலேஜ் போவாரா?’

இத்தனை கிண்டலுக்கும் அடிப்படைக் காரணம் என்ன என்று யோசித்தால், என்னுடைய சோம்பேறித்தனம்தான். அதிகாலை ஐந்தே காலுக்கு எழுந்து குளித்துத் தயாராகி ஆறு மணி யோகாசன வகுப்புக்குச் செல்வது எனக்குச் சரிப்படாது.

இந்த விஷயம், என்னைவிட என் மனைவிக்குதான் நன்றாகத் தெரியும். ஆனாலும் என்னை எப்படியாவது யோகாசனப் பிரியனாக்கிவிடுவது என்று அவர் தலைகீழாக நிற்கிறார் (Literally).

’இப்ப உன் உடம்பு நல்லா தெம்பா இருக்கு, அதனால உனக்கு யோகாசனத்தோட மகிமை தெரியலை, நாற்பது தாண்டினப்புறம் பாடி பார்ட் எல்லாம் தேய்ஞ்சுபோய் வம்பு பண்ண ஆரம்பிக்கும், வாரம் ஒருவாட்டி ஆஸ்பத்திரிக்கு ஓடவேண்டியிருக்கும், அப்போ நீ யோகாசனத்தோட மகிமையைப் புரிஞ்சுப்பே’

‘சரி தாயி, அதுவரைக்கும் என்னைச் சும்மா வுடறியா?’

ம்ஹூம், விடுவாரா? வீட்டிலேயே எந்நேரமும் யோகாசன வீடியோக்களை ஒலிக்கவிட்டார், வழக்கமாக எந்தப் புத்தகத்திலும் மூன்றாவது பக்கத்தில் (நான் எழுதிய புத்தகம் என்றால் இரண்டாவது பக்கத்திலேயே) தூங்கிவிடுகிறவர் , விதவிதமான யோகாசனப் புத்தகங்களைப் புரட்டிப் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். செக்கச்செவேலென்று தரையைக் கவ்விப்பிடிக்கும்படியான ஒரு பிளாஸ்டிக் விரிப்பு வாங்கி அதில் கன்னாபின்னாவென்று உடம்பை வளைத்து, ‘இது சிங்க யோகா, இது மயில் யோகா, இது முதலை யோகா’ என்று விதவிதமாக ஜூ காட்ட ஆரம்பித்தார்.

அவர் அப்படிக் காண்பித்த மிருகாசனங்களில் இரண்டுமட்டும் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஒன்று, நாய்போல நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு, ‘ஹா ஹா ஹா ஹா’ என்று மூச்சு விடுவது. இன்னொன்று, சிங்கம்போல கண்களை இடுக்கிக்கொண்டு பெரிதாகக் கர்ஜிப்பது.

ஆனால், இதையெல்லாம் வீட்டில் ஒருவர்மட்டும் செய்தால் பரவாயில்லை. யோகாசன வகுப்பில் முப்பது, நாற்பது பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் கர்ஜித்தால் வெளியே தெருவில் நடந்துபோகிறவர்களெல்லாம் பயந்துவிடமாட்டார்களா?

என்னுடைய கிண்டல்கள் ஒவ்வொன்றும் என் மனைவியின் யோகாசனப் பிரியத்தை அதிகரிக்கவே செய்தன. எப்படியாவது என்னையும் இதில் வளைத்துப்போட்டுவிடவேண்டும் என்கிற அவருடைய விருப்பம்மட்டும் நிறைவேற மறுத்தது.

இந்த விஷயத்தில் அவருடைய பேச்சைக் கேட்கக்கூடாது என்கிற வீம்பெல்லாம் எனக்குக் கிடையாது. யோகாசனம் என்றில்லை, எந்த ஒரு விஷயத்தையும் logical-ஆக யோசித்து, ‘இது ரொம்ப உசத்தி, எனக்கு இது தேவை’ என்கிற தீர்மானத்துக்கு நானே வரவேண்டும், வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த உணர்ச்சிமயமான சிபாரிசுகளை நான் ஏற்றுக்கொள்வதற்கில்லை.

அதற்காக, யோகாசனம் புருடா என்று நான் சொல்லவரவில்லை. என் மனைவி அதை ஒரு ‘பகவான் யோகானந்தா’ ரேஞ்சுக்குக் கண்கள் பனிக்க, இதயம் இனிக்கப் பிரசாரம் செய்தாரேதவிர, அது ஏன் உசத்தி, எப்படி அது நிச்சயப் பலன் தருகிறது என்பதைல்லாம் தர்க்கரீதியில் விளக்கவில்லை, இன்றுவரை.

இன்னொரு விஷயம், என்னுடைய ’ராத்திரிப் பறவை’ லைஃப் ஸ்டைலுக்கு யோகாசனம் நிச்சயமாகப் பொருந்தாது. அதிகாலையில் எழுந்து யோகா செய்யவேண்டுமென்றால் அதற்காக நான் சீக்கிரம் தூங்கவேண்டும், அதனால் மற்ற எழுத்து, படிப்பு வேலைகள் எல்லாமே கெட்டுப்போகும்.

சரி, ஆஃபீஸ் போய் வந்தபிறகு சாயந்திர நேரத்தில் யோகாசனம் பழகலாமா என்று கேட்டால், எல்லோரும் ஒருமாதிரியாகப் பார்க்கிறார்கள். அதைக் காலையில்மட்டும்தான் செய்யவேண்டுமாமே :-?

இப்படிப் பல காரணங்களை உத்தேசித்து, யோகாசனம் இப்போதைக்கு வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். எல்லாம் பிழைத்துக் கிடந்து ரிடையர் ஆனபிறகு நிதானமாகப் பார்த்துக்கொள்ளலாம்.

இதற்கும் என் மனைவி ஒரு விமர்சனம் வைத்திருந்தார், ‘அப்போ யோகாசனம் கத்துக்க ஆரம்பிச்சா, உடம்பு வளையாது’

‘வளையறவரைக்கும் போதும்மா, விடேன்’

இப்படி எங்கள் வீட்டில் யோகாசனம் ஒரு சுவாரஸ்யமான விவாதப் பொருளாகவே தொடர்ந்துகொண்டிருந்த சூழ்நிலையில், நேற்று ஒரு விநோதமான அனுபவம்.

என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் என்னை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார். அந்த நிகழ்ச்சியின் தலைப்பு: Yogic Management.

அதாவது, யோகாசனத்தின் வழிமுறைகள், தத்துவங்களை அடிப்படையாக வைத்து, இன்றைய மேலாண்மை விஷயங்களைக் கற்றுத்தருகிறார்களாம். பல பெரிய நிறுவனங்களின் தலைவர்கள், முக்கியப் பொறுப்புகளில் உள்ள மேலாளர்களெல்லாம் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்களாம்.

நிகழ்ச்சியை நடத்துகிறவரும், ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் கால் நூற்றாண்டு காலத்துக்குமேல் பணிபுரிந்தவர்தான். பிறகு அங்கிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, யோகாசனம், ஆன்மிகம், Ancient Wisdom போன்ற வகுப்புகள் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

இதைக் கேட்டதும் எனக்குக் கொஞ்சம் சுவாரஸ்யம் தட்டியது, இவர் நிச்சயமாக ‘யோகாசனம்தான் உசத்தி, எல்லோரும் தொட்டுக் கும்பிட்டுக் கன்னத்திலே போட்டுக்கோங்க’ என்று பிரசாரம் செய்யப்போவதில்லை, கொஞ்சமாவது Logical-லாகப் பேசுவார், ஆகவே, இவருடைய பேச்சைக் கேட்டு நான் யோகாசனத்தின் மேன்மைகளைப் புரிந்துகொண்டு அதன்பக்கம் திரும்புவேனோ, என்னவோ, யார் கண்டது?

ஒருவேளை, நான் நினைத்த அளவுக்கு நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஏதோ சில மேனேஜ்மென்ட் சமாசாரங்களைக் கற்றுக்கொண்டோம் என்று திருப்தியாகத் திரும்பி வந்துவிடலாம்.

இப்படி யோசித்த நான், நண்பரின் அழைப்பை ஏற்றுக்கொண்டேன். மின்னஞ்சல் அழைப்பிதழை இரண்டு பிரதிகள் அச்செடுத்துக்கொண்டு மாலை ஆறரை மணிக்கு அங்கே போய்ச் சேர்ந்தோம்.

நாங்கள் உள்ளே நுழைந்தபோது, அங்கே விழா ஏற்பாட்டாளர்களைத்தவிர வேறு யாரும் இல்லை. பெரிய நிறுவனத் தலைவர்கள், மேனேஜர்களெல்லாம் இனிமேல்தான் வருவார்கள்போல.

முக்கியப் பேச்சாளர், ஜம்மென்று சந்தனக் கலர் பைஜாமா போட்டுக்கொண்டு, நரைத்த தலையைப் பின்பக்கமாக இழுத்து வாரியிருந்தார். குடுமி இருக்கிறதா என்று பார்த்தேன், இல்லை.

அட்டகாசமான ஆங்கிலம், காலில் ரீபாக் ஷூ, கழுத்தில் தடிமனான தங்கச் சங்கிலி, எனக்கு அவரை ஒரு யோகா குருநாதராகக் கற்பனை செய்ய மிகவும் சிரமமாக இருந்தது.

ஆறரை மணி தாண்டி இருபத்தைந்து நிமிடங்களாகியும், முதல் இரண்டு வரிசைகள்மட்டுமே ஓரளவு நிரம்பியிருந்தன. இதற்குமேல் யாரும் வரப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டதால், அரைமனதாகக் கூட்டம் தொடங்கியது.

பேச்சாளர் மிகவும் நிதானமாகப் பேசினார், எளிமையான ஆங்கிலம், பார்வையாளர்களைத் தன் வசம் இழுத்துக்கொள்கிற பார்வை, சிநேக முகபாவம், பேச்சோடு ஆங்காங்கே தூவிய நகைச்சுவை முந்திரிகள், குட்டிக் கதை உலர்திராட்சைகள், மைக் இல்லாமலேயே அவருடைய குரல் கடைசி வரிசைவரை தெளிவாக ஒலித்திருக்கும், கேட்பதற்கு அங்கே ஆள்கள்தான் இல்லை.

‘நாம் நம்முடைய உடம்பைச் சுத்தமாக வைத்துக்கொள்ள, தினமும் குளிக்கிறோம், நேரம் கிடைக்கும்போதெல்லாம் முகம் கழுவுகிறோம், வீட்டில் உள்ள பொருள்களைத் துடைத்து, தூசு தட்டி வைக்கிறோம், ஆனால் உள்ளத்தை எப்போதாவது சுத்தப்படுத்துகிறோமா? அதற்குதான் யோகாமாதிரியான விஷயங்கள் தேவைப்படுகின்றன’ என்று பொதுவாகத் தொடங்கியவர், வந்திருப்பவர்கள் எல்லோரும் தொழில்துறையினர் என்று உணர்ந்து, சட்டென்று வேறொரு கோணத்துக்குச் சென்றார்.

’உங்கள் மனம் அமைதியாக இல்லாதபோது, நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்காது, ஒரு தவறான முடிவு எடுத்துவிட்டுப் பின்னர் பல மணி நேரம், பல நாள், பல வருடங்கள், சில சமயங்களில் வாழ்நாள்முழுக்க வருந்திக்கொண்டிருப்பதைவிட, எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்குமுன்னால் ஐந்தே ஐந்து நிமிடங்கள் செலவழியுங்கள், அதற்கு ஒரு சின்ன ப்ரேக் விடுங்கள்’

’ப்ரேக் என்றால், விளம்பர ப்ரேக் இல்லை, உங்கள் மனத்தை அமைதிப்படுத்திக்கொள்ள, சுத்தமாக்கிக்கொள்ள சில சின்னப் பயிற்சிகள், நான் சிபாரிசு செய்வது, மூச்சுப் பயிற்சி, அல்லது பாட்டுப் பாடுவது’

இப்படிச் சொல்லிவிட்டுச் சட்டென்று பின்னோக்கி நகர்ந்தவர், ஒரு ஸ்ருதிப் பெட்டியை முடுக்கிவிட்டார். அது ‘கொய்ங்ங்ங்ங்ங்’கென்று ராகம் இழுக்க ஆரம்பித்தது, ‘இப்போது நாம் எல்லோரும் பாடப்போகிறோம்’ என்றார்.

எனக்குப் பகீரென்றது. மற்றவர்கள் சரி, நான் பாடினால் யார் கேட்பது? அப்படியே பின்னே நகர்ந்து ஓடிவிடலாமா என்று யோசித்தேன்.

என் குழப்பம் புரிந்ததுபோல் அவர் சிரித்தார், ‘கவலைப்படாதீங்க, எல்லோரும் சேர்ந்து பாடும்போது யார் குரலும் தனியாக் கேட்காது, அந்த Harmony இந்தச் சூழலையே மாத்திடும், உங்க மனசை அமைதியாக்கிடும்’

பரபரவென்று கை விரல்களில் சொடக்குப் போட்டபடி ஒரு நாற்காலியில் அமர்ந்தார் அவர், ‘நீங்க எல்லோரும் கைகளை அகல விரிச்சுத் தொடையில வெச்சுக்கோங்க, உள்ளங்கை மேல்நோக்கிப் பார்க்கணும்’

’அடுத்து, கால்களை முன்னாடி வெச்சு, நிமிர்ந்து நேரா உட்காருங்க, பாதம் நல்லாத் தரையில பதியணும்’ என்றவர் சட்டென்று தன்னுடைய ஷூவைக் கழற்றினார், ‘நீங்களும் கழற்றிடுங்க’

அதுவரை அவர் சொன்னதையெல்லாம் செய்த பார்வையாளர்கள் இப்போது ரொம்பத் தயங்கினார்கள். ஒருவரை ஒருவர் பார்த்தபடி நெளிந்தார்கள், ஒருவேளை, சாக்ஸ் நாற்றம் காரணமாக இருக்குமோ?

’இப்போ எல்லோரும் கண்ணை மூடிக்கோங்க, மூச்சை நல்லா இழுத்து, மெதுவா விடுங்க’

மற்றவர்கள் எப்படியோ, எனக்கு முழுசாகக் கண் மூடத் தயக்கமாக இருந்தது. காரணம், மடியில் பயம், ச்சே, மடியில் செல்ஃபோன்.

எல்லோரும் கண்களை மூடியிருக்கிற நேரத்தில் யாரோ ஒருவர் உள்ளே வந்து எங்களுடைய செல்ஃபோன்களையெல்லாம் மொத்தமாகத் தூக்கிப் போய்விட்டால்? எதற்கும் இருக்கட்டும் என்று அரைக் கண்ணைத் திறந்தே வைத்திருந்தேன்.

அதற்குள், பேச்சாளர் மெல்லப் பாட ஆரம்பித்திருந்தார், ‘ஓம்’ என்கிற பிரணவ மந்திரத்தில் தொடங்கி வரிசையாக நிறைய இரண்டு வரிப் பாடல்கள், அல்லது ஸ்லோகங்கள்: ’புத்தம் சரணம் கச்சாமி’, ‘ராம் ராம், ஜெய்ராம், சீதாராம்’, ‘அல்லேலூயா அல்லேலூயா’, ‘அல்லாஹூ அக்பர் அல்லாஹு அக்பர்’க்குப்பிறகு, மறுபடியும் ‘ஓம்’ என்று வந்து முடித்தார். மீண்டும் சிலமுறை மூச்சுப் பயிற்சிகள், ‘இப்போ மெதுவா உங்க கண்ணைத் திறங்க, பார்க்கலாம்’

அவருடைய பாடல் தேர்வைப் பார்க்கும்போது யோகாவையும் மதத்தையும் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது என்பது புரிந்தது. ஆனால் மற்றபடி, அந்த ஐந்து நிமிடம்கூட என்னால் அமைதியாகக் கண் மூடி இருக்கமுடியவில்லை, சொல்லப்போனால், எதைப்பற்றியும் யோசிக்காமல் மனத்தை வெறுமையாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று வலிய நினைக்கிறபோதுதான், வேண்டுமென்றே பல பழைய நினைவுகள், வருங்காலக் கற்பனைகள், சந்தேகங்கள் எல்லாம் நவீன கொலாஜ்போல ஒன்றன்மீது மற்றொன்று பதிந்தவாக்கில் வந்து போயின.

பேச்சாளர் கேட்டார், ‘உங்கள்ல யாரெல்லாம் முன்பைவிட இப்போ அதிக ஃப்ரெஷ்ஷா, மேலும் அமைதியா உணர்றீங்க?’

எல்லோரும் கை தூக்கினார்கள், என்னைத்தவிர.

ஆக, தியானம், யோகாசனத்தால்கூட அமைதிப்படுத்தமுடியாத அளவுக்குக் கெட்டவனாகிப்போயிருக்கிறேன். இனிமேல் சிங்கம், புலி, யானை, ஏன், டைனோசர், டிராகன் யோகாசனங்கள் செய்தால்கூட நான் தெளிவாகமுடியாது என்று நினைக்கிறேன்!

***

என். சொக்கன் …

26 06 2009

எழுதியவர் : செல்வமணி (17-Sep-15, 10:21 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 121

மேலே