அழகும் கொடூரமும்
ஓவியர் ஒருவர்,உலகிலேயே மனிதருள் ஒரு அழகான முகத்தையும் ,ஒரு கொடூரமான முகத்தையும் வரையவேண்டும் என்று ஆவல் கொண்டார்.முதலில் அழகான முகம் வரைவதற்காக அலைந்து தேட ஆரம்பித்தார்.நீண்ட நாட்கள் ஆகியும் அவர் எதிர் பார்த்த மனிதன் அகப்படவே இல்லை.திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.அழகான முகம் உடையவர்கள் குழந்தைகள்தானே!எனவே குழந்தைகளுள் அழகிய முகம் தேடினார்.
கடும் உழைப்பிற்குப் பின் அவர் எதிர் பார்த்தபடி ஒரு அழகான ஐந்து வயது சிறுவனைக் கண்டார்.மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற அவர் அக்குழந்தையின் பெற்றோர்களின் அனுமதி பெற்று அக்குழந்தையை தத்ரூபமாக வரைந்து முடித்தார்.பின்,கொடூர முகத்தையும் வரைந்து,இரண்டு படங்களையும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கலாம் என்று எண்ணினார்.
கொடூர முகத்தை எங்கு தேடலாம் என்று யோசித்த அவருக்கு ,சிறைச் சாலைகள் தான் அதற்குத் தகுந்த இடம் என்று தோன்றியது.அங்குதானே கொடுஞ்செயல் புரிந்தவர்கள் இருப்பார்கள்!ஆனால் இந்த வேலையும் நினைத்த அளவுக்கு எளிதானதாக இல்லை.அவர் மனதில் கருக் கொண்டிருந்த பாதகன் அவர் கண்ணில் படவில்லை.ஆண்டுகள் பல ஆகின.அவர் தனது முயற்சியைக் கைவிடவில்லை.இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் ஒரு சிறையில் அவர் எதிர் பார்த்த கொடூரமான முகம் தெரிந்தது.அவருடைய களைப்பு மறைந்து உற்சாகம் தொற்றிக் கொண்டது.
சிறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி அக்கொடியோனை வரைய ஆரம்பித்தார்.வரையும்போது அவனுடைய ஒத்துழைப்புக்கிடைக்க அவனுடன் பேச்சுக் கொடுத்தார்.அவன் ஊர்,பேர்,பெற்றோர் பற்றிய விபரங்கள் கேட்டு, அவன் சொன்னபோது, அவர் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்.ஏன்?அவன் வேறு யாருமில்லை.அழகான முகம் என்று எச்சிறுவனின் படத்தை வரைந்தாரோ,அதே சிறுவன், இன்று காலத்தின் கோலத்தில் மிகப் பெரிய குற்றவாளியாகக் கொடூரமாகக் காட்சி அளிக்கிறான்!
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அழகும் கொடூரமும் குடி கொண்டுள்ளன.அவன் சூழ்நிலைகள்தான் அவற்றில் ஒன்றை மிகைப்படுத்தியோ,குறைத்தோ காட்டுகிறது.
நன்றி ; தென்றல் தளம்
ஜெயராஜன்