அருவி

பள்ளத் தாக்குகளை
துள்ளித் தாக்குவதால்
நீ அருவியல்ல
நீர் கருவி

பாறை சிறைகளில்
கைதிகளான நுரைப் பூக்களை
கதவு திறந்து
காப்பாத்தி விட
சல,சலக்கும் சாவிக்கொத்துடன்
தைரியமாக தலை காட்ட
உன்னால் மட்டுமே முடியுமென
உரத்துச் சொல்கிறாய்
அதனால்தான் சொல்கிறேன்
நீ அருவியல்ல
நீர் கருவி

பார்ப்பவர் மனங்களில் பாவாய்
ஈரத்தை காயப் போடவும்
இதமான கவிதை பாடவும்
நெளியும் சுதியோடு
நினைவில் ஜதி போடும்
நீ அருவியல்ல
நீர் கருவி


விதைகளின் முகம் கழுவி
வேர்களுக்கு சிக்கெடுத்தும்
தாவரங்களுக்கு
தலைவாரி பூக் கட்டியும்
சிகை அலங்காரி போன்றே
சியல் படுகின்றாய்

நீர் நூலில் நெசவு செய்து
அம்மணமாய் நிற்க விடாமல்
மரங்களுக்கு ஆடை தயாரிக்கும்
தொய்வற்ற தொழில் புரவி
நீ என்றால் ஏது புரளி?

சுத்தம்தான் சுதந்திரமாய் வாழ
சோறு போடும் என்பதால்
தன்னையே துவைத்து
தானே காயப் போடும்
சாதுவான சலவையாளி

குளிர் செண்டு விசிறவும்
தளிர் கண்டு அமரவும்
வெளிர் என்று நிமிரவும்
வெடுக்கென்று திமிரவும்
காடு,வனம்
கண்டங்கள் தாண்டி எல்லாம்
செருக்கு இல்லாமல் செயல்பட
இயலுமாகிறதே எப்படியது

நீர் ஆணா,பெண்ணா
என்பதுதான் இங்கு
ஆராயப் பட வேண்டிய அம்சம்
ஆனாலும் நீர்
ஆராதிக்கப் பட வேண்டிய வம்சம்.

**************************
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : (23-Sep-15, 4:31 am)
Tanglish : aruvi
பார்வை : 5454

மேலே