மரம் நடுவோம், மின்சாரத்தை சேமிப்போம்

இன்று எங்கு பார்த்தாலும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் மரம் வளர்க்காமல் இருப்பதும், இருக்கின்ற மரங்களை வெட்டுவதுமே.

மரம் வளர்ப்பதின் முக்கியத்துவம் நமது மக்களுக்கு தெரியவில்லை என்பது வருத்ததிற்குரிய விஷயம். அனைவரும் தன் வாழ்நாளில் ஒரு மரத்தை ஆவது வளர்ப்போம் என உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய மாசுபாடான சுழலில் காற்றை சுத்தம் செய்ய வேறு உபகரணம் எதுவும் வாங்க முடியுமா...? மரங்கள் காற்றை சுத்தம் செய்கிறது. புவி வெப்பமயமாதலுக்கு முதன்மையான காரணம், பசுமை கூட வாயுக்களின் வெளியேற்றம், அவற்றில் முக்கியமாக கார்பன்-டை-ஆக்சைடின் விகிதாச்சார அளவு அதிகரிப்பது. ஒளிர்சேர்க்கை செய்யும் உயிர்களைத் தவிர மற்ற அனைத்தும் கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றுபவையாகவே உள்ளன. அதோடு மனிதர்களின் உருவாக்கங்களும் கார்பனை வெளியேற்றுகின்றன. பூமியில் இவை அனைத்திற்கும் எதிராக, கார்பன் - ஆக்சிஜன் விகிதாச்சாரத்தை சமன் செய்யப் போராடுவது மரங்கள் ஒன்று மட்டுமே!

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள வளர்ந்த மரங்கள், ஒரு வருடத்தில் எடுத்துக்கொள்ளும் கார்பனின் அளவு, ஒரு வாகனம் 26000 மைல் பயணிப்பதால் வெளியிடும் கார்பன் அளவிற்கு ஈடானதாகும், அத்தோடு 18 மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க தேவையான ஆக்சிஜனையும் வெளியிடுகிறது. ஒரு தனி மரம் ஆண்டுக்கு 260 பவுண்டுகள் ஆக்சிஜனை வெளியிடுகிறது. இது இரண்டு மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க போதுமானதாகும்.

ஒரு கணக்கீட்டின்படி ஐம்பது வருடங்கள் வாழும் ‘ஒரு மரம்’ உற்பத்தி செய்யும் ஆக்சிஜனின் மதிப்பு பதினெட்டு லட்சம் ரூபாய் , சுத்திகரிக்கும் நீரின் மதிப்பு இருபத்தொரு லட்சம் ரூபாய் மற்றும் கார்பன் வடிகட்டுவதற்கான செலவில் எழுபத்தைந்து லட்சம் ரூபாய். அரசாங்கங்கள் நீரை சுத்திகரிக்கவும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் பல பில்லியன் டாலர்களைச் செலவிடுகின்றன. இவை அனைத்தையும் மரங்கள் இலவசமாகவே செய்து வருகின்றன.

மரங்கள் பணத்திற்காகவே வெட்டப்படுகின்றன. ஆதலால் இயற்கை ஆர்வலர்களும் மரங்களின் மதிப்பை பணத்தின் மதிப்பிலேயே விளக்கத் துவங்கி விட்டார்கள். ஆனால் இயற்கையின் மீதான நமது எந்த அளவீடுகளும் மிகச் சரியான அளவாக இராது. மண் அரிப்பை தடுத்தல், நிலத்தடி நீரின் அளவை உயர்த்துதல்,ஆறுகளின் பாதையை-பெருக்கை கட்டுப்படுத்துதல், குளிர்விப்பான்களுக்கு ஆகும் செலவைக் குறைத்தல், பல்லுயிர் பெருக்கம், மரக்கட்டைகளின் மதிப்பு, மழை பொழிவு அதன் வேளாண் பலன்கள் என அளவிட இயலாத செல்வம் மர வளம்.

உதாரணமாக நமது வீட்டுச் செலவு கணக்கில் போட்டுப் பார்க்கலாம். வீட்டின் நான்கு முனையிலும் நான்கு மரங்கள் நட்டிருந்தால் வீட்டின் உள்வெப்பநிலை 5 முதல் 9 டிகிரி செல்சியஸ் வரை குறைகிறது. இதனால் குளிர்விப்பான்களுக்கு செலவாகும் மின்சாரத்தில் 30% குறைகிறது.

வருடத்திற்கு ஒரு வீட்டில் ஆகும் சேமிப்பை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அண்மையில் அரசின் அறிக்கையில், 'குண்டு பல்புகளை ஒழித்தால் தமிழகத்தில் வருடத்திற்கு 600MW மின்சாரம் சேமிக்கலாம்' என்று கூறியிருந்தார்கள். இதோடு ஒப்பிடுகையில், நம்மாலான உதவியாக மின்பற்றாக்குறையை போக்க, மரங்கள் மூலமான சேமிப்பு இன்னும் அதிகமாக இருக்குமல்லவா?

எழுதியவர் : செல்வமணி ( முகநூல் : தமிழ் ச (20-Sep-15, 9:30 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 544

சிறந்த கட்டுரைகள்

புதிய படைப்புகள்

மேலே