இது நீங்கள் படிப்பதற்கல்ல
புனித இடங்களுக்குப் போய்
குளித்துவந்தும்
என்மீது படர்ந்த
மதம் என்ற அழுக்கும்
சாதி என்ற துர்நாற்றமும்
இன்னும் போகவில்லை .
பூமிப்பந்தில் தேடுகிறேன்
புதிய பாவ தீர்த்தம்.
.............................................................
நீங்கள்
கணினியென்றும் கவிஞனென்றும்
கட்டுமான உயர மாடங்கள் என்றும்
மக்களென்றும் மாக்களென்றும்
நீரென்றும் தாரென்றும்
மலையென்றும் மாலையென்றும்
எதுவாகவும் சொல்லுங்கள்
நான் சொல்வேன் -
எல்லாமும் எல்லோரும்
இன்னமும் கொதித்துக் கொண்டிருக்கும்
அந்த எரிதழலில் வந்தவைகள்/வந்தவர்கள்.
.................................................................................................
நயாகரா நீர்வீழ்ச்சிக்கு
ஒருநாள் விடுமுறை வரும். .
நீரின்று தவித்த மனம்
நெடிதுயர்ந்த மரங்களைத் தேடி ஓடும்
மரங்கள் மானபங்கப் படுத்தப்பட்டு
கைவேறு கால் வேறாகவும் -
போர்த்தி இருந்த பச்சை ஆடை இழந்தும்
நிர்வாணமாகக் கிடந்தது...
தாகத்தில் ஜீவிதங்கள்
தாறுமாறாய் செத்து கிடக்கும்
தார் சாலையெங்கும்.
...................................................................