MSV அவர்களுக்கு கவிஞர் வைரமுத்துவின் இரங்கல் அஞ்சலி கவிதை

மெல்லிசை மன்னரின்
இசைமூச்சு நின்றுவிட்டது
என்று சொல்வதா?

இந்த நூற்றாண்டில்
அதிகமாக வாசிக்கப்பட்ட
ஆர்மோனியம் அடங்கிவிட்டது
என்று சொல்வதா?

ஒரு பாட்டுச் சக்ரவர்த்தி
மறைந்துவிட்டார் என்று சொல்வதா?

எங்கள் பால்ய வயதின் மீது
பால்மழை பொழிந்த மேகம்
கடந்துவிட்டது என்று சொல்வதா?

தமிழ்த் திரையிசைக்குப்
பொற்காலம் தந்தவரே!
போய்விட்டீரா என்று புலம்புகிறேன்

அரை நூற்றாண்டு காலமாய்த்
தமிழர்களைத் தாலாட்டித்
தூங்கவைத்த கலைஞன்
இன்று இறுதியாக உறங்கிவிட்டார்.

அவரது இசை
இன்பத்துக்கு விருந்தானது;
துன்பத்துக்கு மருந்தானது.

அவரது இசை
தமிழின் ஒரு
வார்த்தையைக்கூட உரசியதில்லை.

ஒரு நகைக் கலைஞன்
ஆபரணம் செய்வதற்காக
சுத்தத் தங்கத்தில்
கொஞ்சம் செம்பு கலப்பது மாதிரி
கர்நாடக இசையில்

மேற்கத்திய இசையைப்
பொருத்தமாய்க் கலந்து
புதுமை செய்தவர்.

அவர் தொடாத ராகமில்லை;
தொட்டுத் தொடங்காத பாடலில்லை.

அமிர்தம் பொழிந்த விரல்களே
காற்று மண்டலத்தையே
கட்டியாண்ட விரல்களே !
நீங்கள் தொட்ட உயரத்தை
யாரும் தொடமுடியாது.

பல தலைமுறைகளுக்கு
நீங்கள் நினைக்கப்படுவீர்கள்!!

“வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை எம்.எஸ்.வி”

அவரை இழந்து
வாடும் குடும்பத்திற்கும்,
உலகம் முழுவதும் உள்ள
அவரது ரசிகர்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுதியவர் : வைரமுத்து (23-Sep-15, 3:54 pm)
சேர்த்தது : Abitha
பார்வை : 2741

மேலே