புலம் போகும் கனவு -ரகு
ஒரு பெரு மழைக்கு
ஆயத்தமான
கரு மேகத்தின் சூழ்
கலைகிறது
சிற்சில துளிகளோடு ...
வனம் என்று
சொல்லவியலா மூங்கில்கள்
கிளை கொண்டு
வெக்கை சுகிக்கின்றன.....
அவற்றின்
அடர்த்தி மேவிய
இருள் தன்னுள் ஓலமிடும்
ஒற்றைக் குயிலுக்கும்
குரல் வற்றிப் போகிறது.....
வன அவசியமிராத
அணில்களின்
அளாவிய சம்பாசனைகள்
சிதறின
சாலையெங்கும்.....
எச்சங்களின் காய்ந்த
திட்டுகளில்
அமர்ந்து சிறகுதிர்க்கும்
சிட்டுகளின் முகாரி
அடுத்த சந்ததி அபத்தமெனும்...
காற்று தனக்குத்தானே
தென்றல் என பெயர்
சூட்டிக்கொள்ளும்
மெள்ள வெளி பரவி...
வெப்ப சலனப் பிறப்பில்
வண்ணமிழக்க உலாவரும்
வண்ணத்துப் பூச்சிகளை
பூக்கள் மறுப்பதில்
முரணில்லை
வாகன இரைச்சல்
நெருங்குவதறிந்த மூங்கில்காடு
புல்லாங்குழலின்
கனவு தேடிப் புலம்போனது
எந்த வலியும்
போய்ச்சேராத கிழக்கில்
வெட்கமின்றி பற்றிவரும்
சூரியத் தீ நாளையும்...!!