அதிதி

இலக்கே இலாது
மிதந்து வெளியேறுகிறது
நிலவு.

அதன் பதற்றம்
புல்லின் நுனிகளில்
பனித்துளியாகிறது.

வானில் முளைத்த
தாமரைக் குளத்தில்
நட்சத்திரங்கள்
இதழ் விரிக்கின்றன.

காற்றின் மணம்
கடலின் காது மடல்களை
வருடியபடி...
கரையில் உதிர்ந்து கிடந்த
சொற்களை
ஆழங்களுக்குக் கடத்திச் செல்கிறது.

இலைகளின் ஓயாத
சிறகசைப்பில்
செவிகளைப் பொத்திய பூமி
நிழலாகி கூடடைகிறது
தனது இரவுக்குள்.

எல்லாம் இரசித்தபடி
அம்மாவின் இடுப்பில்
தன் மொழியில் பேசும் குழந்தையை
கற்பனை தீண்டிப் பார்க்க...

விலகிய நிலவு
பூமிக்கு வருகிறது
விருந்துண்ண
இந்தக் குழந்தையின்
அதிதியாக.

எழுதியவர் : rameshalam (24-Sep-15, 12:24 pm)
பார்வை : 92

மேலே