தேவையா இந்த அடையாளங்கள்

இது 1980-களில் என் தந்தைக்கு நடந்த உண்மை கதையின் சுருக்கம்.

"இன்னு(ம்) கொறஞ்சது மூனு மணி நேரமாவது ஆவும்" என அருகில் உள்ள பாட்டி சொன்னாள்.இந்த மூன்று மணி நேரத்தில் எத்தனை முறை,
அவன் தொலைத்த அடையாளங்களையும்,அதனால் கண்ட அவமானங்களையும் இந்த குரங்கு மனம் இரயில் புகையினூடே புகைக்க போகிறதோ?
தெரியவில்லை!!எதில் எதிலோ தன் கவனத்தை திசைத்திருப்ப முயன்றும்,எண்ண ஓட்டங்களிடம் தோற்றவனாய்த் தத்தளித்தான்.அடிக்கடி அழும் குழந்தையின்
அழுகையிலும்,ஒவ்வொரு ஸ்டாப்பிலும் ஜன்னல் கம்பிகலின் குறுக்கே கை நீட்டும் சிறுவர்களின் ஏக்கக்குரல்களிலும்,கம்பார்ட்மெண்ட் குப்பைகளை
துண்டில் ஒதிக்கிவிட்டு காசு கேட்கும் வயதானவரின் வைராக்கியதிலும்....இன்னும் எத்தனை எத்தனையோ காட்சிகள்..அவன் ஆற்றாமையை
நினைவுப் படுத்திக் கொண்டே வந்தது.தேடல்கள் பற்றி ஒன்றும் அறியாத அந்த பதிமூன்று வயது சிறுவனாய் மீண்டும் மாறிவிட, நினைவுகளை இரயிலை
விட வேகமாய் ஓட்ட வேண்டியிருந்தது.
நன்சைகொல்லனை-பெயர் சொன்னதும் தெரியக் கூடிய பெரிய ஊரெல்லாம் இல்லை.மொத்தமே 50-60
குடும்பங்கள் வசிக்கும்,விவசாயத்தை பிரதானமாக கொண்ட சிற்றூர் அது.அவன் அப்பார் காலத்திலெல்லாம் எப்படியும் 30 ஆட்களுக்கு குறையாமல்
பண்ணையத்தில் வேலை செய்ததாக அவன் தந்தை சொல்லக் கேட்டிருக்கிறான்.அந்த ஊரில்தான் அவனுக்கு எத்தனை எத்தனை அடையாளங்கள்!
அதன் மீதான பூசப்பட்ட பெருமைகள்!!அதை தாங்கி நிற்கும் நினைவுகள்!!ஆவரங்காட்டு பொன்வண்டு,கோட்டன் கொளத்து மீன்,நாட்டான் ஆலமரத்து ஊஞ்சல்,சோலையூர் சேவல்கட்டு...
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.எந்த எதிர்பார்ப்பும் தன்னிடம் எவரும் வேண்டாத அந்த பதிமூன்று வயது, எவ்வளவு அருமையான பருவம்.எவ்வளவு வேடிக்கைகள்,கேளிக்கைகள்....

அன்றொரு நாள்,அந்த வயதிற்கான சுறுசுறுப்பும்,வேகமும் சற்றும் குறையாதவனாய்,
விடலித் தென்னையின் உச்சியின் மீது ஏறிக்கொண்டிருந்தான்.அவன் வயதை ஒத்தியே 6-7 சிறுவர்கள்,கீழேயிருந்து அவனை உற்சாகப்படுத்திக்
கொண்டிருந்தனர்.அந்த வழியில் வந்த ரங்கன் இதை பார்த்து,"டேய்..கீழ எறங்குடா...விழுந்து கிழுந்து தொலயப்போர.."என்று கத்தினான்.ரங்கன்
அவன் பண்ணையத்தில் வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதங்கள் கூட முழுதாய் ஆகவில்லை.கீழே இறங்கியவன் வேகவேகமாய் ஓடிப்போய்,
தன் அப்பனிடம்,"ஒரு வேலக்காரப் பய,என்ன பாத்து இறங்குடானு சொல்றான்..என்ன திமிரு அவனுக்கு!!"என்று சொல்லி அழுது புலம்பினான்.
அடுத்த இரண்டு நாட்களில்,அவன் பாக்கி கூலியை கொடுத்தனுப்பி விட்டதாகவும்,அவன் வேலைக்கு லாயக்குப்பட்டு வரமாட்டான் என்றும்,
அவன் அப்பன் யாரோ ஒருவனிடம் வெளியே சொல்லிக் கொண்டிருந்தான்.இதை கேட்டவனுக்கு,அவனின் அடையாளத்தையும்,அதன் அங்கீகாரத்தை
நிலை நாட்டிவிட்டதாக தனக்குள் பெருமிதம் அடைந்துகொண்டான்.

அவன் அப்பாவின் மரணத்திற்கு பிறகு தனக்கென ஒரு குடும்பமுமாகி காலங்கள் உருண்டோடிக் கொண்டிருந்தது.மும்மாரி மழை பெய்த காலம் போய்,
குடிப்பதற்க்கே தண்ணீர் தேடும் காலம் வந்துவிட்டது.வறட்சியில் மொச்சிக்கூட பட்டுப்போயிருந்தது.கமலை மாடுகளுக்குக் கூட தீனி எதுவும் இல்லாமல்
காசு கொடுத்து கூளம் வாங்கிப் போடும் நிலை வந்துவிட்டது.சிலர் பக்கத்து ஊர்களுக்கும்,நகரங்களுக்கும் வயிற்றை காப்பாற்றிக் கொள்ள நகரத்
தொடங்கினர்.பஞ்சம் அங்கே சுழற்றி அடித்ததில், அந்த கிராமத்தின் மக்கள் தொகை பாதியாய் குறைந்திருந்தது.மீண்டும் குகைமனிதர்களாய்
மாறி,உணவிற்காக அலையும் காலம் தொற்றிக் கொண்டது.அப்படியான கால்கட்டத்தில்,வீடு,நில வரியும் கட்டமுடியாதலால் நிலங்களும்,
வீடுகளும் அரசு அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டன.கையில் இருந்த கொஞ்ச காசையும் வைத்து,இதை எதைவும் மீட்க மனமின்றி அருகிலுள்ள
ஈரோடைக்கு குடிப்பெயர்ந்தான்.மனிதர்களும் இங்கு மரங்களைப் போலத்தான்!!எங்கு நடப்பட்டாலும் வளரக்கூடியவர்கள் தான்.அந்த புதிய சூழலிற்க்கேற்ப
தன்னை ஆட்ப்படுத்திக் கொள்ள போதிய நேரமும்,சில மனிதர்களும் தான் தேவை.
அவனான அடையாளங்களையும்,அதன் பெருமையையும் இங்கே எவரும் அறியப்போவதில்லை.பிழைப்பதற்கும்-வாழ்வதற்கும் இடையே
நழுவிக் கொண்டே சென்றது வாழ்க்கை.கையிலிருந்த கொஞ்ச காசும் செலவாகியிருந்தது.படிப்பை பாதியில் விட்டவனுக்கும்,படிக்காதவனுக்கும்
அங்கே வேலை கிடைப்பது ஒன்றும் அரிதான காரியமாக இல்லை.ஆனால் அதற்கு உங்களின் அடையாளத்தை சற்று கழற்றி வைத்துவிட வேண்டும்.
இப்படியாக மனித இனமே ஒவ்வொரு காலத்திலும்,தனக்கான அடையாளத்தை கழற்றி வைத்துத்தான் பயணித்துள்ளது.அதன் வரலாறுகளை
வெறுமனே காகித்தில் கற்பித்துக் கொண்டிருக்கும் இனம்தான் நாம்!

ஒரு அரிசிக் கடையில் அரிசி அளந்து போடும் வேலை.பார்க்க நோஞ்சானாக இருக்கும் அவனுக்கு கிடைத்ததென்னமோ அந்த வேலைதான்.
அதே கடையில் வேலை செய்பவன் தான் அந்த கோபாலனும்.அவனுடன் தான் எத்தனை எத்தனை சண்டைகள்!வேடிக்கைகள்!அவனிடம் கூட சொல்லப்படாத
அவன் மீதான பொறாமைகள்!வீடு வரை மூட்டையை கொண்டு போய் போடுவதுதான் அவன் வேலை.நல்ல கட்டுமஸ்தான உடல்வாகு,பார்த்ததும்
கவரும் சரீரம்.அதனாலோ என்னவோ, கடைக்கு வரும் பெண்கள் அவனிடம் கேளிக்கை பேசாமல் போவதில்லை.முதலாளி கடும் கோபக்காரர்.
அவரை அதிகம் கடையில் காண முடியாது.அருகில் இருக்கும் கொல்டென் ப்லாசா பாரிலோ அல்லது முட்சந்தி முருகேசனின் சீட்டு க்ளப்பிலோ பார்க்கலாம்.
ஆனால் கணக்கில் கராராண பேர்வலி.ரசீதுகளை சரி பார்க்கையிலும்,கல்லா கணக்குப் பார்க்கையிலும் எந்த எம்டனே வந்தாலும், ஒரு வார்த்தை கூட பேசமாட்டார்.
எல்லாம் ஒரு கணக்குத் தான் அவருக்கு!

இதில் தேவைக்கு வேண்டியும்,பயந்தும் ஓடிக்கொண்டிருந்தது அவன் வாழ்க்கை.குழந்தை பிறந்து மாதம் மூன்றாகி இருந்தது.அவர்கள் தேவையையே
பூர்த்தி செய்ய முடியாத இந்த நிலையில் பிறந்ததாலோ,என்னவோ ஜி.கெச்சின் வடக்காந்த மூலையில் அழுதுக் கொண்டிருந்தது.எப்படியும் பத்து
நாள் சம்பளத்தையாவது முதலாளியிடம் வாங்கினால் தான் நிலையை சரிகட்டமுடியும் என்று கடைக்கு ஓடினான்.
முதலாளி ஏதோ கோபமாய் இருப்பதாய் கோபால் செய்கை காட்டினான்.எல்லாம் பொருத்துக் கொண்டவனாய், அரை மணி நேரம்
எதுவும் பேசாமல் தனக்குள் புலம்பிக் கொண்டவன்,ஒன்றும் முடியாதவனாய் தன் நிலையைச் சொல்லி முதலாளியிடம் பணம் கேட்டான்.
"மாச கடைசினா போதும்..பொண்டாட்டிக்கு இடுப்பு வலி,புள்ளக்கு குண்டி வலினு வந்துரு.."என்று சொல்லி சிரித்தான்.அருகில் இருந்த சிலர்
தனது அன்றைய காரியங்களுக்காக ஒரு சிரிப்பை போலியாய் சிரித்தனர்.இங்கே மனித துன்பங்கள் தான், எவ்வளவு ஏளனத்திற்கு
உள்ளாகிவிட்டன.அதோடு அவன் முதலாளி நிற்காமல்,"நீ அரிப்பெடுத்து பெத்த பையனுக்கு,என் கல்லா காசு கேட்குதா?"என்று கேட்டுவிட்டான்.
அவன் கேட்டது அவனுக்கே உரித்தான மூர்க்கத்தை உண்டாக்கியிருக்கக்கூடும்.பக்கத்தில் இருந்த எடைக்கல்லை எடுத்து முதலாளியின் தலையில்
அடிக்கப் போய்விட்டான்.சும்மா இருப்பானா முதலாளி??"கூலிக்கார நாயே..என்னயாடா அடிக்க வர.." என்று அவனை உள்ளே கூட்டிச் சென்றான்.
அதற்கு முன் அவன் வாங்கிய அடியை,நீங்கள் பேருந்தில் செல்லும் போது பெண்களிடம் வம்பு செய்பவர்களுக்கும்..மக்களிடம் மாட்டிக்கொண்ட
திருடனுக்கும்...உதடுகள் பிளப்பட்டு,ரத்தம் சொட்ட சொட்ட...இப்படி எங்கோ நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.இப்படியாய் அவனுக்கான மனிதர்கள் அங்கே தொலைந்து போயிருந்தனர்.ஏன்..அந்த கோபாலும் கூட முதலாளியிடம் ஒரு வார்த்தை ஆதரவாய் பேசாது, கூட்டத்தில் ஒருவனாய் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறானே?
அவனை சொல்லி என்ன செய்ய?அவனும் என்னை போன்று பிழைக்க வந்தவன் தானே..எத்தனை முறை நானும் அவனாக எத்தனை கூட்டங்களில் நின்றிருப்பேன்.இப்படியாய் அவனுக்குள் தான்அந்த நேர்த்தில் எத்தனை கேள்விகள்,பதில்கள்,சமாதானங்கள்...
அங்கே வேலை செய்யும் இரண்டு-மூன்று நபர்களின் பெயர்களை காட்டமாக முதலாளி கூப்பிட்டான்.உள்ளே வந்தவர்கள் காதில் ஏதோ முனுமுனுத்தான்.எல்லாம்
இரண்டு-மூன்று நிமிடத்தில் முடிந்துவிட்டது.அவன் வலது புட்டத்தில் போடப்பட்டிருந்தது ஒரு பெரிய சூடு!அந்நேரத்தில் அவனுக்கு தோன்றியதெல்லாம்
அவமானத்தையும்,வலியையும் கூட மறச்சுடலாம்...ஆனா புட்டத்துல போட்ட சூட்டையும்,லுங்கி முழுக்க சொட்டுன ரத்தத்தையும் எங்கு போய்
மறைப்பது??மூனு நாளு வீட்டுக்கும் போகாமல்,பார்க் பெஞ்சுலயும் கூட சரியா படுக்கவும் முடியாமல்,அவன் கழுச்ச ராத்திரிகள் எவ்வளவு கொடூரமானது தெரியுமா?
இன்றோ எந்த அடையாளமுமின்றி, மீண்டும் பெயர் தெரியாத ஊரை நோக்கி பயணிக்கிறான்.

தனக்கென எந்த அடையாளத்தையும் உருவாக்கிக் கொள்ளத் தெரியாதவன் தான்,தன் நாடு,சாதியம்,மதம்,மொழி,குடிப்பெருமை..என்று ஏதேஏதோ அடையாளத்தை
கொண்டு பிழைக்க முயல்கிறான்.இதனால் மனித இனம் இதுவரை என்ன சாதித்துவிட்டது?மனிதம் இல்லாத மானிடத்தின் பெருமை நின்ற
இடம் உலகில் ஒன்றுண்டா?கற்காலம் முதல் இக்காலம் வரை மனிதம் போற்றாது மானிட ராஜ்ஜியம் நிலைத்ததுண்டா?எதற்கான அடையாளங்கள் இவை?
பல நேரங்களில் அந்த அடையாளங்களே நமக்கு சுமையாகி விடுவதும்,அதை மற்றவர்களிடம் இருந்து மறைப்பதிலும்
வாழ்க்கை தொலைந்துவிடுகிறது!!
இப்படி யோசனையில் மூழ்கி இருந்தவனின் ஆற்றாமையை,அங்கு அழும் குழந்தை தத்தெடுத்துக் கொண்டதாய் எண்ணினான்.அப்படி அவன் ஆற்றாமையை
தத்தெடுத்துக் கொண்ட குழந்தையின் முகம்,ஏனோ அந்த ரயில் பயணம் முழுவதும் ரங்கனை நினைவுப்படுத்திக் கொண்டே வந்தது.

-வ.பாரி இளஞ் செழியன்

எழுதியவர் : பாரி இளஞ் செழியன் (23-Sep-15, 12:17 pm)
சேர்த்தது : pari elanchezhiyan V
பார்வை : 169

மேலே